இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் நடைபெற்றுவரும் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவின் ஏழாவது நாள் நிறைவில் இலங்கை பதக்கங்களை வெல்லாத போதும், வெற்றிகள் பலவற்றை குவித்துள்ளது.
இதில் பெட்மிண்டன் போட்டிகளில் தனிநபர், கலப்பு இரட்டையர் மற்றும் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவுகளில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளதுடன், கடற்கரை கரப்பந்தாட்டத்தில் இலங்கை ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. அதுமாத்திரமின்றி ஸ்குவாஷ் ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் இலங்கை வெற்றியை பதிவுசெய்துள்ளது.
>> பொதுநலவாய விளையாட்டு விழாவினை மோசமாக நிறைவு செய்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
ஏழாவது நாளில் இலங்கை வீரர்கள் பங்கேற்ற போட்டிகளின் முடிவுகள்
பெட்மிண்டன்
ஆண்களுக்கான தனிநபர் பெட்மிண்டன் இரண்டாவது சுற்றில் பார்படோஸ் வீரர் ஷே மைக்கல் மார்டினை எதிர்கொண்ட இலங்கை வீரர் நிலூக கருணாரத்ன 2-0 என இலகுவான வெற்றியை பெற்று, மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார்.
போட்டியின் இரண்டு செட்களிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் 21-6 மற்றும் 21-5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றார்.
அதேநேரம் மற்றுமொரு வீரரான துமிந்து அபேவிக்ரம இரண்டாவது சுற்றில் மால்டா வீரர் சாமுவெல் கேஸரை 2-0 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார். இவர் 21-12 மற்றும் 22-20 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றிருந்தார்.
அடுத்த சுற்றில் துமிந்து அபேவிக்ரம இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்தை எதிர்கொள்ளவுள்ளதுடன், நிலூக கருணாரத்ன சிங்கபூர் வீரர் ஜியா ஹெங் தேவை எதிர்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில் கலப்பு இரட்டையர் பிரிவுக்கான இரண்டாவது சுற்றில் பங்கேற்ற இலங்கையின் சச்சின் டயஸ் மற்றும் திலினி ஹெந்தேவா ஆகியோர், கனடா அணியை எதிர்த்து 2-0 என வெற்றிபெற்றுள்ளனர்.
இலங்கை அணிானது 21-11 மற்றும் 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றதுடன், இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் தென்னாபிரிக்க அணியை நாளைய தினம் (06) தினம் எதிர்கொள்ளவுள்ளது.
அதேநேரம் பெட்மிண்டன் போட்டிகளில் நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் பார்படோஸை 2-0 என வீழ்த்திய இலங்கை ஆடவர் இரட்டையர் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. சச்சின் குணதிலக்க மற்றும் புவனேக குணதிலக்க ஆகியோர் பார்படோஸ் அணியை 21-12 மற்றும் 21-9 என வீழ்த்தினர். இவர்கள் இருவரும் தங்களுடைய அடுத்தப்போட்டியில் மாலைத்தீவுகள் அணியை எதிர்கொள்ளவுள்ளனர்.
இதேவேளை பெண்களுக்கான தனிநபர் இரண்டாவது சுற்றில் பங்கேற்ற இலங்கை வீராங்கனை விதுரா சுஷானி, இங்கிலாந்து வீராங்கனை பிரேயா ரெட்பனிடம் 0-2 என தோல்வியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> Photos – Commonwealth Games 2022 – Day 06
ஸ்குவாஷ்
இலங்கை ஆண்கள் இரட்டையர் பிரிவு ஸ்குவாஷ் போட்டியின் இரண்டாவது சுற்றில் இலங்கை அணி 2-0 என வெற்றியை பதிவுசெய்துள்ளது. ரவிந்து லக்சிறி மற்றும் வகீல் ஷமீல் ஆகியோர் இணைந்து கயானா வீரர்களான வில்ஷையர் ஷொமரி மற்றும் கஹ்லீல் ஜேசன் ஆகியோரை வீழ்த்தியுள்ளனர்.
