2022 பொதுநலவாய நாடுகளின் போட்டிகளிலிருந்து கிரிக்கெட் நீக்கம்

599

2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் போட்டிகளிலிருந்து கிரிக்கெட் விளையாட்டை நீக்குவதற்கு பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுக் குழு தீர்மானித்துள்ளது.

2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குறித்த போட்டித் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளை நடாத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும் அறிவிக்கப்பட்டது. எனினும், குறித்த போட்டிகள் இடம்பெறவுள்ள ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டித் தொடர் மற்றும் நெட்வெஸ்ட் மற்றும் கரீபியன் பிரீமியர் லீக் T-20 தொடர்கள் இடம்பெறவுள்ளதால், சர்வதேச கிரிக்கெட் பேரவை போட்டி அட்டவணையை மாற்றுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

அதிரடி நட்சத்திரங்களுடன் கிரிக்கெட் உலகைக் கலக்க வரும் T-10 போட்டி

இதனையடுத்து 2022ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவிலிருந்து கிரிக்கெட் போட்டிகளை இணைத்துக் கொள்ளும் திட்டத்தை அவ் அமைப்பு கைவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக பெண்களுக்கான T-20 போட்டிகளை நடாத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி அளித்திருந்த போதிலும், ஆண்களுக்கான போட்டிகளை நடாத்துவதற்கு எந்தவொரு இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் கொள்கைக்கு அமைய விளையாட்டில் பாலின சமத்துவக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ள காரணத்தால் பெரும்பாலும் கிரிக்கெட் விளையாட்டு இடம்பெறுவது ஆரம்பத்திலிருந்து சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த போட்டித் தொடர் முதற்தடவையாக தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதும், பொருளாதார நெருக்கடி, டர்பன் நகரில் உரிய வசதிகள் இல்லாமை மற்றும் போதியளவு அனுசரணையாளர்கள் கிடைக்காமை போன்ற காரணங்களால் அப்போட்டிகளை நடாத்துவதிலிருந்து விலகிக் கொள்வதாக தென்னாபிரிக்காவின் விளையாட்டுத்துறை அமைச்சு, பொதுநலவாய நாடுகள் விளையாட்டு போட்டிகளின் அமைப்புக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, குறித்த போட்டிகளை நடாத்துவதற்கு பிரித்தானியாவின் லிவர்பூல் மற்றும் பேர்மிங்ஹம் ஆகிய நகரங்கள் தற்போது விண்ணப்பிக்கவுள்ள நிலையில், உலக கிரிக்கெட்டில் பிக் 3 என அழைக்கப்படுகின்ற நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து கிரிக்கெட் சபை, அனுமதியளித்தால் 2022ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவில் கிரிக்கெட் விளையாட்டு இடம்பெறலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், வோர்க்ஷெயார் பிராந்திய கிரிக்கெட் கழகத்தின் நிறைவேற்று அதிகாரி இதுதொடர்பில் கருத்து வெளியிடுகையில், நாங்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை ஏற்கனவே தயாரித்துவிட்டோம். எனவே 2022 பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவில் கிரிக்கெட் இடம்பெறுவது சந்தேகம். எனவே பெண்கள் கிரிக்கெட்டை மாத்திரம் நடத்தாமல் பாலின சமத்துவத்துக்கு முன்னுரிமை கொடுத்து ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளை இணைத்துக்கொள்ள அவ்வமைப்பு .சி.சியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றார்.

சக நாட்டு வீரரின் சாதனைக்கு முட்டுக்கட்டையாக இருந்த பொல்லார்ட்

ஆனால் கிரிக்கெட் இன்போ இணையத்தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுநலவாய நாடுகள் விளையாட்டுக்குழு, குறித்த ஆண்கள் கிரிக்கெட் அணிகளின் பங்கேற்பு தொடர்பில் .சி.சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 1998ஆம் ஆண்டு மலேஷியாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவில் முதற்தடவையாக கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றதுடன், அதில் இங்கிலாந்தைத் தவிர டெஸ்ட் அந்தஸ்த்து பெற்ற அனைத்து நாடுகளும் கலந்துகொண்டன.

அது 50 ஓவர்களைக் கொண்ட போட்டித் தொடராக இடம்பெற்றது. அதன் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாபிரிக்க அணி தங்கப் பதக்கம் வென்றிருந்ததுடன், இலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து அணி வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தது.

பிரித்தானிய காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்து சுதந்திரமடைந்த சுமார் 50இற்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் இவ்விளையாட்டு விழாவானது உலகின் 2ஆவது ஒலிம்பிக் போட்டிகள் என வர்ணிக்கப்படுகின்றது. 4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற இவ்விளையாட்டு விழாவின் 21ஆவது அத்தியாயம் அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.