ஆஸி. கிரிக்கெட்டின் நிறைவேற்று அதிகாரி இராஜினாமா..!

227

அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபையின் தலைமை நிறைவேற்று அதிகாரி கெவின் ரொபர்ட்ஸ் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து நிக் ஹிக்லி இடைக்கால நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால் அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. நிதி நெருக்கடியை சமாளிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபையில் பணியாற்றிய சுமார் 200 அதிகாரிகளில் பெரும் எண்ணிக்கையானோர் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர்

இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் நடைபெற சாத்தியம் குறைவு

அத்துடன், அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கரின் சம்பளத்தை பாதியளவில் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

மேலும், மாநில அளவிலான கிரிக்கெட் சங்கத்திற்கான நிதியிலும் பிடித்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, கெவின் ரொபர்ட்ஸ் இந்த நடவடிக்கைக்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்

இதுதவிர, இந்திய டெஸ்ட் தொடருக்கான அட்டவணையில் பெர்த் மைதானம் புறக்கணிக்கப்பட்டது தொடர்பில் மேற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் கூட்டமைப்பு ரொபர்ட்ஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது.  

இதற்கிடையில் கொரோனாவால் முடக்கப்பட்டிருந்த காலத்தில் விளையாட்டை நடத்த இவர் மேற்கொண்ட நடவடிக்கை திருப்தியளிக்கும் விதத்தில் இல்லை என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தது.

இந்நிலையில் கடந்த 14ஆம் திகதி அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபையின் அவசரக்கூட்டம் நடைபெற்றது. இதில் இவருக்கு எதிராக உறுப்பினர்கள் ஒன்றாக முடிவு எடுத்ததால் இவர் விரைவில் பதவி விலகுவார் என தெரிவிக்கப்பட்டது.   

அத்துடன், அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாகி கெவின் ரொபர்ட்ஸை பதவி நீக்கி விட்டு இடைக்காக அதிகாரி ஒருவரை நியமிக்க அந்த நாட்டு கிரிக்கெட் சபை உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் பத்திரிகை நேற்றுமுன்தினம் (15) செய்தி வெளியிட்டிருந்தது.  

இந்த நிலையில், அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபையின் தலைமை நிறைவேற்று அதிகாரி பதிவியிலிருந்து கெவின் ரொபார்ட்ஸ் நேற்று (16) இராஜினாமா செய்தார். அவருடைய பதவிக்காலம் அடுத்த வருட இறுதி வரை இருந்த நிலையில் இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்

இதனிடையே, இராஜினாமாவுக்குப் பின் பேசிய கெவின் ரொபர்ட்ஸ், நான் விரும்பிய கிரிக்கெட்டை முன் நின்று வழி நடத்தியது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்.  

நமது கிரிக்கெட் அணியின் ஊழியர்கள், பயிற்சியாளர்கள், வீரர்கள் அனைவரும் மிகவும் திறமைசாலிகள். நான் தலைவராக இருந்த காலகட்டத்தில் அணி மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. பல சாதனைகளையும் படைத்துள்ளது. இதை நான் பெருமையாக உணர்கிறேன்” என்று தெரிவித்தார்

T20 உலகக் கிண்ணம் குறித்த அறிவிப்பு ஜூலையில்!

மேலும், என்னுடன் பயணித்த சக நிர்வாகிகளுக்கு நன்றிகளைக் கூற கடமைப்பட்டுள்ளேன். பல இக்கட்டான தருணங்களில் நிர்வாகிகள் எனக்குப் பக்கபலமாகச் செயல்பட்டனர். கிரிக்கெட் உலகின் உயிர்நாடியாக விளங்கும் இரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

நான் தலைமை பதவியிலிருந்த போது கிரிக்கெட் போட்டிகளை காண குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கினேன். இதன்மூலம் அவர்களின் தேசிய உணர்வு வளர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்

எதிர்காலத்தில் மிகப் பெரிய கிரிக்கெட் வீரர்களாக வரவேண்டும் என்கிற உந்து சக்தியை நான் குழந்தைகளிடம் விதைத்துள்ளேன். எதிர்காலத்தில் கிரிக்கெட் போட்டிகள் உலகெங்கும் அசுர வளர்ச்சி பெறும். அதை கிரிக்கெட் உலகின் வாழ்நாள் உறுப்பினரான நான் கண்கூடாகப் பார்ப்பேன்” என்று கூறினார்

இதேநேரம், கெவின் ரொபர்ட்ஸின் இராஜினாமா குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைவர் ஏர்ல் எடிங்ஸ் கருத்து தெரிவிக்கையில்

ரொபிட்ஸின் சேவையை நிர்வாகம் மறக்காது. அவருக்கு எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்வின் அதிகப்படியான நாட்களை கிரிக்கெட்டிற்கு முன்னுரிமை கொடுத்து வாழ்ந்துள்ளார். அவரின் எதிர்காலம் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபையின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக சுமார் 17 வருடங்களாக கடமையாற்றிய ஜேம்ஸ் சதர்லேன்ட், கடந்த 2018இல் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையைத் தொடர்ந்து அந்தப் பதவியை இராஜினமாச் செய்தார்.  

இதனையடுத்து கெவின் ரொபர்ட்ஸ் அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபையின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, அவுஸ்திரேலிய விளையாட்டு அரங்கில் வேலையிழக்கும் மூன்றாவது தலைமை நிர்வாகி கெவின் ரொபர்ட்ஸ் ஆவார்.  

முன்னதாக அந்நாட்டின் தேசிய ரக்பி தலைவர் டொட் கிரீன்பர்க், ரக்பி அவுஸ்திரேலியாவின் தலைமை நிறைவேற்று அதிகாரி காசில் ஆகியோர் சமீபத்தில் தங்களின் பதவியை இழந்தனர்

உலகில் அதிவேகமாக பந்துவீசுகின்ற சிறந்த 10 வீரர்கள்

47 வயதாகும் ரொபர்ட்ஸ், ரக்பி அவுஸ்திரேலியா அல்லது தேசிய ரக்பி லீக் அணியில் முக்கிய பதவியொன்றில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபையின் இடைக்கால தலைமை நிறைவேற்று அதிகாரியாக நிக் ஹிக்லி நியமிக்கப்பட்டுள்ளார்

நிக் ஹிக்லி தற்போது அவுஸ்திரேலியாவின் T20i உலகக் கிண்ணப் போட்டிகளை ஏற்பாடு செய்யும் குழுவின் தலைமை நிர்வாகியாக செயற்பட்டு வருகின்றார். மேலும், அவுஸ்திரேலியாவில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் குழுவின் மேற்பார்வையாளராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…