T20 கிரிக்கெட் போட்டிகள் துடுப்பாட்ட வீரர்களின் ஆட்டம் என்று கூறினாலும், அவ்வப்போது, யாராவது ஒரு சகலதுறை வீரர் திடீரென அதிரடியாக விளையாடி அனைவரையும் கவர்ந்துவிடுவார்.
அந்தவகையில், இலங்கையில் அண்மையில் நிறைவுக்கு வந்த அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக்கில் (LPL) பல இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடி தங்களின் திறமைகளை வெளியுலகிற்கு பரை சாற்றியிருந்தார்கள்.
அதிலும் குறிப்பாக, அடையாளமே தெரியாத ஒருசில இளம் வீரர்கள் அசால்ட்டாக கலக்கி கிரிக்கெட் உலகின் கவனத்தையும், இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டையும் பெற்றுக்கொண்டார்கள்.
>>Video – LPL இல் மேலதிக வீரராக இணைந்து ஹீரோவான Dhananjaya Lakshan..!
இதில் முதலாமவர் தான் காலி றிச்மண்ட் கல்லூரியின் ஊடாக கிரிக்கெட் விளையாட்டுக்கு பிரவேசித்த 22 வயதான ஒரு பந்துவீச்சு சகலதுறை வீரரான தனன்ஜய லக்ஷான்.
அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக்கில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியில் மேலதிக வீரராக இடம்பிடித்த அவர், இறுதியாக நடைபெற்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ், கண்டி டஸ்கர்ஸ் அணிகளுடனான லீக் போட்டிகள், கொழும்பு கிங்ஸ் அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டி மற்றும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியுடனான இறுதிப் போட்டி என்பவற்றில் விளையாடி திறமைகளை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் பெற்றுக் கொண்டார்.
இறுதியில், அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் வளர்ந்துவரும் வீரருக்கான விருதினையும் அவர் தட்டிச் சென்றார்.
இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் (ஜப்னா ஸ்டாலிடய்ஸுக்கு எதிராக) முதலாவது போட்டியில் அவர் விளையாடவில்லை.
>>Video – LPL அரையிறுதியில் பெற்ற வெற்றி தொடர்பில் கூறும் தனன்ஜய லக்ஷான்!
கொழும்பு கிங்ஸ் அணியுடனான இரண்டாவது போட்டியில் அவர் இடம்பிடித்தாலும், அவருக்கு பந்துவீசவோ, துடுப்பெடுத்தாடவோ வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஏனெனில் குறித்த போட்டியானது மழை காரணமாக 6 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதுடன், அதில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றியீட்டியது. தொடர்ந்து நடைபெற்ற கண்டி டஸ்கர்ஸ் அணியுடனான 3ஆவது லீக் போட்டியில் அவர் விளையாடவில்லை.
இதனிடையே, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியுடன் நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட தனன்ஜய லக்ஷான் இறுதிப் போட்டி வரை அந்த அணிக்காக விளையாடி சகலதுறையிலும் பிரகாசித்தார்.
இதில் 8 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுக்களை எடுத்து அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
>>இலங்கையின் வேகப் புயலாக உருவெடுக்கும் டில்ஷான் மதுஷங்க
இதில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கெதிரான முதலாவது போட்டியில் ஒரு விக்கெட்டினை எடுத்த அவர், தம்புள்ள வைகிங் அணிக்கெதிரான போட்டியில் 2 விக்கெட்டுக்களையும், கொழும்பு கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஒரு விக்கெட்டினையும் எடுத்தார்.
தொடர்ந்து விளையாடி தம்புள்ள வைகிங் அணிக்கெதிரான போட்டியில் 2 விக்கெட்டுக்களை எடுத்த தனன்ஜய லக்ஷான், கண்டி டஸ்கர்ஸ் அணியுடனான குழு நிலை இறுதி லீக் போட்டியில் 2 விக்கெட்டுக்களையும், கொழும்பு கிங்ஸ் அணியுடனான அரையிறுதிப் போட்டியில் 2 விக்கெட்டுக்களையும் எடுத்து அசத்தியிருந்தார்.
இதுஇவ்வாறிருக்க, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியுடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பந்துவீச்சில் அசத்திய அவர், 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை எடுத்தார்.
தனன்ஜய லக்ஷானின் துடுப்பாட்டத்தை பொறுத்தமட்டில் கொழும்பு கிங்ஸ் அணியுடனான அரையிறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டாலும், இந்தத் தொடர் முழுவதும் அவரால் 77 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.
