சவூதி அரேபியாவின் அல் நாசிர் கழகத்திற்கு 2025ஆம் ஆண்டு வரை ஆடுவதற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒப்பந்தமாகியுள்ளார்.
மன்செஸ்டர் யுனைடட் கழகத்தை விமர்சித்து சர்ச்சைக்குரிய பேட்டி ஒன்றை வழங்கிய பின் அந்தக் கழகத்தில் இருந்து வெளியேறிய போர்த்துக்கல் அணித்தலைவர் ரொனால்டோ ஒரு சுதந்திர வீரராக இருந்தார்.
எனினும், அவர் தற்போது இணைந்துள்ள கழகத்தின் மூலம் வரலாற்றில் கால்பந்து வீரர் ஒருவரின் மிகப்பெரிய சம்பளமாக ஆண்டுக்கு 75 மில்லியன் டொலர்கள் வரை பெறவுள்ளார்.
>> இலங்கை கரப்பந்தாட்ட அணிக்கு மற்றுமொரு ஆசிய பதக்கம்
‘வேறு நாடு ஒன்றில் புதிய கால்பந்து லீக் ஒன்றில் அனுபவத்தை பெற ஆர்வமாக உள்ளேன்’ என்று 37 வயது ரொனால்டோ தெரிவித்துள்ளார். ‘ஐரோப்பிய கால்பந்தில் அதிர்ஷ்டவசமாக நான் நினைத்த அனைத்தையும் வென்றேன். ஆசியாவில் எனது அனுபவத்தை பகிர இது சரியான நேரம் என்று உணர்கிறேன்’ என்றும் ரொனால்டோ கூறினார்.
சவூதி ப்ரோ லீக்கில் ஒன்பது முறை சம்பியனான அல் நாசிர், இந்த ஒப்பந்தம் வரலாற்று முக்கியமானது என்று வர்ணித்துள்ளது. ‘எமது லீக், நாடு மற்றும் எதிர்காலத் தலைமுறையினர், சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு சிறந்ததாக அமைய இது உத்வேகம் தரும்’ என்று அந்தக் கழகம் மேலும் தெரிவித்துள்ளது.
>> ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனரில் தரூஷ, நேத்ரா சிறந்த வீரர்களாக முடிசூடல்
எனினும், இந்தக் கோடை காலத்தில் மற்றொரு சவூதி அரேபிய கழகத்தில் இணைய இதனை விட பெரும் தொகைக்கான ஒப்பந்தம் ஒன்றை நிராகரித்த ரொனால்டோ தொடர்ந்தும் யுனைடட் கழகத்தில் ஆடுவதாக குறிப்பிட்டிருந்தார்.
எனினும், கடந்த நவம்பரில் ரொனால்டோ அளித்த பேட்டியில், யுனைடட் கழகத்தால் தாமக்கு துரோகம் இழைக்கப்பட்டதாகவும், முகாமையாளர் எரிக் டென் ஹேக் தம்மை மதிப்பதில்லை என்றும் கழகத்தில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுவதாகவும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
யுனைடட் கழகத்திற்காக 346 போட்டிகளில் 145 கோல்களைப் பெற்ற ரொனால்டோ, ஜூவன்டஸ் கழகத்தில் இருந்து 2021 ஓகஸ்டில் 11 ஆண்டுகளின் பின் மீண்டும் யுனைடட் கழகத்திற்கு இணைந்தார். முன்னதாக அவர் ரியல் மெட்ரிட்டில் நீண்ட காலம் ஆடினார்.
இதில் அவர் வாரத்திற்கு 500,000 பௌண்ட் ஒப்பந்தமாக ஏழு மாதங்கள் வரை யுனைடட் கழகத்தில் இணைந்திருந்த நிலையிலேயே பரஸ்பர உடன்படிக்கை ஒன்றின் கீழ் அந்தக் கழகத்தில் இருந்து விலகியுள்ளார்.
அவர் கழகத்தில் இருந்து வெளியேறி அடுத்த நாளில், எவர்டன் ரசிகர் ஒருவரின் கைபேசியை தட்டிவிட்டதற்காக ரொனால்டோவுக்கு இரண்டு உள்ளூர் போட்டிகளில் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஏப்ரலில் குடிசன் பார்க்கில் நடந்த எவர்டன் அணிக்கு எதிரான போட்டியில் யுனைடட் தோற்ற பின்னரே இந்த சம்பவம் இடம்பெற்றது.
உள்ளூர் மட்டத்தில் இங்கிலாந்து அல்லது வெளிநாட்டில் நடக்கும் எந்த ஒரு போட்டியிலும் அவர் இணையும் புதிய கழகத்துடன் இந்தத் தடை அமுலில் இருக்கும். எனினும் பிராந்திய மட்டத்தில் இந்தத் தடை பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டாரில் நடந்த உலகக் கிண்ண போட்டியில் போர்த்துக்கல் அணிக்காக ஆடிய நிலையில் ரொனால்டோ அண்மையிலேயே அந்தத் தொடரை நிறைவு செய்தார். தனது எதிர்காலம் பற்றி முடிவெடுக்கும் முன்னர் அவர் ரியல் மெட்ரிட்டின் வல்டெபெபர் பயிற்சி மைதானத்தில் தனியாக பயிற்சி பெற்று வந்தார்.
ரியாதை தளமாகக் கொண்டு ஆடும் அல் நாசிர் கழகம் நாட்டின் முன்னணி லீக் பட்டத்தை அதிக முறை வென்ற கழகங்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<