போட்டியின் முதல் செட்டை 11-5 கைப்பற்றிய இவர்கள், இரண்டாவது செட்டை 21-6 என இலகுவாக கைப்பற்றினர். இலங்கை அணியானது, இன்றைய தினம் (05) நடைபெறவுள்ள அடுத்தச்சுற்றில் அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இதேவேளை பெண்களுக்கான இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவை எதிர்கொண்ட இலங்கை அணி 0-2 என தோல்வியடைந்தது. இலங்கை சார்பில் யெஹானி குருப்பு மற்றும் சினாலி சந்திமா ஆகியோர் இந்தியாவின் சுனைனா குருவில்லா மற்றும் அன்ஹட் சிங் ஆகியோரை எதிர்கொண்டு 9-11 மற்றும் 4-11 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தனர்.
கிரிக்கெட்
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இறுதி லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.
ஏற்கனவே பதக்க வாய்ப்பை இழந்திருந்த இலங்கை மகளிர் அணி, தங்களுடைய இறுதி லீக் போட்டியில் தென்னாபிரிக்க அணியை இன்று எதிர்கொண்டது. இந்தப்போட்டியில் 46 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இலங்கை அணி இழந்திருந்ததுடன், தென்னாபிரிக்க அணி 6.1 ஓவர்களில் எவ்வித விக்கெட்டிழப்புமின்றி வெற்றியிலக்கை அடைந்திருந்தது.
>> Photos – Commonwealth Games 2022 – Day 05
குத்துச்சண்டை
ஆண்களுக்கான 51-54 கிலோகிராம் எடைப்பிரிவு குத்துச்சண்டையின் காலிறுதிப்போட்டியில் இலங்கை வீரர் ருக்மால் பிரசன்ன தோல்வியடைந்தார். போட்டியின் கானா வீரர் ஆப்ரஹாம் மென்ஷாஹ்விடம் தோல்வியடைந்த இவர், தன்னுடைய அரையிறுதிக்கான வாய்ப்பையும் இழந்திருந்தார்.
இதேவேளை, பெண்களுக்கான 54-57 கிலோகிராம் எடைப்பரிவு குத்துச்சண்டை போட்டியின் காலிறுதியில் போட்டியிட்ட இலங்கை வீராங்கனை சஞ்சீவனி குரே அரையிறுதி வாய்ப்பை இழந்திருந்தார். காலிறுதிப்போட்டியில் தென்னாபிரிக்காவின் பிவகுலே ஸ்பசிஸிவேயை இவர் எதிர்கொண்டு தோல்வியடைந்திருந்தார்.
கடற்கரை கரப்பந்தாட்டம்
செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில், இலங்கை அணி 2-0 என வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இலங்கையின் மலிந்த மற்றும் அஷேன் ஆகியோர் 21-11 மற்றும் 21-11 என்ற புள்ளிகள் கணக்கில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் அணியின் ஹொட்ஜ் மற்றும் சீபுரூக்ஸ் ஆகியோரை வீழ்த்தினர். இந்தப்போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி இன்று (05) நடைபெறவுள்ள காலிறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இதேவேளை பெண்களுக்கான இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. குறிப்பாக இந்தப்போட்டியில் டிரினட் மற்றும் டொபெகோ அணியைச் சேர்ந்த வீராங்கனை உபாதைக்கு முகங்கொடுத்ததால், இலங்கை அணி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது. இலங்கை அணி காலிறுதியில் இன்றைய தினம் (05) கனடா அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> Photos – Commonwealth Games 2022 – Day 04
பதக்கப்பட்டியல் விபரம் (ஏழாவது நாள்)
இதேவேளை பொதுநலவாய விளையாட்டு விழாவின் ஏழாவது நாள் போட்டிகள் நிறைவில், 51 தங்கப்பதக்கங்கள் உட்பட 132 பதக்கங்களை வென்றுள்ள அவுஸ்திரேலியா பதக்க பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தப்பட்டியலின் இரண்டாவது இடத்தை 42 தங்கப்பதக்கங்கள் உட்பட 118 பதக்கங்களை வென்றுள்ள இங்கிலாந்தும், 17 தங்கப்பதக்கங்கள் உட்பட 59 பதக்கங்களை வென்றுள்ள கனடா மூன்றாவது இடத்தையும் பிடித்துக்கொண்டுள்ளன.
நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
அவுஸ்திரேலியா | 51 | 42 | 39 | 132 |
இங்கிலாந்து | 42 | 44 | 32 | 118 |
கனடா | 17 | 20 | 22 | 59 |
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <