இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் நடைபெற்றுவரும் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவின் ஆறுாவது நாள் நிறைவில், இலங்கை இரண்டு பதக்கங்களை தம்சவப்படுத்தியுள்ளது.
இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன், ஆண்களுக்கான 100 மீற்றர் இறுதிப்போட்டியில் 10.14 செக்கன்களில் போட்டித்தூரத்தை நிறைவுசெய்து வெண்கலப்பதக்கத்தை வென்றுக்கொடுத்தார். அதேநேரம், பரா பரிதி வட்டம் எறிதல் F42 பிரிவு போட்டியில் பங்கேற்ற பாலித்த பண்டார, 44.20 மீற்றர் தூரம் வீசி வெண்கலப்பதக்கத்தை வெற்றிக்கொண்டுள்ளார்.
>> அரையிறுதிக்கு தகுதிபெற்ற யுபுன்! ; காலிறுதிக்கு முன்னேறிய ருக்மால், சஞ்சீவனி!
ஆறாவது நாளில் இலங்கை வீரர்கள் பங்கேற்ற போட்டிகளின் முடிவுகள்
மெய்வல்லுனர்
ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டம்
இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் பொதுநலவாய விளையாட்டு விழாவின் 100 மீற்றர் ஓட்டத்தில் இலங்கைக்கு வரலாற்று வெண்கலத்தை வென்றுக்கொடுத்துள்ளார்.
போட்டித்தூரத்தை 10.14 செக்கன்களில் கடந்து இறுதிப்போட்டியில் இவர் மூன்றாவது இடத்தை பிடித்துக்கொண்டார். இந்தப்போட்டியில் கென்யா வீரர் பெர்டினாண்ட் ஓமயாலா போட்டித்தூரத்தை 10.02 செக்கன்களில் கடந்து தங்கம் வென்றிருந்ததுடன், தென்னாபிரிக்க வீரர் அகானி சிம்பைன் 10.13 செக்கன்களில் போட்டித்தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இதில், 00.01 செக்கன் வித்தியாசத்தில் யுபுன் அபேகோன் வெள்ளிப்பதக்கத்தை தவறவிட்டிருந்தார்.
யுபுன் அபேகோன் அரையிறுதியின் போட்டித்தூரத்தை 10.20 செக்கன்களில் நிறைவுசெய்து நான்காவது இடத்தை பிடித்துக்கொண்டதுடன். இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை தவறவிட்டிருந்தார். எனினும் சிறந்த நேரப்பிரதியை பதிவுசெய்ததன் காரணமாக இவருக்கு இறுதிப்போட்டியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டம்
ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற காலிங்க குமாரகே அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். இவர் முதல் சுற்றின் முதல் கட்டத்தில் பங்கேற்று போட்டித்தூரத்தை 46.53 என்ற செக்கன்களில் நிறைவுசெய்திருந்து நான்காவது இடத்தை பிடித்துக்கொண்டார்.
குறிப்பாக இவர் முதல் 300 மீற்றரில் முதலிடத்தை பிடித்திருந்த நிலையில், கடைசி 100 மீற்றரில் பின்தங்கியிருந்தார். நான்காவது இடத்தை பிடித்து அரையிறுதிக்கான நேரடி தகுதியை இழந்திருந்த இவர், முதல் சுற்றின் முடிவில் சிறந்த நேரப்பிரதிகளை வைத்திருந்த வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால், அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். அரையிறுதிப்போட்டியானது நாளைய தினம் (05) நடைபெறவுள்ளது.
>> Photos – Commonwealth Games 2022 – Day 06
பரிதி வட்டம் எறிதல்
இலங்கை சார்பில் பொதுநலவாய விளையாட்டு விழாவின் மாற்றுத்திறனாளிகளுக்கான பரா பரிதி வட்டம் எறிதல் F42 பிரிவு போட்டியில் பங்கேற்ற பாலித்த பண்டார, இலங்கைக்கு முதல் வெள்ளிப்பதக்கத்தை வென்றுக்கொடுத்துள்ளார்.
இவர் முதல் முயற்சியில் 39.54 மீற்றர் தூரத்துக்கு பரிதி வட்டத்தை எறிந்து குறைந்த தூரத்துடன் போட்டியை ஆரம்பித்திருந்தாலும், அடுத்தடுத்த வாய்ப்புகள் ஒவ்வொன்றிலும் தூரத்தை அதிகரித்துக்கொண்டு 44.20 மீற்றர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கத்தை வென்றுக்கொடுத்துள்ளார்.
இந்தப்போட்டியில், வேல்ஸைச் சேர்ந்த அலெட் டேவிஸ் மற்றும் ஹெரிஸன் வோல்ஸ் ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெண்கலப்பதக்கத்தை வெற்றிக்கொண்டனர்.
ஜூடோ
பெண்களுக்கான 73 கிலோகிராம் எடைப்பிரிவின் இறுதி 16 வீராங்கனைகளுக்கான சுற்றில் பங்கேற்றிருந்த ஹிருனி விதான, மொரீஷியஸ் வீராங்கனையான டிரெஷி டுர்ஹோனிடம் தோல்வியடைந்து காலிறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டார்.
