இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கிண்ணத் தொடரில் விளையாடிய இலங்கை அணி 9வது இடத்தை பெற்று 2026ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சம்பியன்ஷ் கிண்ணத் தொடருக்கான வாய்ப்பை இழந்திருந்தது.
உலகக்கிண்ணத்தில் மோசமான பிரகாசிப்பை வெளிப்படுத்திய இலங்கை அணி நாட்டுக்கு புறப்பட்டுவந்த நிலையில், நேற்றைய தினம் (12) ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தது.
>> ICC இன் உறுப்புரிமையை இழந்த இலங்கை கிரிக்கெட்
குறித்த ஊடக சந்திப்பில் இலங்கை அணியின் ஆலோசகராக செயற்பட்டுவரும் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன கருத்து வெளியிட்டிருந்தார். இதில் இலங்கை அணி சம்பியன்ஷ் கிண்ணத் தொடருக்கு தகுதிபெறாமை தொடர்பில் கருத்து தெரிவித்த இவர் வீரர்கள் செய்த தவறுகள் தோல்விகளுக்கு காரணம் என சுட்டிக்காட்டினார்.
“நாம் இந்த தொடரை நிறைவுசெய்த இடம் தொடர்பில் கவலையளிக்கிறது. தனிப்பட்ட ரீதியில் 6 அல்லது 7ம் இடத்தில் தொடரை நிறைவுசெய்ய முடியும் என நினைத்திருந்தேன். வெற்றிபெற வாய்ப்பிருந்த சில போட்டிகளில் நாம் தோல்வியடைந்தோம்.
வீரர்களின் தவறுகளால் இந்த தோல்விகளை சந்தித்திருந்தோம். குறிப்பிட்ட 30 ஓட்டங்களை (சம்பியன்ஷ் கிண்ணத்துக்கு தகுதிபெறுவதற்கு) நியூசிலாந்து போட்டியின்றி ஏனைய போட்டிகளிலும் பெறுவதற்கு எமக்கு வாய்ப்பிருந்தது.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் நாம் சிறந்த இடத்தில் இருந்தும் துடுப்பாட்டத்தை சிறப்பாக நிறைவுசெய்யவில்லை. ஆப்கானிஸ்தான் போட்டியிலும் இவ்வவாறு நடந்தது. அப்படி பார்க்கும் போது பல போட்டிகளில் குறித்த ஓட்டங்களை நாங்கள் பெற்றிருக்க முடியும்.
முக்கியமாக ஏன் எம்மால் இந்த விடயங்களை செய்ய முடியவில்லை என்ற கேள்வி இருக்கிறது. ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று அனுபவத்தில் குறைபாடு இருக்கிறது. அதேநேரம் வீரர்கள் செய்த தவறுகளும் இருக்கின்றன. குறித்த தவறுகளை வீரர்கள் அறிந்திருப்பார்கள் என நான் நினைக்கிறேன்.
>> ஐசிசியின் உயரிய விருதை பெறவுள்ள அரவிந்த டி சில்வா
ஆனால் இதுதான் எம்மிடமுள்ள பலம் வாய்ந்த அணியாகும். இந்த அணியைதான் கடந்த 16 மாதங்களில் நாம் தயார்செய்துவந்தோம். இந்த வீரர்கள் முன்னேற்றம் அடைந்திருந்ததை எம்மால் பார்க்க முடிந்தது. எனினும் சரிசெய்துக்கொள்ள வேண்டிய அதிகமான விடயங்களும் உள்ளன. சர்வதேச அணிகளுடன் விளையாடும் போது குறித்த தவறுகளை நாம் கட்டாயமாக நிவர்த்திசெய்துக்கொள்ள வேண்டும்.
பந்து வீச்சாளர்களை எடுத்துக்கொண்டால் கட்டுப்பாட்டுடன் பந்தினை வீசுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். எம்முடைய அதிகமான துடுப்பாட்ட வீரர்கள் 40 ஓட்டங்கள் அளவில் பெற்று ஆட்டமிழந்தனர். ஏனைய அணிகளை பொருத்தவரை குறித்த இடங்களில் உள்ள வீரர்கள் எவ்வாறு ஓட்டங்களை குவிக்கின்றனர் என்பதை நாம் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். இந்த விடயங்கள் மேலும் விளையாடும் போதுதான் கற்றுக்கொள்ள முடியும்” என்றார்.
அதேநேரம் இந்திய ஆடுகளங்களில் எமது சுழல் பந்துவீச்சாளர்கள் பிரகாசிக்க முடியாமைக்கு இலங்கையில் உள்ள ஆடுகளங்களும் ஒரு காரணம் என்பதையும் இவர் குறிப்பிட்டார். இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் துடுப்பாட்டத்துக்கு அதிகமான சாதகங்களை கொண்டது எனவும், அங்கு பந்துகளை சுழல வைப்பதற்கு அதிகமான சக்தியை பயன்படுத்தி பந்துகளை வீச வேண்டும்.
>> தோல்வியுடன் உலகக் கிண்ணத்தை நிறைவு செய்த இலங்கை அணி
இலங்கை ஆடுகளங்களை பொருத்தவரை பந்துகள் இலகுவாக சுழல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு இலகுவாக இருக்கும். எனவே இந்தியாவை போன்ற ஆடுகளங்களை நாமும் உருவாக்கி, முதற்தர போட்டிகளில் விளையாட வேண்டும்.
குறிப்பாக சொந்த நாட்டில் அதிகமான போட்டிகளில் விளையாடுவதால் அதற்கேற்றவாறு ஆடுகளங்களை நாம் தயார் செய்து விளையாடி வருகின்றோம். தற்போது நாம் ஆடுகளங்கள் விடயத்தில் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும் என மஹேல ஜயவர்தன மேலும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை தசுன் ஷானகவை தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு எந்த அழுத்தமும் இருக்கவில்லை எனவும், அவர் உபாதை காரணமாகவே அணியிலிருந்து நீக்கப்பட்டார் என ஜயவர்தன குறிப்பிட்டார். அதுமாத்திரமின்றி அவர் குணமடைந்தால் மீள அணியில் இணைக்க முடியும் என்ற காரணத்திற்காகவே அவர் தொடர்ந்தும் அணியுடன் இருந்தார் எனவும் இவர் குறிப்பிட்டார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<