பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சுப் பயிற்சியாளராக உள்ள முன்னாள் நியூசிலாந்து அணித் தலைவர் டேனியல் வெட்டோரி அந்த நாட்டு கிரிக்கெட் சபையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உதவி செய்துள்ளார்.
இதன்படி, அங்கு பணிபுரியும் குறைந்த ஊதியம் வாங்கும் ஊழியர்களுக்கு தன் சம்பளத்தில் குறிப்பிட்ட பகுதியை வழங்கி விடுமாறு அவர் அந்நாட்டு கிரிக்கெட் சபையிடம் கூறி உள்ளார்.
>> விடா முயற்சியினால் பரிசுத்தொகையை பெறும் பங்களாதேஷ் வீரர்கள்
கிரிக்கெட் அரங்கில் சிறந்த சுழல் பந்துவீச்சாளராக வலம் வந்த டேனியல் வெட்டோரி நியூசிலாந்து அணியின் தலைவராகவும் செயற்பட்டார்.
இந்த நிலையில், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐ.பி.எல் உள்ளிட்ட T20 போட்டிகளில் பயிற்சியாளராக செயற்பட்ட வந்த அவர், தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார்.
2020 T20 உலகக் கிண்ணப் போட்டிகள் வரை அவரை 100 நாட்களுக்கு மட்டும் சிறப்பு பயிற்சியாளராக அந்நாட்டு கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.
எனினும், கொரோனா வைரஸ் காரணமாக போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. T20 உலகக் கிண்ணத் தொடரும் தள்ளி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தன் சம்பளத்தில் ஒரு பகுதியை, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையில் பணிபுரியும் குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு வழங்கி விடுமாறு அவர் கூறி உள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைமை செயல் அதிகாரி நிஜாமுதீன் சவுத்ரி தெரிவித்தார்.
டேனியல் வெட்டோரி எவ்வளவு தொகையை அளிக்குமாறு கூறினார் என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், அவரது இந்த உதவி பாராட்டுக்களை பெற்றுள்ளது.
அதிலும் குறிப்பாக, கொரோனா வைரஸ் காரணமாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கடும் நிதிச் சிக்கலில் இருக்கும் நிலையில் அவர் செய்த உதவியால் பல ஊழியர்கள் பயன் அடைவார்கள் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையில் அதன் தலைமைப் பயிற்சியாளர் ரஸல் டொமின்கோவை விட அதிக சம்பளம் வாங்குகின்ற பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதில் அவருடைய மாதாந்த சம்பளம் இரண்டு இலட்சத்து ஐந்தாயிரம் அமெரிக்க டொலர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பங்களாதேஷ் நாட்டு பணப்பெறுமதியில் 3.61 கோடி ரூபாவாகும்.
எனவே, டேனியல் வெட்டோரியின் இந்த முன்மாதிரியான செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<