2019 தெற்காசிய விளையாட்டு விழாவில் மீண்டும் கிரிக்கெட் இணைப்பு

589

தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால் 2 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்ற தெற்காசிய விளையாட்டு விழாவை திட்டமிட்டபடி அடுத்த வருடம் (2019) நேபாளத்தில் நடத்துவதற்கு தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இவ்விளையாட்டு விழா நேபாளத்தின் தலைநகர் கத்மண்டு மற்றும் அந்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான பொக்காரவில் நடைபெறவுள்ளது.

மாய சுழலினால் தென்னாபிரிக்காவை வைட் வொஷ் செய்த இலங்கை

கொழும்பு SSC சர்வதேச மைதானத்தில் நடைபெற்று..

13ஆவது தடவையாக நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதுடன், முதற்தடவையாக வான் சறுக்குப் போட்டிகளும் (Paragilding) இணைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.   

முன்னதாக 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழா, கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவின் குவஹாத்தியில் நடைபெற்றது. அடுத்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு நேபாளத்துக்கு வழங்கப்பட்டது.

எனினும், குறித்த போட்டித் தொடர் அடுத்த வருடம் நடைபெறவிருந்தாலும், நேபாள அரசு அதற்கான நிதியினை ஒதுக்குவதற்கு முன்வராமை, அந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்தில் நிலவிய முரண்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் போட்டிகளை நடத்தும் சந்தர்ப்பத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனம் கடந்த வருடம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனையடுத்து, தெற்காசிய விளையாட்டு விழாவை எதிர்வரும் 2020ஆம் ஆண்டு இலங்கையில் நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சும், தேசிய ஒலிம்பிக் சம்மேளனமும் அவதானம் செலுத்தியிருந்தது.

இந்த நிலையில், நேபாள அரசாங்கத்தின் தலையீட்டினால் ஏற்கனவே திட்டமிட்டபடி தெற்காசிய விளையாட்டு விழாவை தாமே நடத்தவுள்ளதாக அந்நாட்டு ஒலிம்பிக் சங்கம், தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது.

ஆசிய கனிஷ்ட கரப்பந்தாட்டத் தொடரில் இலங்கை இரண்டாவது சுற்றுக்கு தகுதி

பஹ்ரைனின் மனாமா நகரில் நடைபெற்று வருகின்ற 20..

இதன்படி, தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம் (21) நேபாள தலைநகர் கத்மண்டுவில் இடம்பெற்றது. இதில் தெற்காசிய நாடுகளின் ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதில், இலங்கை சார்பாக தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் மற்றும் பொதுச் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

எனவே, தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்துவதற்கு நேபாள அரசு அனுமதி வழங்கிய நிலையில், அதற்கான அனுமதியை தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனம் இந்த கூட்டத்தொடரின் போது வழங்கியது.

  • நேபாளத்தில் இடம்பெற்ற தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

2010இல் டாக்காவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் 23 விளையாட்டுகளும், 2016 இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் 22 விளையாட்டுகளும் இடம்பெற்றன. இதன்படி, அடுத்த வருடம் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் 27 விளையாட்டுகள் இடம்பெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதில் கிரிக்கெட் மற்றும் வான் சறுக்கு ஆகிய போட்டிகளை அடுத்த வருடம் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் இணைத்துக் கொள்வதற்கான அனுமதியும் இதன்போது கிடைத்தது. இதன்படி, எட்டு வருடங்களுக்குப் பிறகு தெற்காசிய விளையாட்டு விழாவில் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளது.  

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து குணதிலக்க இடைநிறுத்தம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் தனுஷ்க…

முன்னதாக 2010ஆம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் 21 வயதுக்குட்பட்ட பிரிவினருக்காக கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றது. இதன் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி பங்களாதேஷ் அணி தங்கப் பதக்கத்தை வென்றது. இந்திய கிரிக்கெட் அணி இதில் பங்கேற்கவில்லை.

எனினும், இறுதியாக 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் கிரிக்கெட் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

  • இலங்கையை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்திய பங்களாதேஷ் அணி

இதேநேரம், தெற்காசிய விளையாட்டு விழாவில் முதற்தடவையாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பராக் லய்டிங் எனப்படுகின்ற வான் சறுக்கு விளையாட்டானது ஒரு பொழுதுபோக்கு மிக்க, சாகச விளையாட்டாகும். நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் இருந்து சுமார் 200 மைல் கிலோமீற்றர் தூரத்தில் உள்ள அதிக மலைகளைக் கொண்ட பிரதேசமான பொக்காரவில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதன்படி, 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் கூடைப்பந்தாட்டம், குத்துச்சண்டை, அம்பெய்தல், பெட்மிண்டன், சைக்கிளோட்டம், வாள் சண்டை, கால்பந்து, கைப்பந்து, ஜுடோ, கராத்தே, கபடி, துப்பாக்கிச் சுடுதல், ஸ்குவாஷ், நீச்சல், தைக்கொண்டோ, டென்னிஸ், மேசைப்பந்து, மூன்று அம்ச போட்டிகள், கரப்பந்தாட்டம், பளுதூக்கல், மல்யுத்தம், வூஷு, கொக் – கோ, கோல்ப், கிரிக்கெட் மற்றும் வான் சறுக்கு ஆகிய போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இவ்விளையாட்டு விழாவின் அங்குரார்ப்பண போட்டிகள் 1984ஆம் ஆண்டு நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்றது. அதன்பிறகு 1999ஆம் ஆண்டு குறித்த விளையாட்டு விழா நேபாளத்தில் நடைபெற்றிருந்ததுடன், தற்போது மூன்றாவது முறையாகவும் தெற்காசிய விளையாட்டு விழாவை நேபாளம் நடத்தவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எனவே, 13ஆவது தடவையாக நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவுகள், நேபாளம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இறுதியாக இந்தியாவின் குவஹாட்டியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணி 25 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தது. இதில் 9 தங்கப் பதக்கங்களை மெய்வல்லுனர் போட்டிகளிலும், 12 தங்கப் பதக்கங்களை நீர் நிலைப் போட்டிகளிலும் இலங்கை அணி வென்றிருந்தது. அதேவேளை, போட்டிகளை நடாத்திய இந்தியா, 188 தங்கப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சம்பியனாகத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<

*ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இலங்கைக் குழாம் விளையாட்டு அமைச்சினால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.