பொதுநலவாய நாடுகளின் பளுதூக்கல் போட்டித் தொடரின் 2ஆவது நாளான நேற்றைய தினம், இலங்கை அணிக்காக சதுரங்க லக்மால் ஜயசூரிய வெள்ளிப் பதக்கத்தையும், ஹங்சனி கோமஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்று கொடுத்தனர்.
அவுஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான பொதுநலவாய மற்றும் ஓஷியானா பளுதூக்கல் போட்டித் தொடருக்காக இலங்கையிலிருந்து 19 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஆண்களுக்கான 56 கிலோகிராம் நிறை பிரிவில் சதுரங்க லக்மால் ஜயசூரிய போட்டியிட்டு மொத்தமாக 247 கிலோகிராம் பாரம் தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், புதிய தேசிய சாதனையும் நிகழ்த்தினார்.
இவர் ஸ்னெச் முறையில் 117 கிலோகிராம் எடையையும், ஜேர்க் முறையில் 130 கிலோகிராம் எடையையும் தூக்கி 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை பெண்களுக்கான 48 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட ஹங்சனி கோமஸ், ஸ்னெச் முறையில் 63 கிலோகிராம் மற்றும் ஜேர்க் முறையில் 86 கிலோகிராம் உள்ளடங்கலாக 149 கிலோகிராம் எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
எனினும் கடந்த மாதம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா பளுதூக்கல் போட்டியில் ஹங்சனி புதிய தேசிய சாதனை நிகழத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2022 பொதுநலவாய நாடுகளின் போட்டிகளிலிருந்து கிரிக்கெட் நீக்கம்
இந்நிலையில் 2016 றியோ ஒலிம்பிக்கில் முதற் தடவையாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியவரும், இம்முறை போட்டித் தொடரில் தங்கப் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுதேஷ் பீரிஸ் தோல்வியைத் தழுவினார்.
ஆண்களுக்கான 62 கிலோகிராம் எடைப்பிரிவில் பங்குபற்றிய அவர், ஸ்னெட்ச் முறையில் 115 கிலோகிராம் எடையையும், ஜேர்க் முறையில் 150 கிலோகிராம் எடையையும் தூக்கி போட்டித் தொடரிலிருந்து வெளியேறினார். ஆனாலும் அவருடன் போட்டியிட்ட திலங்க பலகசிங்க 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, போட்டித் தொடரின் 3ஆவது நாளான இன்றைய தினம், ஆண்களுக்கான பளுதூக்கலில் இந்திக திசாநாயக்க மற்றும் இரு வீராங்கனைகள் போட்டியிடவுள்ளனர்.