சிம்ரொனின் போராட்டம் வீண்! ; இலங்கை அணிக்கு இரண்டு தோல்விகள்!

Commonwealth Games 2022

260
Gettyimages

இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் ஆரம்பித்துள்ள 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவின் 3X3 கூடைப்பந்தாட்ட போட்டியில் இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தோல்வியை சந்தித்துள்ளன.

போட்டிகளுக்கான A குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை ஆடவர் அணியானது இன்றைய தினம் ஸ்கொட்லாந்து மற்றும் கென்யா அணிகளை எதிர்கொண்டிருந்தது.

கோலாகலமாக ஆரம்பித்த பொதுநலவாய விளையாட்டு விழா

இலங்கை ஆடவர் அணியை பொருத்தவரை யோகானந்தன் சிம்ரொன் மற்றும் அர்னால்ட் பிரென்ட் தேவகுமார் ஆகிய தமிழ்பேசும் வீரர்கள் விளையாடியிருந்தனர்.

முதல் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியை எதிர்த்தாடிய இலங்கை ஆடவர் அணி 9-16 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதில் சிம்ரொன் அதிகபட்சமாக 5 புள்ளிகளை பெற்றுக்கொடுக்க, சுபுன் ருக்ஷான் 4 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். இதில், அர்னால்ட் பிரென்ட் தேவகுமார் எந்தவித புள்ளிகளையும் பெற்றுக்கொடுக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து இலங்கை ஆடவர் அணியானது கென்யாவை எதிர்கொண்டது. குறித்த இந்தப்போட்டியில் எதிரணிக்கு கடுமையான சவாலை இலங்கை ஆடவர் அணி கொடுத்திருந்தது. போட்டியின் இறுதி நிமிடம்வரை இரண்டு அணிகள் பக்கமும் வெற்றி வாய்ப்பு இருந்த போதும், கென்யா அணியானது 21-18 என்ற புள்ளிகள் கணக்கில் 3 மேலதிக புள்ளிகளால் வெற்றி பெற்றது.

குறிப்பிட்ட இந்த இரண்டாவது போட்டியை பொருத்தவரை இலங்கை அணிக்காக சிம்ரொன் மிகச்சிறப்பாக ஆடினார். இவர் தனியாளாக 13 புள்ளிகளை பெற்றுக்கொடுத்திருந்தார். எனினும், துரதிஷ்டவசமாக அணி தோல்வியை சந்திக்க நேரிட்டது.

இலங்கை மகளிர் அணியை பொருத்தவரை தங்களுடைய முதல் போட்டியில் கென்யாவை எதிர்கொண்டதுடன், 8-21 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டியில் ஸ்கொட்லாந்து அணியை எதிர்கொண்ட இலங்கை மகளிர் அணியானது, 5-21 என்ற புள்ளிகள் கணக்கில் மீண்டும் மோசமான தோல்வியை சந்தித்தது.

இலங்கை ஆடவர் அணி தங்களுடைய அடுத்த போட்டியில் 31ம் திகதி கனடா அணியை எதிர்கொள்ளவுள்ளதுடன், இலங்கை மகளிர் அணி இதே தினத்தில் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<