‘வெள்ளை மின்னல்’ என்னும், சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்படும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அலன் டொனால்ட் இலங்கை அணிக்கு விஷேட பயிற்சியாளராக எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு கடமையாற்றவுள்ளார். இது தொடர்பான ஊடகவியாலாளர் கலந்துரையாடல் ஒன்று இன்று (2) மாலை இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது.
“எமது தேசிய அணியின் ஆட்டத்தினை எமக்கு கிடைக்கும் அனைத்து வழிவகைகளிலும் அதிகரித்துக்கொள்ளும் இலக்கோடு செயற்படுகின்றோம். இதனால், இந்த சம்பியன்ஸ் கிண்ணத்தை இலங்கை வெற்றி கொள்ளத் தேவையான அனைத்து திட்டங்களையும் கட்டமைத்து செயற்படுத்தி வருகின்றோம். அந்த வகையில், இங்கிலாந்து நாட்டில் எமது அணியின் வேகப்பந்து வீச்சாளர்களிற்கு உதவ அலன் டொனால்டைத் தவிர வேறு சிறந்த ஒருவர் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை. அதனாலேயே அவரை தெரிவு செய்துள்ளோம்“
என இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான திலங்க சுமதிபால கருத்து தெரிவித்திருந்தார்.
தனது 12 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 272 விக்கெட்டுகளை சாய்த்திருக்கும் டொனால்ட், இம்மாதம் 9 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரையில் இலங்கை அணி பல்லேகலை சர்வதேச மைதானத்தில் பங்குகொள்ளும் பயிற்சிப்பட்டறையில் தேசிய அணி வீரர்களுடன் இணைந்து செயற்படவுள்ளார்.
“இங்கிலாந்து நாட்டின் நிலைமைகளை சமாளிக்க எமது அணிக்கு இணைக்கப்பட்டிருக்கும் அலன் டொனால்ட் போன்ற ஒரு முன்னாள் நட்சத்திர வீரர் நமக்கு கிடைத்திருப்பது அளவிட முடியாத பெறுமதியான விடயமாகும். இனி எமது முழுத் திறமைகளை வெளிக்காட்டி, அணியை கட்டியெழுப்பி கொடியை உச்சத்தில் பறக்க வைப்பது எம்மைச்சார்ந்தது“
என இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் கருத்து வெளியிட்டிருந்தார்.
சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான இலங்கை அணியின் வளமுகாமைத்துவ குழாம்
- அசங்க குருசிங்க – அணி முகாமையாளர்
- ரஞ்சித் பெர்னாந்து – சுற்றுத் தொடர் முகாமையாளர்
- கிரகம் போர்ட் – தலைமை பயிற்றுவிப்பாளர்
- அலன் டொனால்ட் – வேகப்பந்து வீச்சு ஆலோசகர் மற்றும் பயிற்றுவிப்பாளர்
- நிக் போத்துஸ் – களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர்
- நிக் லீ – பயிற்சி அளிப்பவர்
- அஜந்த வத்தேகம – உடற்பயிற்சியாளர்
- ஸ்ரீராம் சோமயஜூல – அணிப்பகுப்பாய்வாளர் (Analyst)
- ரொஹான் பிரியதர்ஷன – தசைவலிகளை சரி செய்பவர் (Masseur)
“இலங்கை கிரிக்கெட்டிற்காக வேலை செய்வதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். இங்கிலாந்தில் விளையாடுவது சற்று வித்தியாசமாக இருக்கும் என நினைக்கின்றேன். இந்த தொடர் (ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணம்) மிகவும் கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் ஒரு சிறு தவறைவிட்டாலும், அது அணியை தொடரிலிருந்து வெளியேற்ற காரணமாக அமைந்துவிடும். ஆனால், எனது நம்பிக்கையின்படி இந்த கிண்ணத்தினை வெல்வதற்கு எது தேவைப்படுகின்றதோ அதனை இலங்கை அணி கொண்டுள்ளது“
என வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் அலன் டொனால்ட் தெரிவித்திருந்தார்.
