இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் ஆரம்பித்துள்ள 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவின் முதல் நாள் போட்டிகளின் நிறைவில் இலங்கை சாதகமான சில முடிவுகளை பெற்றுக்கொண்டுள்ளது.
இலங்கை அணியை பொருத்தவரையில் நேற்றைய (29) முதல் நாளில் ரக்பி செவன்ஸ், ஸ்குவாஷ், நீச்சல் போட்டி, குத்துச்சண்டை, பெட்மிண்டன் மற்றும் 3X3 கூடைப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்றிருந்தது.
அந்தவகையில் முதல் நாளில் எதிர்பார்த்தளவு இலங்கை அணி திறமைகளை வெளிப்படுத்தாத போதும், ஸ்குவாஷ் மற்றும் பெட்மிண்டன் போட்டிகளில் வெற்றிகளை தக்கவைத்திருந்தன.
கோலாகலமாக ஆரம்பித்த பொதுநலவாய விளையாட்டு விழா
முதல் நாளில் இலங்கை வீரர்கள் பங்கேற்ற போட்டிகளின் முடிவுகள்
ஸ்குவாஷ்
இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஸ்குவாஷ் 64 வீரர்களுக்கான முதல் சுற்றில் இலங்கை சார்பில் போட்டியிட்ட ரவிந்து லக்சிறி, கயானா வீரர் ஷொமாரி வில்ட்ஷையரை 3-1 என வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார். இவர், நாளைய தினம் ஸ்கொட்லாந்து வீரர் கிரெக் லொப்பனை எதிர்கொள்ளவுள்ளார்.
மற்றுமொரு முதல் சுற்றுப்போட்டியில் ஷமில் வகீல், பார்படோஸ் வீரரை 3-2 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இவர், அடுத்த சுற்றில் நாளைய தினம் இந்திய வீரர் சௌரவ் கோஷலை எதிர்கொள்ளவுள்ளார்.
அதேநேரம் யெஹானி குருப்பு தன்னுடைய முதல் சுற்றில் கயானா வீராங்கனை அஷ்லி கஹ்லீலை 3-2 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார். இவர், நாளைய தினம் இங்கிலாந்து வீராங்கனை ஜோர்ஜியா கென்னடியை எதிர்கொள்ளவுள்ளார்.
நீச்சல் போட்டிகள்
இலங்கை வீரர் அகலங்க பீரிஸ் 50 மீற்றர் வண்ணத்துப்பூச்சு நீச்சல் போட்டியின் ஆரம்ப சுற்றில் நான்காவது ஹீட்டில் போட்டியிட்டு, இரண்டாவது இடத்தை பிடித்துக்கொண்டார்.
எனினும் இவர் போட்டித்தூரத்தை 24.89 செக்கன்களில் நிறைவுசெய்து 22வது இடத்தை மாத்திரமே பிடித்துக்கொண்டதால், அரையிறுதிக்கான 16 வீரர்கள் பட்டியலில் இவரால் இடம்பிடிக்க முடியவில்லை.
பெட்மிண்டன்
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பெட்மிண்டன் போட்டியில் இலங்கை அணி 3-2 என வெற்றிபெற்றுள்ளது.
குழு Aயில் இடம்பிடித்திருந்த இலங்கை அணியானது, அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக சச்சின் டையஸ் மற்றும் திலினி ஹெந்தேவா ஆகியோரின் கலப்பு இரட்டையர் பிரிவு, நிலூக கருணாரத்னவின் ஒற்றையர் பிரிவு மற்றும் சச்சின் டையஸ், நிலூக கருணாரத்ன ஆகியோரின் ஆடவர் இரட்டையர் பிரிவுகளில் வெற்றிகளை பதிவுசெய்திருந்தது.
இதேவேளை, இலங்கை அணியானது தங்களுடைய அடுத்தப்போட்டியில் நாளைய தினம் (30) இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3X3 கூடைப்பந்து
இன்றைய தினம் தங்களுடைய முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய இலங்கையின் 3X3 பெண்கள் மற்றும் ஆண்கள் கூடைப்பந்தாட்ட அணிகள் தோல்விகளை சந்தித்தன.
இலங்கை மகளிர் அணியானது, தங்களுடைய முதல் போட்டியில் கென்யா அணிக்கு எதிராக 21-8 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைய, இரண்டாவது போட்டியில் ஸ்கொட்லாந்து அணியிடம் 21-5 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது.
பொதுநலவாய குத்துச்சண்டை இலங்கை அணியில் கிளிநொச்சி வீரர்
ஆடவர் அணியானது தங்களுடைய முதல் போட்டியில் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக 16-9 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது. பின்னர் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கென்யா அணியை எதிர்கொண்டது. இந்தப்போட்டியில் கடுமையான போட்டியைக் கொடுத்த இலங்கை அணி 18-21 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது.
குத்துச்சண்டை
குத்துச்சண்டை போட்டியில் ஆடவருக்கான 60-63.5 கிலோ லைட் வெல்டர் (Light Welter) எடைப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்திய சஞ்சீவ பண்டார, இங்கிலாந்தின் ஜோசப் டயர்ஸுடன் நடைபெற்ற முதல் போட்டியில் தோல்வியடைந்தார். இவர் இந்தப்போட்டியில் 5-0 என தோல்வியை சந்தித்திருந்தார்.
ரக்பி செவன்ஸ்
மகளிருக்கான ரக்பி செவன்ஸில் A குழுவில் இடம்பெற்றிருந்த இலங்கை மகளிர் அணியானது, தங்களுடைய முதல் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் 57-0 என்ற புள்ளிகள் கணக்கிலும், பின்னர் நடைபெற்ற தங்களுடைய இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 60-0 என்ற புள்ளிகள் கணக்கிலும் தோல்வியடைந்தது.
அதேநேரம் இலங்கை ஆடவர் அணியானது A குழுவில் இடம்பெற்றிருந்ததுடன் தங்களுடைய முதல் போட்டியில் பலம் மிக்க நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு ட்ரை மூலமாக 5 புள்ளிகளை பெற்றிருந்தபோதும், 63-05 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்திருந்தது.
பின்னர் தங்களுடைய இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட இலங்கை அணியானது மூன்று ட்ரைகளை வைத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும். பலம் மிக்க இங்கிலாந்து அணி 47-19 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தப்போட்டியில் வெற்றிபெற்றது.
பதக்கப்பட்டியல் விபரம் (முதல் நாள்)
இதேவேளை பொதுநலவாய விளையாட்டு விழாவின் முதல் நாள் போட்டிகள் நிறைவில், 8 தங்கப்பதக்கங்கள் உட்பட 16 பதக்கங்களை வென்றுள்ள அவுஸ்திரேலியா பதக்க பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தப்பட்டியலின் இரண்டாவது இடத்தை 2 தங்கப்பதக்கங்கள் உட்பட 7 பதக்கங்களை வென்றுள்ள நியூசிலாந்தும், 2 தங்கப்பதக்கங்கள் உட்பட 9 பதக்கங்களை வென்றுள்ள இங்கிலாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்துக்கொண்டுள்ளன.
நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
அவுஸ்திரேலியா | 8 | 4 | 4 | 16 |
நியூசிலாந்து | 3 | 3 | 1 | 7 |
இங்கிலாந்து | 2 | 5 | 2 | 9 |
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<