2028ஆம் ஆண்டுக்கான லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் – விளையாட்டு விழாவில் கிரிக்கெட் போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பிலான புதிய அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.
குறித்த அறிவிப்பின் படி 2028ஆம் ஆண்டுக்கான லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் ஆடவர் மற்றும் மகளிருக்காக ஆறு அணிகள் கொண்ட ஒரு போட்டித் தொடராக நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (IOC) நிறைவேற்று அதிகார சபைக் குழு (EB) ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் ஆடவர், மற்றும் மகளிர் பிரிவுகளில் தலா 90 வீர, வீராங்கனைகளுக்காக வீரர் ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே ஒலிம்பிக் தொடரில் பங்கெடுக்கும் அணிகள் தலா 15 வீர, வீராங்கனைகள் கொண்ட அணிகளை தெரிவு செய்ய முடியும். அத்துடன் ஒலிம்பிக் தொடரின் கிரிக்கெட் போட்டிகள் T20 வடிவமாக இடம்பெறும். அதேவேளை தொடரின் போட்டிகள் நியூயோர்க்கில் நடைபெற எதிர்பார்க்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<