Photos : Consultant Fast Bowling Coach – Allan Donald – Press Conference
அலன் டொனால்ட் தேசிய அணியொன்றிற்கு இவ்வாறு பயிற்றுவிப்பாளராக செயற்படுவது ஐந்தாவது தடவையாகும். முன்னதாக அவர் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியிருக்கின்றார். அத்தோடு இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் புனே வாரியர்ஸ் அணிகளுக்காகவும் சில காலம் கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“2003 ஆம் ஆண்டு சொந்த நாட்டில் இடம்பெற்றிருந்த உலக கிண்ணத்தில் இருந்து (தென்னாபிரிக்கா) வெளியேறியதானது அவ்வளவு சிறப்பானது அல்ல. அது தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கு மிகவும் இக்கட்டான காலகட்டமாக அமைந்திருந்தது. அத்தோடு, மேலும் சில ஏமாற்றங்களையும் நான் கடந்து வந்துள்ளேன். அதில் முக்கியமானது 1999 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தில் ஏற்பட்டிருந்த ஏமாற்றமாகும். அதுவே எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் மோசமான ஒரு ஏமாற்றமாகும்“
என டொனால்ட் தென்னாபிரிக்க அணி கடந்த காலங்களில் ஐ.சி.சி ஏற்பாடு செய்திருந்த தொடர்களில் சாதிக்காததைக் குறித்து பேசியிருந்தார்.
குறுகிய காலத்திற்கு மட்டும் அதுவும் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளர்களுடன் பயிற்சியில் ஈடுபடுவதென்பது டொனால்டிற்கு சற்று சவாலான விடயமாகக் காணப்படுகிறது.
கென்ட் அணியின் உதவி பயிற்றுவிப்பாளர் பொறுப்பில் தற்போது இருக்கின்ற 50 வயதாகும் டொனால்ட், இங்கிலாந்து நாட்டில் வேலை செய்வதற்குரிய அத்தியாவசிய அனுமதிப்பத்திரத்தினை பெறாத காரணத்தினால் இந்த பருவகாலத்தில் அவ்வணிக்கு பயிற்சி வழங்கும் வாய்ப்பினை இழக்கின்றார். 2018 ஆம் ஆண்டிலேயே கென்ட் அணி பயிற்றுனராக செயற்படக்கூடிய வாய்ப்பு அவருக்கு மீண்டும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இலங்கை அணிக்கு மிகவும் பயன்தரக்கூடிய பந்து வீச்சாளராக செயற்பட என்னென்ன தேவையாக இருக்கின்றது என்பது மலிங்கவிற்கு தெரியும். உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான அவர் (இலங்கை) பந்துவீச்சின் தலைமை பொறுப்பிலும் காணப்படுகின்றார். மதிநுட்பமுடைய வீரர்களில் ஒருவராக காணப்படும் மலிங்க இலங்கை அணியை அனைத்துப் பாதைகளிலும் சிறப்பாக கொண்டு செல்ல என்னென்ன தேவை என்பதனையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். பாரிய இலக்குகளும் அதி துரித பாதங்களுமே அவருக்கு தற்போது தேவையாக உள்ளது. எனக்குத் தெரிந்தவரை (அவருக்கு) T20 போட்டிகள் தற்போது அவ்வளவு அவசியமாக இருக்கவில்லை. எது எவ்வாறு இருப்பினும் மலிங்கவின் ஆற்றலிலும் தரத்திலும், எனக்கு துளியளவும் சந்தேகம் இல்லை”
என்று இலங்கை அணிக்கு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களின் பின்னர் திரும்பியிருக்கும் இலங்கை பந்துவீச்சாளர்களில் முக்கியமானவரான லசித் மலிங்க பற்றி அலன் டொனால்ட் மேலதிமாக கருத்து தெரிவித்திருந்தார்.