இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் நடைபெறவுள்ள 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வுகள் நேற்று (28) பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விளையாட்டு விழா நேற்று (28) தொடக்கம் ஆகஸ்ட் 8ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
பேர்மிங்கம் – தி அலெக்சாண்டர் மைதானத்தில் நடைபெற்ற ஆரம்ப விழா பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியிருந்தது. இந்த நிகழ்வில் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய் கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நீச்சல் வீரர் டொம் டேலி LGBTQ+ உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆரம்ப விழாவில் கலந்துக்கொண்டனர்.
>> பொதுநலவாய போட்டிகளுக்கான இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு
பேர்மிங்ஹம் ஆரம்ப விழாவின் சிறப்பம்சமாக 10 அடி உயர தன்னியக்க இயந்திர காளை மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இரும்பு மற்றும் இயந்திரத் தொழில்களுக்குப் புகழ்பெற்ற பேர்மிங்ஹம் மற்றும் பொதுநலவாயாத்தின் பன்முகக் கலாச்சாரத்தைக் காட்டுவதே வடிவமைப்பின் நோக்கமாக அமைந்திருந்தது.
இதனைத்தொடர்ந்து விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு தொடங்கியது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பளுதூக்கும் வீரர் இந்திக்க திஸாநாயக்க மற்றும் கிரிக்கெட் வீராங்கனை சமரி அதபத்து ஆகியோர் இலங்கை கொடியை ஏந்தியவாறு அணிவகுப்பை வழிநடத்தினர்.
விளையாட்டு விழாவின் போட்டிகள் இன்றைய தினம் (29) ஆரம்பமாகவுள்ளன. இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் 72 நாடுகளைச் சேர்ந்த 5000 விளையாட்டு வீர, வீராங்கனைகள் 280 பதக்கங்களுக்காகப் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> பொதுநலவாய குத்துச்சண்டை இலங்கை அணியில் கிளிநொச்சி வீரர்
இன்று நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு!
ரக்பி செவன்ஸ்
ரக்பி செவன்ஸ் போட்டிகள் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளன. இலங்கை மகளிர் அணி, குழு Aயில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய முதல் போட்டியில் விளையாடவுள்ளது. அதேநேரம் தங்களுடைய இரண்டாவது போட்டியில் மகளிர் அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இலங்கை ஆடவர் றக்பி செவன்ஸ் அணி இன்றைய தினம் பலம் வாய்ந்த நியூசிலாந்துக்கு எதிராகப் போட்டியிட உள்ளது. இலங்கை அணி A குழுவில் இடம்பெற்றுள்ளது.
நீச்சல் போட்டிகள்
பல நீச்சல் போட்டிகளின் ஆரம்ப சுற்று போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. இதில் இலங்கை வீரர் அகலங்க பீரிஸ் 50 மீற்றர் வண்ணத்துப்பூச்சு நீச்சல் போட்டியின் ஆரம்ப சுற்றில் போட்டியிட உள்ளார்.
ஜிம்னாஸ்டிக்ஸ்
ஜிம்னாஸ்டிக் போட்டியில் இலங்கை சார்பில் மூன்று வீராங்கனைகள் போட்டியிட உள்ளனர். ருச்சிர பெர்னாண்டோ, கயாஷான் குமாரசிங்க மற்றும் புத்திக பெர்னாண்டோ ஆகியோர் இன்று களமிறங்க உள்ளனர்.
குத்துச்சண்டை
குத்துச்சண்டை போட்டியில் ஆடவருக்கான 60-63.5 கிலோ லைட் வெல்டர் (Light Welter) எடைப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் சஞ்சீவ பண்டார, இங்கிலாந்தின் ஜோசப் டயர்ஸுடன் ஆரம்ப சுற்றில் இன்று மோதவுள்ளார்.
ஸ்குவாஷ்
ஸ்குவாஷ் போட்டியில் இருந்து இரண்டு வீரர்களும் ஒரு வீராங்கனையும் இன்று விளையாடவுள்ளனர். ரவிந்து லக்சிறி மற்றும் ஷமில் வகீல் ஆகியோர் ஆடவருக்கான 64 வீரர்களுக்கான சுற்றிலும், யெஹானி குருப்பு பெண்கள் 64 வீராங்கனைகளுக்கான சுற்றிலும் விளையாடவுள்ளனர்.
3X3 கூடைப்பந்து
இலங்கையின் 3X3 பெண்கள் மற்றும் ஆண்கள் கூடைப்பந்தாட்ட அணிகள் இரண்டும் இன்று களமிறங்க உள்ளன. ஆண்கள் அணி ஸ்காட்லாந்தையும், பெண்கள் அணி கென்யாவையும் எதிர்கொள்கின்றன.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<