டயலொக் றக்பி லீக் 2ஆம் சுற்று போட்டிகளில் CR & FC மற்றும் ஹெவலொக் அணிகளுக்கிடையிலான போட்டியில், 2ஆம் பாதியில் ஆதிக்கம் செலுத்தியதன் மூலம் 31-10 என ஹெவலொக் அணி வெற்றிபெற்றது.
இதன் மூலம் கிணத்திற்காக ஹெவலொக் விளையாட்டு கழகம் மற்றும் கண்டி விளையாட்டு கழகம் எதிர்வரும் வாரத்தில் மோதிக்கொள்ளவுள்ளன.
கடந்த வாரம் இராணுவ அணியுடனான போட்டியில் தோல்வியுற்ற CR & FC அணியானது வெற்றிபெறும் கனவுடன் இப்போட்டியில் களமிறங்கியது. அதன்படி போட்டியில் முதல் புள்ளியை பெரும் வாய்ப்பு CR & FC அணிக்கு கிடைத்த பொழுதும் அதை தவறவிட்டது. ரீசா முபாரக் 30 மீட்டர் பெனால்டி உதையை தவறவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் CR & FC அணியின் கயான் ஜெயம்மான மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். எனினும் CR & FC அணியே முதல் புள்ளியை பெற்றுக்கொண்டது. சஷான் மொஹமட் ஹெவ்லொக் அணி வீரர்களை கடந்து 30 மீட்டர் தூரத்தில் கவிந்து பெரேராவிற்கு பந்தை பரிமாறினார். மீதி தூரத்தை கடந்த பெரேரா கம்பத்தின் அடியில் ட்ரை வைத்தார். ரீசா முபாரக் கொன்வெர்சன் உதையை இலகுவாக உதைத்தார். (CR & FC 07 – ஹெவலொக் 00)
ஹெவலொக் அணியானது அடுத்து 18ஆவது மற்றும் 28ஆவது நிமிடங்களில் பெனால்டி உதைகளின் மூலம் 6 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. (CR & FC 07 – ஹெவலொக் 06)
CR & FC அணியின் ரீசா முபாரக் 35 மீட்டர் தூரத்தில் இருந்து பெனால்டி உதையை வெற்றிகரமாக உதைத்து 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். எனினும் CR & FC அணியின் ஓமல்க குணரத்ன மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஹெவலொக் அணியானது சுதர்ஷன முதுதந்திரி மூலமாக ட்ரை வைத்து முன்னிலை அடைந்தது.
முதற் பாதி : CR & FC விளையாட்டு கழகம் 10 – ஹெவலொக் விளையாட்டு கழகம் 11
இரண்டாவது பாதியில் CR & FC அணியானது தமக்கு கிடைத்த வாய்ப்பின் மூலம் புள்ளிகளை பெற்றுக்கொள்ள தவறியது. எனவே ஹெவலொக் அணியானது தமக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி துலாஜ் பெரேரா மூலம் புள்ளிகளை பெற்றுக்கொண்டது. 54 ஆவது நிமிடத்தில் பெனால்டி உதையின் மூலமும் சில நிமிடங்களின் பின்னர் கிடைத்த இன்னொரு பெனால்டி உதையின் மூலமும் துலாஜ் பெரேரா ஹெவலொக் அணிக்கு 6 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (CR & FC 10 – ஹெவலொக் 17)
ஹெவலொக் அணியின் பயிற்றுவிப்பாளர் சரியான நேரத்தில் மாற்று வீரர்களை பயன்படுத்தியதன் மூலம் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். மாற்று வீரர் லிஸ்டன் ப்லேட்னி ஹெவலொக் அணி சார்பாக ட்ரை வைத்தார். துலாஜ் பெரேரா உதையை வெற்றிகரமாக உதைத்ததன் மூலம் ஹெவலொக் அணி 14 புள்ளிகளால் முன்னிலை பெற்றது. (CR & FC 10 – ஹெவலொக் 24)
இறுதி 5 நிமிடத்தில் ஹெவலொக் அணியின் சுதாம் சூரியாராச்சி 5 மீட்டர் எல்லையில் உடனடியாக பெனால்டியை பெற்றுக்கொண்டு ஓடிச் சென்று ட்ரை வைத்ததன் மூலம் CR & FC அணியின் கனவுகள் கலைந்தது.
முழு நேரம் : CR & FC விளையாட்டு கழகம் 10 – ஹெவலொக் விளையாட்டு கழகம் 31
ThePapare.com போட்டியின் சிறந்த வீரர் – துலாஜ் பெரேரா (ஹெவலொக் விளையாட்டு கழகம்)
புள்ளிகள் பெற்றோர்
CR & FC விளையாட்டு கழகம்
கவிந்து பெரேரா 1T, ரீசா முபாரக் 1C 1P
ஹெவலொக் விளையாட்டு கழகம்
சுதர்ஷன முதுதந்திரி 1T, லிஸ்டன் ப்லேட்னி 1T, சுதாம் சூரியாராச்சி 1T, துலாஜ் பெரேரா 2C 4P