பொதுநலவாய விளையாட்டு விழாவின் கிரிக்கெட் தகுதிகாண் தொடர் மலேசியாவில்

255

2022ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டு விழாவிற்குரிய கிரிக்கெட் தொடரில் பங்கெடுக்கவுள்ள எஞ்சிய அணியினை தெரிவு செய்யும் T20 தகுதிகாண் கிரிக்கெட் தொடரானது, செவ்வாய்க்கிழமை (18) மலேசியாவில் ஆரம்பமாகின்றது. 

>> ஷோன் வில்லியம்ஸின் அபார சதத்துடன் சவாலான இலக்கை நிர்ணயித்த ஜிம்பாப்வே

பொதுநலவாய விளையாட்டு விழாவிற்குரிய கிரிக்கெட் தொடருக்குரிய இந்த தகுதிகாண் போட்டிகளில் இலங்கை, மலேசியா, பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து மற்றும் கென்யா என ஐந்து நாடுகளின் மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கெடுக்கின்றன. 

இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்குழாம் சாமரி அத்தபத்துவின் மூலம் வழிநடாத்தப்படுவதோடு, இலங்கை அணி இந்த தகுதிகாண் தொடருக்காக இம்மாத ஆரம்பத்தில் மலேசியா பயணமாகியிருந்தது.

இதேநேரம் 2022ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டு விழாவிற்கான கிரிக்கெட் தொடருக்கு, இவ்விளையாட்டு விழா நடைபெறவுள்ள இங்கிலாந்தினுடைய மகளிர் கிரிக்கெட் அணி அடங்கலாக  2021ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துக்குரிய ஐ.சி.சி. இன் T20I மகளிர் அணிகள் தரவரிசை அடிப்படையில் முதல் ஆறு இடங்களில் காணப்பட்ட நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, பார்படோஸ் மற்றும் தென்னாபிரிக்கா ஆகியவற்றின் மகளிர் கிரிக்கெட் அணிகள் தெரிவாகியிருக்கின்றன. 

>> டெஸ்ட் அணித்தலைவர் பதவியினை துறக்கும் விராட் கோலி

இந்த அணிகளில் பார்படோஸ் என்கிற தனி நாட்டினுடைய மகளிர் அணி பொதுநலவாய விளையாட்டுப் விழாவிற்குரிய கிரிக்கெட் தொடருக்காக மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் சபை மூலம் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றது.

இதேவேளை இந்த மகளிர் கிரிக்கெட் அணிகளுடன் இணைந்து பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் போட்டியிடவுள்ள எட்டாவது அணியே மலேசியாவில் நடைபெறும் தகுதிகாண் போட்டிகளின் மூலம் தெரிவு செய்யப்படவிருக்கின்றது.

அதேநேரம் பொதுநலவாய விளையாட்டு விழாவில் 2022ஆம் ஆண்டிலேயே முதல் முறையாக மகளிர் கிரிக்கெட் இணைக்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் 1998ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டிருந்தன. 

மறுமுனையில் பொதுநலவாய விளையாட்டு விழாவிற்குரிய கிரிக்கெட் தொடரின் தகுதிகாண் போட்டிகளில் பங்கெடுக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சாமரி அத்தபத்து, 2022ஆம் ஆண்டில் நடைபெறுகின்ற மற்றுமொரு சர்வதேச மகளிர் தொடராக இருக்கப் போகும் பொதுநலவாய விளையாட்டு விழாவிற்குரிய கிரிக்கெட் தொடரில் பங்கெடுக்கும் நம்பிக்கையுடன் தமது தரப்பு காணப்படுவதாக குறிப்பிட்டிருக்கின்றார். 

”நாங்கள் (இந்த தகுதிகாண்) தொடரினை வெற்றி கொண்டு அதன் மூலம் பர்மிங்கமில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவிற்கு தெரிவாகுவதற்கான நல்லதொரு வாய்ப்பினைக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் எங்களது குழாத்தில் அனுபவ வீராங்கனைகளினையும், இளம் வீராங்கனைகளினையும் கொண்டிருக்கின்றோம். எங்களது குழாத்தில் ஹர்சித சமரவிக்ரம மற்றும் கவிஷ டில்ஹாரி போன்றோர் எதிர்பார்ப்புக்குரிய வீராங்கனைகளாக காணப்படுகின்றனர்.” 

இலங்கை மகளிர் அணி, இந்த தகுதிகாண் தொடரில் தமது முதல் போட்டியில் எதிர்வரும் 18ஆம் திகதி ஸ்கொட்லாந்தின் மகளிர் வீராங்கனைகளை எதிர்கொள்ளவிருக்கின்றதோடு, அதன் பின்னர் 20ஆம் திகதி கென்யாவினையும் அதன் பின்னர் 22ஆம், 24ஆம் திகதிகளில் முறையே மலேசியா மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றினையும் எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை மகளிர் அணி விளையாடவுள்ள முதல் சர்வதேச தொடராகவும் இந்த தகுதிகாண் போட்டிகள் அமைகின்றன. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<