மாரிஸ் ஸ்டெல்லா பழைய மாணவர் அணியை வீழ்த்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள்

297

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான கால்பந்து போட்டியில் மாரிஸ் ஸ்டெல்லா பழைய மாணவர் அணியை கிரிக்கெட் ஜாம்பவான் கால்பந்து கழக அணி 3-2 என்ற கோல்கள் கணக்கில் வென்றது.

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் கல்லூரி விளையாட்டு நிதியம் ஒன்றை ஆரம்பிக்கும் வகையிலேயே இந்த கண்காட்சி போட்டி விளையாடப்பட்டது. இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு எதிர்கால மாரிஸ் ஸ்டெல்லா விளையாட்டு வீரர்களுக்கான நிதி உதவியை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ஜாம்பவான் அணிக்கு உலகக் கிண்ணம் வென்ற இலங்கை அணியின் சலதுறை வீரர் உபுல் சந்தன தலைமை வகித்ததோடு மாரிஸ் ஸ்டெல்லா பழைய மாணவர் அணிக்கு ஜானக்க டி லம்பேர்ட் தலைமை வகித்தார். இந்த அணியில் பாடசாலை, கழக மற்றும் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய பல முன்னாள் வீரர்களும் இடம்பிடித்தனர். சமிந்த வாஸ், ரவிந்திர புஷ்பகுமார, ஜுவன்த குலதுங்க, பர்வீஸ் மஹ்ரூப், சஜீவ வீரகோன் மற்றும் வென்டென் லெப்ரோய் ஆகிய வீரர்கள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் அணியில் இடம்பிடித்தனர்.

போட்டியின் 2ஆவது நிமிடத்திலேயே கிரிக்கெட் ஜாம்பவான்கள் 1-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலையைப் பெற்றனர். மஹ்ரூப் பரிமாற்றிய பந்தை பெனல்டி எல்லையில் வைத்து பெற்றுக்கொண்ட அணித்தலைவர் சந்தன கோலை நோக்கி வேகமாக உதைத்தார்.

ஈரலிப்புத் தன்மையுடனும் சேறாகவும் இருந்த மைதானத்தில் இரு அணிகளும் தடுமாற்றம் கண்ட நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினர்.

நடப்பு உலக சம்பியன் ஜெர்மனி FIFA தரவரிசையில் தொடர்ந்தும் முதலிடத்தில்

மாரிஸ் ஸ்டெல்லா பழைய மாணவர் அணி நிமிடங்கள் செல்லச் செல்ல ஆக்கிரமிப்பை செலுத்தியதோடு 25 ஆவது நிமிடத்தில் ருமோல்ட் பெர்னாண்டோ பந்தை இடைமறித்து பெற்று கோலை நோக்கி எடுத்துச் சென்றார். எனினும் கோலை நோக்கி அவர் பந்தை தட்டிவிட்டபோதும் எதிரணி கோல் காப்பாளர் அதனை சிறப்பான முறையில் தடுத்தார்.

எனினும் கிரிக்கெட் நட்சத்திரங்களின் தற்காப்பு அரணில் ஏற்பட்ட தவறை பயன்படுத்தி ஷஷிர குரேரா பந்தை கோலுக்குள் செலுத்தி சமநிலைக்கு கொண்டுவந்தார்.

முதல் பாதி: மாரிஸ் ஸ்டெல்லா பழைய மாணவர் 1-1 கிரிக்கெட் ஜாம்பவான்கள்

முதல் பாதியை போன்றே கிரிக்கெட் ஜாம்பவான்கள் இரண்டாவது பாதியிலும் சிறப்பாக ஆடியதோடு இம்முறை சந்தன பந்தை கடத்திச் சென்று வீரகோனிடம் பரிமாற்றியபோது அதனை அவர் கோலாக்கினார்.

10 நிமிடங்கள் கழித்து கிரிக்கெட் ஜாம்பவான்கள் 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றனர். எவ்வாறாயினும் விரைவில் பதிலடி கொடுத்த மாரிஸ் ஸ்டெல்லா அணியினர் 75 ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க கடைசி கால் மணிநேர ஆட்டம் விறுவிறுப்பை எட்டியது.

சொந்த மைதானத்தில் ஆடும் மாரிஸ் ஸ்டெல்லா சாமநிலை கோலை போட போராடியதோடு, சந்தன மற்றும் லெப்ரோய் ஆகியோருக்கு கிடைத்த கோல் பெறும் வாய்ப்புகள் எதிரணி கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டது.

முழு நேரம்: மாரிஸ் ஸ்டெல்லா பழைய மாணவர் 2 – 3 கிரிக்கெட் ஜாம்பவான்கள்