இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் வீரர்கள் தெரிவு தொடர்பில் முன் வைத்த விமர்சனங்களுக்கு, ப்ரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை ஆடவர் கிரிக்கெட் தேர்வாளர்கள் குழு பதில் வழங்கியிருக்கின்றது.
>> சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அஞ்செலோ மெதிவ்ஸின் ஆட்டமிழப்பு
விளையாட்டுத்துறை அமைச்சரின் விமர்சனங்களில் ஒன்றாக கடந்த 4 வருடங்களில் இலங்கை அணியின் மோசமான ஆட்டத்திற்கு காரணம் தேர்வாளர்களே எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விமர்சனத்திற்கு கடிதம் ஒன்றின் வாயிலாக பதில் வழங்கியிருக்கும் ப்ரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான தேர்வாளர்கள் குழு தற்போதிருக்கும் தேர்வாளர்கள் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்னரே நியமிக்கப்பட்டவர்கள் எனக் குறிப்பிட்டிருக்கின்றது.
இதேவேளை கடந்த இரண்டரை வருடங்களில் தற்போதிருக்கும் தேர்வுக்குழு மூலம் தெரிவு செய்யப்பட்ட அணியானது முன்னர் இருந்த தேர்வாளர்களை விட சிறப்பான விடயங்களைச் செய்திருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கின்றது. அதில் தற்போதைய தெரிவுக் குழு மூலம் இலங்கை அணிக்கு கிடைத்த சில முக்கிய வெற்றிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
- 30 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவினை இருதரப்பு ஒருநாள் தொடர் ஒன்றில் வீழ்த்தியமை
- ஆசியக் கிண்ணத் தொடர் ஒன்றை 8 வருடங்களின் பின்னர் வெற்றி கொண்டமை
- ஆசியக் கிண்ணத் தொடர் ஒன்றில் 9 வருடங்களின் பின்னர் இரண்டாம் இடம் பெற்றமை
- ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 5ஆம் இடம் பெற்றமை
- இந்தியாவை T20I தொடர் ஒன்றில் 7 வருடங்களில் வீழ்த்தியமை
- உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றினை வெற்றி கொண்டமை
அதேநேரம் 2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணியுடனான மோசமான தோல்வி தொடர்பிலும் விளக்கம் வழங்கியிருக்கும் தேர்வாளர்கள் குழாம், குறிப்பிட்ட நிலைமைகளுக்கு ஏற்ப சமநிலையான முறையில் தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் குழாமே குறிப்பிட்ட போட்டியில் பங்கேற்றதாக கூறியிருக்கின்றது.
>> சாதனை வெற்றியுடன் உலகக் கிண்ண அரையிறுதியில் இந்தியா
இதேநேரம் போட்டியொன்றுக்கான அணித்தேர்வு தேர்வாளர்கள் மாத்திரமின்றி அணித்தலைவர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் போன்ற தரப்பினர் இணைந்து எடுக்கும் கூட்டு முடிவு எனக் குறிப்பிட்டுள்ளதோடு, மோசமான முடிவுகளுக்கு தெரிவுக்குழு மாத்திரமே தனிப்பொறுப்பாக முடியாது என சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<