இங்கிலாந்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவிருந்த தி ஹன்ட்ரட் கிரிக்கெட் தொடர் 2021ம் ஆண்டுவரை பிற்போடப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை செய்தி வெளியிட்டுள்ளது.
அணிக்கு தலா 100 பந்துகள் கொண்ட ஆடவர் மற்றும் மகளிர் என இருபாலரும் விளையாடும் வகையிலான புதிய தொடரொன்றை இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஆரம்பிக்கவிருந்தது. இதற்கான வீரர்கள் ஏலமும் நடைபெற்றிருந்தது.
தனது ஜெர்சி, துடுப்பு மட்டையை ஏலத்தில் விடும் அசார் அலி
கொவிட்-19 வைரஸிற்கு எதிராக உதவும் வகையில் தன்னுடைய 2017ம் ……….
இவ்வாறான நிலையில், சர்வதேச அளவில் தீவிரம் காட்டிவரும் கொவிட்-19 வைரஸ் காரணமாக இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கொவிட்-19 காரணமாக இங்கிலாந்தில் நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும், ஜூலை முதலாம் திகதிவரை நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, இந்த அறிவிப்பானது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதாக தான் அமைந்திருந்தது. காரணம், மீண்டும் கிரிக்கெட் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், சர்வதேச போட்டிகள் மற்றும் வைட்டாலிட்டி T20 ப்ளாஸ்ட் ஆகிய போட்டித் தொடர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
நேற்றுமுன்தினம் (29) நடைபெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் சபை சந்திப்பின் போது, எதிர்வரும் காலப்பகுதியில் நடைபெறவுள்ள தொடர்கள் மற்றும் ஆரம்பிக்கப்படவுள்ள தொடர்கள் குறித்து கலந்துரையாடப்பட்ட போதே, இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, ஆடவர் மற்றும் மகளிர் என 8 அணிகள் மோதும் தி ஹன்ட்ரட் கிரிக்கெட் தொடர் 2021ம் ஆண்டு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் பிற்போடப்பட்டுள்ளமை குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொம் ஹெரிசன் குறிப்பிடுகையில், “தொடரை ஒத்திவைப்பதற்கான இந்த முடிவு, கடந்த இரண்டு வருடங்களில் மேற்கொண்ட ஆயத்தங்களுக்கு கிடைத்த பெரும் ஏமாற்றமாக உள்ளது. எனினும், நாட்டின் தற்போதைய நிலையை பொருத்தவரை, இவ்வாறான முடிவு ஏற்றுக்கொள்ளக்கூடியது.
ஆனால், எதிர்வரும் ஆண்டில் மிகவும் உற்சாகத்துடன் இந்த தொடரை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். தி ஹன்ட்ரட் தொடரை நடத்துவதற்கான அனைத்து தயார்படுத்தல்களையும் மேற்கொண்டுள்ள போதும், எங்களால் தொடரை நடத்த முடிவில்லை என்பது வருத்தமளிக்கிறது” என்றார்.
இதேவேளை, சமுக இடைவெளி மற்றும் சர்வதேச பயணங்கள் தொடர்பான விடயங்களை கருத்திற்கொண்டு தி ஹன்ட்ரட் கிரிக்கெட் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், புத்தம் புதிய தொடர் ஒன்றை ரசிகர்கள் இல்லாமல் நடத்துவது கடினம் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<