பொதுநலவாய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் நேற்று(09) ஆரம்பமாகின. இதில் இலங்கை அணியின் அனுபவமிக்க உயரம் பாய்தல் வீரரான மஞ்சுள குமார விஜேசிங்க மற்றும் நீளம் பாய்தல் வீரர் ஜானக பிரசாத் விமலசிறி ஆகியோர் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றனர்.
குத்துச்சண்டையில் இலங்கை வீரர்களுக்கு பதக்கங்கள் பெறும் வாய்ப்பு
அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் 21ஆவது பொதுநலவாய …
நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் பாய்தல் தகுதிச் சுற்றின் ஆரம்பத்தில் 2.15 மீற்றர் மற்றும் 2.18 மீற்றர் உயரங்களை வெற்றிகரமாக பாய்ந்த மஞ்சுள, இறுதிப் போட்டிக்குத் தகுதியைப் பெற்றுக்கொள்வதற்கான 2.21 மீற்றர் உயரத்தை தாண்ட மேற்கொண்ட முதல் முயற்சியில் தோல்வியைத் தழுவினார். எனினும், 2ஆவது முயற்சியை வெற்றிகரமாக தாண்டிய மஞ்சுள இறுதிப் போட்டிக்குத் தகுதியைப் பெற்றுக்கொண்டார்.
இதன்படி, 13 வீரர்களுடன் நாளை(11) மாலை (இலங்கை நேரப்படி 3.30 மணிக்கு) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் மஞ்சுள குமார போட்டியிடவுள்ளார். இதில் ஒலிம்பிக் மற்றும் பொதுநலவாய விளையாட்டு விழா பதக்கங்களை வென்ற வீரர்கள் மஞ்சுளவுடன் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீளம் பாய்தலில் பிரசாத் அபாரம்
ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டிகளின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஏ மற்றும் பி பிரிவுகளாக இன்று(10) நடைபெற்றன. இதன் பி பிரிவில் பங்கேற்ற இலங்கை வீரர் பிரசாத் விமலசிறி, முறையே 7.56, 7.70 மற்றும் 7.84 மீற்றர் தூரங்களைப் பதிவுசெய்து 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். இதேநேரம், ஒட்டுமொத்த வீரர்களின் அடிப்படையில் 10ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், நாளை(11) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.
முன்னதாக நீளம் பாய்தல் போட்டியில் 7.91 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தனது தனிப்பட்ட சிறந்த தூரத்தைப் பதிவு செய்துள்ள பிரசாத், நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் அதனை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2020 இல் தியகமவில் சர்வதேச தரத்திலான விளையாட்டுத் தொகுதி
தியகமவில் சர்வதேச விளையாட்டு கட்டடத் தொகுதி (International Sports Complex), …
இந்நிலையில், பி பிரிவில் முதலிடத்தை பெற்ற அவுஸ்திரேலியாவின் ஹென்ரி பெரைன் 8.34 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து கொண்டதுடன், பொதுநலவாய விளையாட்டு விழா சாதனையையும் நிகழ்த்தினார்.
இதேநேரம், 2016 றியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும், கடந்த வருடம் லண்டனில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கமும் வென்ற தென்னாபிரிக்காவின் லுவோ மனியொங்கா, குறித்த பிரிவில் 7.91 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 3ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரையிறுதியில் ருமேஷிகா
பெண்களுக்கான 200 மீற்றர் தகுதிச் சுற்றுப் போட்டிகள் இன்று காலை(10) கோல்ட் கோஸ்ட் கராரா மைதானத்தில் நடைபெற்றது. இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட ருமேஷிகா ரத்னாயக்க, போட்டியை 23.43 செக்கன்களில் நிறைவுசெய்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். இதன்படி, நாளை(11) நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியிக்கும் அவர் தகுதிபெற்றார்.
பொதுநலவாய விளையாட்டு விழாலை இலக்காகக் கொண்டு கடந்த சில மாதங்களாக அவுஸ்திரேலியாவில் சிறப்பு பயிற்சி முகாமில் கலந்துகொண்ட ருமேஷிகா ரத்னாயக்க, பொதுநலவாய விளையாட்டு விழாவுக்காக அறிவிக்கப்பட்ட உத்தேச மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பெறவில்லை.
எனினும், சிட்னி கிரான்ட் பிரிக்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் பங்கேற்று தனது சிறந்த காலங்களைப் பதிவுசெய்ததன் பிரதிபலனாக இறுதி நேரத்தில் இலங்கை மெய்வல்லுனர் குழாத்துடன் இணைந்துகொள்ளும் வாய்ப்பை அவர் பெற்றுக்கொண்டார்.