>>LPL தொடரில் துடுப்பாட்டத்தில் ஜொலித்தவர்கள்
எனவே, இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கை நடத்தியதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்த இந்த தனன்ஜய லக்ஷான் யார்? அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பம் மற்றும் அவரால் கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் என்ன என்பன குறித்தும் இந்த கட்டுரையில் ஆராயவுள்ளோம்.
சிறு வயது முதல் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட லக்ஷான், தனுஷ்க தேனகமவின் பயிற்றுவிப்பின் கீழ் 13 வயதுக்குட்பட்ட பிரிவு அணிக்காக 2009, 2010 மற்றும் 2011 ஆகிய பருவங்களில் விளையாடினார்.
அதன்பிறகு 2012இல் 15 வயதுக்குட்பட்ட பிரிவில் காலி மாவட்ட கிரிக்கெட் அணிக்காகவும், தென் மாகாண கிரிக்கெட் அணிக்காகவும் விளையாடியிருந்தார். இதன்போது 3 அரைச்சதங்களுடன் 350 ஓட்டங்களைக் குவித்தார்.
காலி றிச்மண்ட் கல்லூரியின் 19 வயதுக்குட்பட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், காலி மஹிந்த கல்லூரி அணியுடன் 2017இல் நடைபெற்ற காதலர்களின் மாபெரும் சமரில் சதமடித்து அசத்தியிருந்தார்.
அத்துடன், நான்கு தடவைகள் மாபெரும் சமரில் காலி றிச்மண்ட் கல்லூரிக்காக விளையாடிய அவர், 2018இல் அந்த அணியின் தலைவராகவும் செயற்பட்டார்.
பாடசாலைகளுக்கிடையிலான இரண்டு நாட்கள் கொண்ட போட்டித் தொடரில் 1,500 ஓட்டங்களைக் குவித்த அவர், 75 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.
எனவே, பாடசாலைக் காலத்தில் சகலதுறையிலும் பிரகாசித்த தனன்ஜய லக்ஷானுக்கு மாவட்ட, மாகாண மற்றும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
கடந்த 2017 மற்றும் 2018 காலப்பகுதியில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பிடித்த அவர், மலேஷியாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் கிண்ணம் மற்றும் இந்திய சுற்றுப் பயணங்களில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்தார்.
இதனையடுத்து நியூஸிலாந்தில் 2018இல் நடைபெற்ற 13ஆவது இளையோர் உலகக் கிண்ணத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அவர், 6 போட்டிகளில் 250 ஓட்டங்களை எடுத்தார்.
இதில் அயர்லாந்து அணிக்கெதிராக சதமடித்து அசத்தியதுடன், பந்துவீச்சில் 2 விக்கெட்டுக்களையும் எடுத்தார். குறித்த தொடரில் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்களைக் குவித்த இரண்டாவது வீரராகவும் இடம்பிடித்தார்.
2018இல் நடைபெற்ற மாகாணங்களுக்கிடையிலான போட்டித் தொடரில் காலி அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்தார். அதன்பிறகு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்துக்காக முதல்தர போட்டிகளில் களமிறங்கிய அவர், இதுவரை 13 போட்டிகளில் 569 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 13 விக்கெட்டுக்களும் அடங்கும்.
இந்த நிலையில், கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அண்மையில் இடைநிறுத்தப்பட்ட கழகங்களுக்கிடையிலான 23 வயதுக்குட்பட்ட ஒருநாள் போட்டியில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி 119 ஓட்டங்களைக் குவித்திருந்ததுடன், 5 விக்கெட்டுக்களையும் எடுத்தார். குறித்த போட்டித் தொடரில் கோல்ட்ஸ் கழகம் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தமை சிறப்பம்சமாகும்.
பந்துவீச்சில் மிகப்பெரிய திட்டங்களை கையாள்பவராகவும், துடுப்பாட்டத்திலும் கூட இறுதி நேரங்களில் அருமையான முறையில் கைகொடுத்து வருகின்றவராகவும் இவர் இருக்கின்றார்.
>>அடுத்த LPL தொடருக்கு கிழக்கில் இருந்தும் ஒரு அணி
ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்து கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் பிரகாசித்த தனன்ஜய லக்ஷான், அண்மையில் நிறைவுக்கு வந்த அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக்கிலும் சகலதுறையிலும் பிரகாசித்து வளர்ந்துவரும் இளம் வீரராக மாறினார்.
எனவே, 22 வயதான இளம் வீரரான தனன்ஜய லக்ஷான் மிக விரைவில் இலங்கை அணிக்காக விளையாட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<