எதிர்வரும் 2022ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்ஜோவ் நகரில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக ஆசிய ஒலிம்பிக் சம்மேளம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்த மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டு விழா நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன் 19ஆவது அத்தியாயம் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ளது.
2019 தெற்காசிய விளையாட்டு விழாவில் மீண்டும் கிரிக்கெட் இணைப்பு
தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால் 2 வருடங்களுக்கு,,,,,,
இந்த நிலையில், ஆசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் பொதுக்குழுக் கூட்டம் பொங்கொங்கில் நேற்று முன்தினம் (03) இடம்பெற்றது. இதில், ஆசிய விளையாட்டில் கிரிக்கெட்டை இணைத்துக் கொள்வது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டதுடன், அதற்கான ஒப்புதலையும் ஆசிய ஒலிம்பிக் சம்மேளனம் அளித்துள்ளது.
இதற்குமுன் 2010 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் கிரிக்கெட்டும் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தது. இதன்பின் சர்வதேச போட்டிகளை காரணம் காட்டி இந்திய கிரிக்கெட் சபை ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு அணியை அனுப்பவில்லை. இதனால், கடந்த வருடம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் இருந்து கிரிக்கெட் நீக்கப்பட்டது.
ஆனால், கிரிக்கெட்டை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2022ம் ஆண்டு சீனாவின் ஹாங்ஜோவ் நகரில் நடைபெறவுள்ள 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட்டை இணைக்க ஆசிய ஒலிம்பிக் சம்மேளனம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது குறித்து ஆசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் கௌரவ துணைத் தலைவர் ரன்திர் சிங் கூறுகையில், ”2022ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவு ஆசிய ஒலிம்பிக் சம்மேளன பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதன்படி, சீனாவின் ஹாங்ஜோவ் நகரில் கிரிக்கெட் விளையாடப்படும்” எனத் தெரிவித்தார்.
ஒருநாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த இந்திய அணி
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ….
2022ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் இணைத்துக் கொள்ளப்பட்டு இருப்பதால், பெரும்பாலும் டி-20 கிரிக்கெட் விளையாடப்படுவதற்கே அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன், முதற்தடவையாக ஆசிய – பசுபிக் நாடுகளில் ஒன்றாக அவுஸ்திரேலியாவுக்கு ஆசிய விளையாட்டு விழா கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு விசேட அழைப்பு விடுக்கவும் ஆசிய ஒலிம்பிக் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. எனினும், இதுதொடர்பிலான இறுதி அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
கடந்த 2014ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான கிரிக்கெட்டில் இலங்கையும், மகளிருக்கான கிரிக்கெட்டில் பாகிஸ்தானும் தங்கப் பதக்கங்களை வென்றன. அதற்குமுன் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் ஆடவர் பிரிவில் பங்களாதேஷும், மகளிர் பிரிவில் பாகிஸ்தானும் தங்கப் பதக்கங்களை வென்றன.
இதுஇவ்வாறிருக்க, கடந்த 1998ஆம் ஆண்டு மலேஷியாவில் நடைபெற்ற பெதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவில் கிரிக்கெட் விளையாடப்பட்டது. இதில் இலங்கை, இந்தியா உள்ளிட்ட 16 நாடுகள் பங்கேற்றிருந்தன. எனினும், ஷோன் பொலக் தலைமையிலான தென்னாபிரிக்கா தங்கப் பதக்கத்தையும், ஸ்டீவ் வோஹ் தலைமையிலான அவுஸ்திரலியா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றன.
2022 பொதுநலவாய நாடுகளின் போட்டிகளிலிருந்து கிரிக்கெட் நீக்கம்
2022ஆம் ஆண்டு ….
இதனிடையே, பிசிசிஐ அமைப்பு பல்வேறு நாடுகளுக்கு இந்திய அணியை அனுப்பும் பயணத்திட்டத்தை வைத்திருப்பதால், ஆசிய விளையாட்டு விழாவில் கிரிக்கெட் விளையாட்டை இணைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பினை வெளியிட்டு வந்தது. இதன்காரணமாக, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கு இந்திய அணியை அனுப்ப இந்திய கிரிக்கெட் சபை மறுத்துவிட்டது. இதற்காக ஆசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் ஷேக் அஹமது அல் பஹத் அல் சபாப், இந்திய கிரிக்கெட் சபையை கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில், 2022 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணியை பங்குபற்றச் செய்யுமாறு இந்திய கிரிக்கெட் சபையிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்தின் ராஜீவ் மெஹ்தா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிரிக்கெட் விளையாட்டை உலகம் முழுவதும் பிரபல்யப்படுத்தும் நோக்கில் 2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏன்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை இணைத்துக் கொள்வதற்கு ஐ.சி.சி முயற்சித்து வருகின்றது.
அதேபோல, 2022ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பெர்மிங்ஹமில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டில் மகளிருக்கான டி-20 போட்டியை இணைத்துகொள்ள ஐ.சி.சி ஏற்கனவே விண்ணப்பத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<