அவுஸ்திரேலிய அணியுடன் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை

1066
Image - Hindustantimes

இலங்கை அணியுடன் மூன்று டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடுகின்றவாறு அவுஸ்திரேலிய அணியானது மேலும் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுடனும் விளையாடும் வகையில் போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் உலகில் அதிக உலகக்கிண்ண தொடர்களை கைப்பற்றிய அணியாக கருதப்படும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது எதிர்வரும் ஒரு ஆண்டு காலப்பகுதியில் விளையாடவுள்ள இரு தரப்பு தொடர்களுக்காக போட்டி அட்டவணையை அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று (07) வெளியிட்டுள்ளது.

உலகக் கிண்ண வரலாற்றை பேசும் ஹெட்ரிக்-விக்கெட்டுகள்!

ஆடவர் மற்றும் மகளிருக்காக அவுஸ்திரேலிய அணியின் போட்டி அட்டவணைக்கமைய ஆடவர் அணியானது இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுடனும், மகளிர் அணியானது இலங்கை அணியுடன் இருதரப்பு தொடரிலும், இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுடன் சேர்ந்து முத்தரப்பு டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.

இங்கிலாந்தில் இம்மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் பின்னரான காலப்பகுதிகளை அடிப்படையாக கொண்டு குறித்த போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அட்டவணையின்படி அவுஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியானது முதலில் இலங்கை கிரிக்கெட் அணியை சந்திக்கின்றது. இலங்கை கிரிக்கெட் அணியானது அவுஸ்திரேலியா சென்று மூன்று டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளது.

குறித்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஒக்டோபர் மாதம் இறுதிப்பகுதியில் ஆரம்பமாகின்றது. ஒரு போட்டி பகல் போட்டியாகவும் ஏனைய இரண்டு போட்டிகளும் இரவு போட்டியாகவும் பெயரிடப்பட்டுள்ள அதேவேளை, குறித்த தொடருக்கு ‘ஜில்லேட் (Gillette) டி20 தொடர்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இலங்கை அணியுடனான டி20 சர்வதேச தொடரை முடித்த கையுடன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சொந்த நாட்டுக்கு அழைத்து அவர்களுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் விளையாடவுள்ளது.

பாகிஸ்தான் அணியுடனான தொடரானது நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகின்றது. டி20 தொடருக்கு ‘ஜில்லேட் டி20 தொடர்’ எனவும், டெஸ்ட் தொடருக்கு ‘டொமெய்ன் டெஸ்ட் தொடர்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியானது பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியுடனான இரு தொடர்களின் பின்னர் நியூசிலாந்து கிரிக்கெட் அணியை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையானது அழைத்து ‘டொமெய்ன் டெஸ்ட் தொடர்’ என்ற பெயரில் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், ‘ஜில்லேட் ஒருநாள் தொடர்’ என்ற பெயரில் மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் உப தலைவராக கிரிஸ் கெயில்

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ‘பொக்சிங் டே’ (boxing day) டெஸ்ட் போட்டியாகவும் நடைபெறவுள்ளது. 1987 ஆம் ஆண்டு இறுதியாக அவுஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை பொக்சிங் டே டெஸ்ட்டில் மோதியிருந்தது. தற்போது 32 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை பொக்சிங் டே டெஸ்ட்டில் எதிர்கொள்கின்றது.

இருதரப்பு தொடர் அட்டவணைகள் (அனைத்து போட்டிகளும் அவுஸ்திரேலிய நேரப்படி தரப்பட்டுள்ளது.)

இலங்கை – அவுஸ்திரேலியா டி20 சர்வதேச தொடர்

  • 27 ஒக்டோபர் பி.ப 2.00 – முதலாவது டி20 சர்வதேச போட்டி – அடிலெயிட் ஓவல்
  • 30 ஒக்டோபர் பி.ப 6.10 – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – பிரிஸ்பேன், கப்பா (Gabba)
  • 01 நவம்பர் பி.ப 7.10 – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி – மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானம் (MCG)

பாகிஸ்தான் – அவுஸ்திரேலியா டி20 சர்வதேச தொடர்

  • 03 நவம்பர் பி.ப 2.30 – முதலாவது டி20 சர்வதேச போட்டி – சிட்னி கிரிக்கெட் மைதானம்
  • 05 நவம்பர் பி.ப 7.10 – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – மனுகா ஓவல், கன்பேர்ரா
  • 08 நவம்பர் பி.ப 4.30 – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி – பேர்த்

பாகிஸ்தான் – அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

  • 21 – 25 நவம்பர் மு.ப 10.00 – முதல் டெஸ்ட் போட்டி – பிரிஸ்பேன், கப்பா (Gabba)
  • 29 நவம்பர் – 03 டிசம்பர் பி.ப 2.00 – இரண்டாவது டெஸ்ட் போட்டி – அடிலெயிட் ஓவல்

நியூசிலாந்து – அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

  • 12 – 16 டிசம்பர் பி.ப 1.00 – முதல் டெஸ்ட் போட்டி – பேர்த்
  • 26 – 30 டிசம்பர் மு.ப 10.30 – இரண்டாவது டெஸ்ட் போட்டி – மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானம்
  • 03 – 07 ஜனவரி மு.ப 10.30 – மூன்றாவது டெஸ்ட் போட்டி – சிட்னி கிரிக்கெட் மைதானம்

நியூசிலாந்து – அவுஸ்திரேலியா ஒருநாள் சர்வதேச தொடர்

  • 13 மார்ச் பி.ப 2.30 – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி – சிட்னி கிரிக்கெட் மைதானம்
  • 15 மார்ச் மு.ப 10.30 – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி – சிட்னி கிரிக்கெட் மைதானம்
  • 20 மார்ச் பி.ப 2.30 – மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி – ப்ளுன்ஸ்டோன் எரினா, தஸ்மானியா

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<