கோப்பா அமெரிக்கா கிண்ண கால்பந்து தொடரின் அரைறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் சிலியை 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரேசிலுடனான இறுதிப் போட்டிக்கு பெரு அணி தகுதி பெற்றது.
ஆர்ஜன்டீனாவை வீழ்த்திய பிரேசில் கோப்பா அமெரிக்க இறுதி மோதலில்
காப்ரியல் ஜேசுஸ் மற்றும் ரொபர்டோ…….
பிரேசிலின் போர்டோ அலெக்ரேவில் இன்று (04) நடைபெற்ற இரண்டாவது அரைறுதியில் 21 ஆவது நிமிடத்தில், கடந்த இரண்டு முறை கோப்பா அமெரிக்கா கிண்ணத்தை வென்ற சிலிக்கு அதிர்ச்சி கொடுத்து பெரு முன்னிலை பெற்றது. கிடைத்த கோணர் கிக்கை எடிசன் பிளோரஸ் பெருவுக்கு முதல் கோலாக மாற்றினார்.
17 நிமிடங்கள் கழித்து பெரு இரண்டாவது கோலையும் புகுத்தியது. சிலி கோல்காப்பாளர் கப்ரியல் ஆரியஸ் அவசரப்பட்டு முன்னால் வந்ததை சாதமாக பயன்படுத்திக்கொண்ட யொசிமார் யோடுன் அவரை முறியடித்த நிலையில் பந்தை வலைக்குள் செலுத்தினார்.
போட்டியின் மேலதிக நேரத்தில் வைத்து பெரு அணித்தலைவர் போலோ குவரேரோ மூன்றாவது கோலையும் புகுத்தி தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன்படி தற்போது ஆடிவரும் வீரர்களில் கோப்பா அமெரிக்கா கிண்ணத்தில் அதிகபட்சமாக 13 கோல்களை குவரேரோ பெற்றுள்ளார்.
போட்டி முடியும் நேரத்தில் சிலி அணிக்கு பெனால்டி ஒன்று கிடைத்தபோதும் எடுவார்டோ வார்கஸின் பலவீனமான உதையை பெரு கோல்காப்பாளர் பெட்ரோ கொலஸ் தடுத்தார்.
கோப்பா அமெரிக்கா: உருகுவேவை வீழ்த்திய பெரு அரையிறுதியில்
நட்சத்திர வீரர் லுவிஸ் சுவாரஸ் தவறவிட்ட பெனால்டி சூட்அவுட் கோலை ………
கடைசியாக 1975ஆம் ஆண்டு கோப்பா அமெரிக்கா கிண்ணத்தை வென்ற பெரு இலங்கை நேரப்படி வரும் திங்கட்கிழமை (08) ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் போட்டியை நடத்தும் பிரேசிலை எதிர்கொள்ளவுள்ளது.
பிரேசில் அணி தனது அரையிறுதியில் பிராந்தியத்தில் தனது போட்டி நாடான ஆர்ஜன்டீனாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
எனினும் இந்தத் தொடரின் குழு நிலைப் போட்டியில் பிரேசில் மற்றும் பெரு அணிகள் எதிர்கொண்டபோது பிரேசில் 5-0 என்று அந்த அணியை துவம்சம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கோல் பெற்றவர்கள்
பெரு – எடிசன் பிளோரஸ் 21′, யொசிமார் யோடுன் 38′, போலோ குவரேரோ 90+1′
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<