சர்ச்சையின் விளைவு; மன்செஸ்டர் யுனைடட்டில் இருந்து வெளியேறும் ரொனால்டோ

413

போர்த்துக்கல் முன்கள வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உடன் அமுலுக்கு வரும் வகையில் மன்செஸ்டர் யுனைடட் கழகத்தில் இருந்து விலகியுள்ளார்.

37 வயதான ரொனால்டோ அண்மையில் வழங்கிய சர்ச்சைக்குரிய நேர்காணல் ஒன்றில் அந்தக் கழகத்தை விமர்சித்ததோடு முகாமையாளர் எரிக் டென் ஹெக் மீது தமக்கு மரியாதை இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்தே தனது இந்த முடிவை எடுத்துள்ளார்.

சமரசர இணக்கத்துடனேயே ரொனால்டோ வெளியேறியதாக இரு தரப்பும் குறிப்பிட்டுள்ளன.

‘ஓல்ட் டிரபர்ட்டில் தனது இரு தவணைகள் முழுவதும் அவர் அளித்த பெரும் பங்களிப்புக்கு கழகம் நன்றிகூறுகிறது’ என்று மன்செஸ்டர் யுனைடட் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்காக, இங்கிலாந்தின் பிரீமியர் லீக் பருவத்திற்கு இடைவேளை வழங்கப்பட்டிருக்கும் நிலையில் முதல் முறை டென் ஹெக்கின் முகாமையின் கீழ் யுனைடட் அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது.

போர்த்துக்கல் அணி உலகக் கிண்ணத்தில் ரொனால்டோ தலைமையில் ஆடுவதோடு அந்த அணி வியாழக்கிழமை (24) எச் குழுவுக்காக கானாவை எதிர்கொள்ளவுள்ளது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அவர் ஊடகத்திடம் பேசி இருந்தார். அதில் கழகத்தால் தனக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

யுனைடட் அணிக்காக 346 போட்டிகளில் ஆடி 146 கோல்களை பெற்ற ரொனால்டோ அந்தக் கழகத்தை விட்டு வெளியேறி ரியல் மெட்ரிட், தொடர்ந்து ஜுவான்டஸ் அணிகளுக்காக ஆடினார். 11 ஆண்டுகளின் பின் அவர் 2021 ஓகஸ்டில் மீண்டும் யுனைடட் கழகத்துடன் இணைந்தார்.

யுனைடட் அணியுடனான வாரத்துக்கு 500,000 பௌண்ட் ஒப்பந்தம் முடிவதற்கு இன்னும் ஏழு மாதங்கள் இருக்கும்போதே அவர் அந்தக் கழகத்தில் இருந்து வெளியேறியுள்ளார். அவரது வெளியேற்றம் மற்றொரு அணியுடன் ஒப்பந்தமாவதற்கு சுதந்திரத்தை தந்துள்ளது.

‘மன்செஸ்டர் யுனைடட் உடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடித்துக் கொள்வதற்கு சமரச உடன்பாடு எட்டப்பட்டது’ என்று ரொனால்டோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘நான் மன்செஸ்டர் யுனைடட்டையும் ரசிகர்களையும் விரும்புகிறேன். அது ஒருபோது முடிவுக்கு வராது. என்றாலும், புதிய சவால் ஒன்றை ஏற்க இது சரியான தருணம் என்று உணர்கிறேன். எஞ்சிய பருவம் மற்றும் எதிர்காலத்தில் வெற்றி பெற அணிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றும் அவர் தெரிவித்தார்.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<