டயலொக் ரக்பி லீக் 4ஆம் வாரத்தின் இறுதிப் போட்டியில் CR & FC அணி விமானப்படை அணியை 57-20 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றது.
தொடர்ந்து இரண்டு வாரங்கள் தோல்வியை சந்தித்த CR & FC அணியானது இம்முறை வெற்றிபெற வேண்டும் என்ற கனவுடன் களமிறங்கியது. மறு முனையில் பலம் மிக்க கண்டி கழகத்தை வீழ்த்திய விமானப்படை அணியானது CR & FC அணியையும் வெல்லும் கனவோடு போட்டிக்குத் தயாரானது. ஆனால் CR & FC அணியானது முதல் பாதியிலேயே 31-06 என முன்னிலை கொண்டு தனது வெற்றியை உறுதி செய்து கொண்டது.
விளையாடுவதற்கு சிறந்த நிலையில் மைதானம் காணப்பட்டதினால் இரு அணி வீரர்களும் சிறந்த முறையில் பந்தை பரிமாறி மற்றும் உதைத்து தனது திறமைகளை வெளிக்காட்டினர். சில நிமிடங்களின் பின்னர் 8ஆவது நிமிடத்தில் விமானப்படையின் தடுப்பை உடைத்த கவிந்து பெரேரா விமானப்படையின் 10 மீட்டர் எல்லையினை அடைந்தார். பின்னர் ஒரு சில கட்டங்களின் பின்னர் திலங்க பெரேரா CR & FC அணி சார்பாக போட்டியின் முதல் ட்ரையை வைத்தார். தரிந்த ரத்வத்த வெற்றிகரமாக கம்பங்களின் நடுவே உதைந்து 2 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார். 5 நிமிடங்களின் பின்னர் கவிந்து பெரேராவின் மூலம் தனது முன்னிலையை CR & FC அணி இரட்டிப்பு செய்தது. சஷான் மொஹமட் ஓப் லோர்ட் மூலமாக கொடுத்த பந்தை பெற்றுக்கொண்ட கவிந்து பெரேரா கம்பங்களின் அடியில் ட்ரை வைத்தார். தரிந்த ரத்வத்த உதையை தவறவிடவில்லை. (CR & FC அணி 14 – விமானப்படை அணி 00)
தொடர்ந்து CR & FC அணி அழுத்தங்களைக் கொடுத்த வந்த பொழுதும் விமானப்படை அணியானது CR & FC அணியின் ட்ரை வைக்கும் முயற்சிகளை உடைத்தது. இரண்டு முறை விமானப்படையின் கோட்டைக்குள் நுழைந்தும் புள்ளிகள் எதுவும் பெறாத நிலையில் CR & FC அணி திரும்பியது. பின்னர் தனக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலம் 22ஆவது நிமிடத்தில் 3 புள்ளிகளை விமானப்படை அணியானது பெற்றுக்கொண்டது. விமானப்படை அணியின் சரித் செனவிரத்ன கம்பங்களின் இடையே பந்தை வெற்றிகரமாக உதைத்தார். (CR & FC அணி 14 – விமானப்படை அணி 03)
5 நிமிடங்களின் பின்னர் பெனால்டி மூலம் 3 புள்ளிகளை CR & FC அணி சார்பாக தரிந்த ரத்வத்த பெற்றுக்கொடுத்தார். பின்னர் அவர் CR & FC அணி சார்பாக 3ஆவது ட்ரை வைத்தார். சிறப்பான விளையாட்டை வெளிக்காட்டிய அவர் கம்பங்களின் அடியில் ட்ரை வைத்து பின்னர் உதையையும் வெற்றிகரமாக உதைத்தார். (CR & FC அணி 24 – விமானப்படை அணி 03)
சிறிது நேரத்தின் பின்னர் பந்தை நகர்த்திய விமானப்படை அணியானது பெனால்டி வாய்ப்பொன்றை வென்றது. அதன் மூலம் விமானப்படை அணிக்கு 3 புள்ளிகளை சரித் செனவிரத்ன பெற்றுக்கொடுத்தார். எனினும் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய CR & FC அணியானது மேலும் ஒரு ட்ரை வைத்தது. இம் முறை CR & FC அணியின் ஸ்க்ரம் ஹாப் கவிந்து டி கொஸ்தா விமானப்படை வீரர்களைக் கடந்து சென்று கம்பங்களின் அருகே ட்ரை வைத்தார். இலகுவான உதையை வெற்றிகரமாக தரிந்த ரத்வத்த உதைத்தார். (CR & FC அணி 31 – விமானப்படை அணி 06)
முதற் பாதி : CR & FC அணி 31 – விமானப்படை அணி 06
