மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு கொள்கை அடிப்படையில், ஒப்புதலை வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 வைரஸ் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில், உயிரியல் பாதுகாப்பு முறையில் போட்டிகளை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
>> பாக். முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக்குக்கு புதிய பதவி
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கு, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை ஒப்புதலை வழங்கியுள்ளது என கிரிக்கெட் சபையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் உயர்மட்ட குழு, கிரிக்கெட் சபையின் மருந்துவ குழு மற்றும் கிரிக்கெட் சார்ந்த அங்கத்தவர்கள் என அனைவரும், இங்கிலாந்து கிரிக்கெட் சபையுடன் மேற்கொண்ட காணொளி மூலமான தொடர்பாடல் மூலம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்து கிரிக்கெட் சபை 2 மைதானங்களை பரிந்துரை செய்துள்ளது. ஹெம்ஷையரில் உள்ள ஆகேஷ் போவ்ல் மற்றும் லான்ஸஸ்ஷையரில் உள்ள ஓல்ட் ட்ரெபோர்ட் ஆகிய மைதானங்களில் தொடரை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன், மேற்கிந்திய தீவுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிரிக்கெட் சபை தற்போது அனுமதிகள் மற்றும் தளபாடங்கள் தொடர்பான விடயங்களை கவனத்தில் கொண்டுவருகின்றது. அதேநேரம், கரீபியன் தீவுகளில் உள்ள பல்வேறு அரசாங்கங்களிடமிருந்து வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் நடமாட்டங்களுக்கான அனுமதியையும் பெறவுள்ளோம்.
அதுமாத்திரமின்றி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வீரர்களை தனி விமானத்தில் அழைத்துச் சென்று கொவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான தொடர், இரசிகர்கள் இல்லாத மூடப்பட்ட மைதானங்களில் நடைபெறவுள்ளது. குறித்த இந்த மூடப்பட்ட மைதானம் தொடர்பிலான தகவல்களையும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை பெற்று, அது தொடர்பில் ஆராய்ந்துள்ளதாகவும், கிரிக்கெட் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்த மாதம் முதற்பகுதியில் இங்கிலாந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<