மேற்கிந்தியத் தீவுகளின் போர்ட் ஒவ் ஸ்பெய்னில் நடைபெற்றுவரும் ட்ரின்பாகோ 2023 பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவில் இலங்கை அணி 2 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
அதன்படி, ஆண்களுக்கான 400 மீட்டர் சட்டவேலி ஓட்டத்தில் அயோமால் அகலங்க வெள்ளிப் பதக்கத்தையும், ஆண்களுக்கான உயரம் பாய்தலில் நிலுபுல பெஹசர வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.
ட்ரின்பாபோ, ஹேஸ்லி க்ரோஃபோர்ட் விளையாட்டரங்கில் இன்று (10) நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் சட்டவேலி ஓட்ட இறுதிப் போட்டியில் இலங்கையின் அயோமல் அகலங்க பலத்த போட்டிக்கு மத்தியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். போட்டியை நிறைவு செய்ய அவர் 51.61 செக்கன்களை எடுத்துக் கொண்டார். குறித்த போட்டி நிகழ்ச்சியில் அவரது 2ஆவது அதிசிறந்த நேரப் பெறுதியாகவும் பதிவாகியது.
முன்னதாக, நேற்று முன்தினம் (08) நடைபெற்ற முதலாவது தகுதிகாண் போட்டியை 51.99 செக்கன்களில் நிறைவு செய்து முதலாம் இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
எவ்வாறாயினும், அயோமால் அகலங்கவின் அதிசிறந்த நேரப்பெறுதி 51.40 செக்கன்களாகும். அம்பகமுவ மத்திய கல்லூரியைச் சேர்ந்த 17 வயதுடைய அயோமால், உஸ்பெகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 5ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 400 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் (51.40 செக்.) வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே குறித்த போட்டியை 51.51 செக்கன்களில் நிறைவு செய்த ஜெமெய்க்காவின் ஸிடேன் அன்தனி றைட தங்கப் பதக்கத்தையும், 52.36 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த இங்கிலாந்து வீரர் ஒலிவர் பாக்கர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
- ஆசிய இளையோர் மெய்வல்லுனரில் அயோமாலுக்கு வெண்கலப் பதக்கம்
- நிலுபுல் வெள்ளிப் பதக்கம் வெல்ல; உபாதையுடன் பதக்கம் வென்றார் கசுனி
- இலங்கைக்காக வரலாற்று வெள்ளிப் பதக்கத்தை வென்ற துஷேன் சில்வா
இதனிடையே, ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் பங்குகொண்ட திக்வெல்ல விஜித மத்திய கல்லூரியைச் சேர்ந்த நிலுபுல் பெஹசர 2.00 மீட்டர் உயரத்தை தாவி வெண்கலப் பதக்கம் வென்றார். அத்துடன் அதே போட்டியில் பங்குகொண்ட லெசந்து அர்த்தவிது 1.95 மீட்டர் உயரத்தை தாவி நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 5ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் (2.01 செக்.) நிலுபுல் பெஹசர வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
இந்த நிலையில், பெண்களுக்கான 400 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட அம்பகமுவ மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஷலனி ஹன்சிகா 4ஆவது இடத்தைப் பிடித்தார். போட்டியை அவர் ஒரு நிமிடமும் 03.44 செக்கன்களில் நிறைவு செய்ததுடன், தனது அதிசிறந்த நேரப்பெறுதியையும் பதிவு செய்தார்.
குறித்த போட்டியில் இங்கிலாந்து வீராங்கனைகள் முதலிரெண்டு இடங்களையும் பிடிக்க, தென்னாப்பிரிக்கா வீராங்கனை வெண்கலப் பதக்கம வென்றார்.
இதேவேளை, பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் இலங்கை வீராங்கனை ஷலனி ஹன்சிகா முனசிங்க 5.65 மீட்டர் தூரம் பாய்ந்து 8ஆம் இடத்தைப் பெற்றார். அப் போட்டியில் 13 வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.
இம்முறை பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டி நிகழ்ச்சிக்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 5 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<