முதற் பாதியில் 31 புள்ளிகளைப் பெற்ற நிலையில் இரண்டாம் பாதியிலும் CR & FC அணியானது ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்த்த பொழுதும் சிறந்த ஒரு போட்டியை விமானப்படை கொடுத்தது. இரண்டாம் பாதியில் விமானப்படையே முதலில் ஆதிக்கம் செலுத்தியது. CR & FC அணியின் 22 மீட்டர் எல்லையை அடைந்த பின்னர் தமது பின் வரிசை வீரர்களைக் கொண்டு பந்தை நகர்த்திய விமானப்படை அணியானது விங் நிலை வீரர் இஷார மதுஷான் மூலமாக ட்ரை கோட்டை மைதானத்தின் ஓரத்தில் தாண்டியது. கடினமான உதையை சிறப்பாக உதைத்த சரித் செனவிரத்ன விமானப்படை அணிக்கு மேலும் புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்து ஊக்கம் அளித்தார். (CR & FC அணி 31 – விமானப்படை அணி 13)
அதன் பின் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த விமானப்படை அணியானது பலத்த சவால் கொடுத்தது. 50 ஆவது நிமிடத்தில் ரானுக மடகெதர மூலமாக மற்றுமொரு ட்ரை வைத்த விமானப்படை அணியானது தமது ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பை வழங்கியது. சரித் செனவிரத்ன தொடர்ந்து தமது திறமையை உதையில் வெளிக்காட்டினார். (CR & FC அணி 31 – விமானப்படை அணி 20)
CR & FC அணியின் ப்ரொப் நிலை வீரர் சரண சாமிகர மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட விமானப்படை அணி தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தியது. எனினும் மீண்டும் ஒரு முறை CR & FC அணியே புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது. 5 மீட்டர் எல்லைக்குள் ஸ்க்ரம் ஒன்றை பெற்ற CR & FC அணியானது தனது இரண்டாம் வரிசை வீரர் இஷான் நூர் மூலமாக ட்ரை வைத்தது. பிரின்ஸ் சாமர உதையை வெற்றிகரமாக உதைந்தார். (CR & FC அணி 38 – விமானப்படை அணி 20)
அந்த ட்ரையின் பின்னர் விமானப்படை அணியானது தனது வேகத்தை இழந்தது. மேலும் CR & FC அணியானது பலம் மிக்க புதிய வீரர்களை களத்தில் இறக்க, CR & FC அணியானது மறுபடியும் போட்டியை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தது.
விமானப்படை அணியின் வேகம் குறைந்த பின்னர், CR & FC அணியானது இறுதி 10 நிமிடங்களில் 3 ட்ரை வைத்து அசத்தியது. 70 ஆவது நிமிடத்தில் கவிந்து பெரேரா CR & FC அணி சார்பாக ட்ரை வைத்தார். தரிந்த ரத்வத்த உதையை தவறவிட்டார். CR & FC அணியின் பலம் மிக்க ஓமல்க குணரத்ன விமானப்படை அணியின் ட்ரை எல்லையை வெற்றிகரமாக கடந்தார். ரத்வத்த இவ் உதையை வெற்றிகரமாக உதைந்தார். (CR & FC அணி 50 – விமானப்படை அணி 20)
தரிந்த ரத்வத்தவிற்கு இப்போட்டி சிறந்ததாக அமைந்தது. போட்டியின் இறுதி ட்ரையையும் தரிந்த ரத்வத்த 80 மீட்டர்கள் ஓடிச் சென்று வைத்தார். CR & FC அணியின் ட்ரை கோட்டின் அருகே வெற்றிகரமாக விமானப்படையிடம் இருந்து பந்தை CR & FC அணி கைப்பற்றியதோடு, பந்தை பெற்ற ரத்வத்த பந்தை தாமாகவே எடுத்து செல்ல முடிவெடுத்தார். இடையில் பந்தை முன்னால் உதைந்து சென்று பின்னர் வெற்றிகரமாக பந்தை பெற்றுக்கொண்ட ரத்வத்த கம்பங்களின் அடியில் ட்ரை வைத்தார். பின்னர் உதையையும் வெற்றிகரமாக உதைத்தார். இதன் மூலம் 25 புள்ளிகளை இப் போட்டியில் தமது அணி சார்பாக பெற்றுக்கொடுத்தார் முன்னாள் திரித்துவக் கல்லூரி தலைவர் தரிந்த ரத்வத்த.
முழு நேரம் – CR & FC அணி 57 – விமானப்படை அணி 20
புள்ளிகள் பெற்றோர்
CR & FC அணி
ட்ரை – கவிந்து பெரேரா 2, தரிந்த ரத்வத்த 2, திலங்க பெரேரா, கவிந்து டி கொஸ்தா, இஷான் நூர், ஓமல்க குணரத்ன
கொன்வெர்சன் – தரிந்த ரத்வத்த 6, பிரின்ஸ் சாமர 1
பெனால்டி – தரிந்த ரத்வத்த 1
விமானப்படை அணி
ட்ரை – இஷார மதுஷான், ரானுக மடகெதர
கொன்வெர்சன் – சரித் செனவிரத்ன 2
பெனால்டி – சரித் செனவிரத்ன 2