இந்திய முன்னாள் வீரரை தாக்கிய டெல்லி வீரருக்கு வாழ்நாள் தடை?

349
Image courtesy - The Telegraph

டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தேர்வு குழுத் தலைவர் அமித் பண்டாரி மீதான தாக்குதலுக்கு காரணமான இளம் வீரருக்கு வாழ்நாள் தடை விதிக்க டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

சையது முஸ்தாக் அலி டி-20 போட்டித் தொடருக்கான டெல்லி அணி வீரர்களின் பயிற்சிமுகாம் டெல்லியில் உள்ள ஸ்டீபன் கல்லூரி மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை (11) நடைபெற்றது.

இதன்போது வீரர்களின் பயிற்சியை டெல்லி கிரிக்கெட் சங்க தேர்வுக் குழு தலைவரும், இந்திய கிரிக்கெட் அணிக்காக இரண்டு ஒருநாள் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான அமித் பண்டாரி பார்த்துக்கொண்டு இருந்தார்.

அப்போது மைதானத்துக்குள் நுழைந்த 2 பேர் அமித் பண்டாரியுடன் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.

ஜோ ரூட்டை விமர்சித்த ஷனோன் கேப்ரியல் மீது ஐ.சி.சி அதிரடி நடவடிக்கை

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்ட் லூசியாவில் …

சற்று நேரத்தில் அடையாளம் தெரியாத 15 பேர் கொண்ட கும்பல் மீண்டும் மைதானத்துக்குள் நுழைந்து அமித் பண்டாரியை இரும்பு கம்பி, ஹொக்கி மட்டை மற்றும் சைக்கிள் செயினால் சரமாரியாக தாக்கினர். அதனைத் தடுக்க முயன்றவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுத்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

தாக்குதலில் தலை மற்றும் உடலின் பல பகுதிகளில் காயமடைந்த 40 வயதான அமித் பண்டாரி அருகில் உள்ள வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். தலையில் 4 தையல் போடப்பட்ட அவர் அன்றைய தினம் மாலை வீட்டுக்குச் சென்றார்.

சமீபத்தில் நடைபெற்ற 23 வயதுக்கு உட்பட்ட டெல்லி அணி தேர்வில் அனுஜ் டேதா என்ற இளம் வீரர் அணிக்கு தேர்வு செய்யப்படாததால் எழுந்த பிரச்சினையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும், குறித்த தாக்குதல் சம்பவம் குறித்து டெல்லி பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன், நடந்த சம்பவம் குறித்து அமித் பண்டாரியிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் அனுஜ் டேதா உள்ளிட்ட இருவரை டெல்லி பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு இந்திய அணியின் முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அவுஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக பெட் கம்மின்ஸ்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை (CA) தங்களது கிரிக்கெட் …

இந்த நிலையில் டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரஜத் சர்மா இந்த சம்பவம் தொடர்பில் நேற்று (13) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், ”பண்டாரியை சந்தித்தேன், அவர் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். மருத்துவர்கள் அவரை 24 மணி நேரம் முன்னெச்சரிக்கையாக மருத்துவ கண்காணிப்பில் வைக்க சொல்லியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தியவர்கள் அனுஜ்ஜை அணியில் சேர்க்க சொல்லி மிரட்டியுள்ளனர். அணித்தேர்வில் அதிருப்தியடைந்த வீரரின் செயலா இது என்பதை ஆராய்ந்து வருகிறோம். இந்த விவகாரத்தில் சேவாக், கம்பீர் ஆகியோரின் யோசனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, நாங்கள் அனுஜ் டேதாவுக்கு வாழ்நாள் தடை விதிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். இந்த பிரச்சினை குறித்து டெல்லி ஆளுநர் அனில் பைஜாலை சந்தித்து பேசினேன். இந்த விடயத்தில் டெல்லி பொலிசார் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுநனரிடம் வற்புறுத்தினேன் என்றார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் டெல்லி அணியின் முன்னாள் தலைவரான கௌதம் கம்பீரும் கலந்துகொண்டிருந்தார்.

இதுஇவ்வாறிருக்க, குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட வீரருக்கு ஆயுட்கால தடை விதிக்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக், நெஹ்ரா, தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் உள்ளிட்ட பலரும் டுவிட்டர் மூலம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<