ஸ்குவாஷ்
இலங்கை அணிசார்பில் இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டிகளில் இரண்டு அணிகள் பங்கேற்றிருந்தன. இதில், சினாலி சந்திமா மற்றும் வகீல் சமீல் ஆகியோர் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டனர். இறுதி 32 அணிகளுக்கு இடையிலான இந்தப்போட்டியில், இலங்கை அணி 0-3 என தோல்வியடைந்தது.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற மற்றுமொரு கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் இலங்கையின் ரவிந்து லக்சிறி மற்றும் யெஹானி குருப்பு ஆகியோர் இந்திய அணியை எதிர்கொண்டனர். இதில், முதல் செட்டை 11-8 என கைப்பற்றிய போதும், அடுத்த இரண்டு செட்களையும் 11-4 மற்றும் 11-3 என தோல்வியடைந்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தவறவிட்டனர்.
>> Photos – St. Joseph’s College Vs St Anthony’s College – Dialog Schools Rugby League 2022
பெட்மிண்டன்
இன்றைய தினம் நடைபெற்ற ஆண்களுக்கான தனிநபர் பெட்மிண்டன் போட்டியில், இறுதி 64 வீரர்களுக்கான சுற்றில் பங்கேற்ற இலங்கை வீரர் துமிந்து அபேவிக்ரம அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார்.
இவர் மொரீசியஸ் வீரர் ஆடிஸ் லுபாஹ்வை எதிர்கொண்டு 2-1 என்ற செட்கள் கணக்கில் வெற்றிபெற்றார். முதல் செட்டை 21-7 என கைப்பற்றிய இவர், இரண்டாவது செட்டை 20-22 என இழந்தார். எனினும், 3வது செட்டை 21-11 என வெற்றிக்கொண்டு அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார். இவர் இன்றைய தினம் (4) நடைபெறவுள்ள அடுத்த சுற்றில் மால்டா வீரர் சாமுவேல் காஸரை எதிர்கொள்ளவுள்ளார்.
இதேவேளை இதற்கு அடுத்தப்படியாக நடைபெற்ற ஆண்களுக்கான தனிநபர் போட்டியின் முதல் சுற்றில் உகண்டா வீரர் பிரைடே அட்டாமாவை எதிர்கொண்ட நிலூக கருணாரத்ன, இலகுவான வெற்றியை பதிவுசெய்தார்.
இவர் இரண்டு செட்களையும் 21-6 மற்றும் 21-6 என இலகுவாக கைப்பற்றியதுடன், அடுத்த சுற்றில் இன்றைய தினம் (04) பார்படோஸ் வீரர் ஷே மைக்கல் மார்டினை எதிர்கொள்ளவுள்ளார்.
>> Photos – Commonwealth Games 2022 – Day 04
குத்துச்சண்டை
இலங்கை குத்துச்சண்டை அணிசார்பில் மகளிர் 48-50 கிலோகிராம் எடைப்பிரிவின் காலிறுதிப்போட்டியில் பங்கேற்ற கேஷானி ஹன்சிகா, இங்கிலாந்து வீராங்கனை கார்லி எம்சி நவுலிடம் 5-0 என தோல்வியடைந்தார். இதன்மூலம் அரையிறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் இவர் இழந்திருந்தார்.
அதேநேரம் மகளிருக்கான 45-48 கிலோகிராம் எடைப்பிரிவின் காலிறுதிப்போட்டியில் பொட்ஸ்வானா வீராங்கனை லேதபோ போகமொசோவை எதிர்கொண்ட இலங்கை வீராங்கனை நதீகா புஷ்பகுமாரி 4-0 என தோல்வியடைந்து, அரையிறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்திருந்தார்.
பளுதூக்கல்
ஆண்களுக்கான +109 கிலோகிராம் பளுதூக்கல் போட்டியில் இலங்கை சார்பில் போட்டியிட்ட உஷான் சாருக 8வது இடத்தை பிடித்துக்கொண்டார். இவர் ஸ்னெட்ச் முறையில் 138 கிலோகிராம் எடையை தூக்கியதுடன், கிளீன் எண்ட் ஜெக் முறையில் 175 கிலோகிராம் எடையை தூக்கியிருந்தார். மொத்தமாக இவர் 313 கிலோகிராம் எடையை தூக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பதக்கப்பட்டியல் விபரம் (ஐந்தாவது நாள்)
இதேவேளை பொதுநலவாய விளையாட்டு விழாவின் ஆறாவது நாள் போட்டிகள் நிறைவில், 46 தங்கப்பதக்கங்கள் உட்பட 123 பதக்கங்களை வென்றுள்ள அவுஸ்திரேலியா பதக்க பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தப்பட்டியலின் இரண்டாவது இடத்தை 38 தங்கப்பதக்கங்கள் உட்பட 103 பதக்கங்களை வென்றுள்ள இங்கிலாந்தும், 16 தங்கப்பதக்கங்கள் உட்பட 57 பதக்கங்களை வென்றுள்ள கனடா மூன்றாவது இடத்தையும் பிடித்துக்கொண்டுள்ளன.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <