இந்த ஆண்டு நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் களமிறங்கவுள்ள கொழும்பு அணியின் உரிமத்துவத்தை அமெரிக்காவில் இயங்கி வருகின்ற 27th Investments நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், தலைவருமான அனில் தமானி பெற்றுக்கொண்டுள்ளார்.
27th Investments நிறுவனம் அமெரிக்காவில் உள்ள முன்னணி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். இது வர்த்தக ரீதியிலான நிலங்களை வாங்குகின்ற பிரதான நிறுவனமாகவும், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்குச் சேவைகளை வாங்கும் பல புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு சேவை வழங்குகின்ற நிறுவனமாகவும் உள்ளது.
>> ஜப்னா ஸ்டாலியன்ஸின் புதிய உரிமையாளராக லைக்காவின் அல்லிராஜா சுபாஸ்கரன்
இதனிடையே, லங்கா பிரீமியர் லீக் தொடரில் இணைந்தது குறித்து 27th Investments நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், தலைவருமான அனில் தமானி கருத்து வெளியிடுகையில்,
”கொழும்பு அணியின் உரிமையாளராக இந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக்கில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண லங்கா பிரீமியர் லீக் தொடரானது மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்திருந்தது.
எனவே, இவ்வாறான முக்கிய தருணத்தில் இம்முறை தொடருடன் இணைந்துகொள்ள கிடைத்தமை தொடர்பில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். கொழும்பு அணியை உலகின் தலைசிறந்த T20 லீக் அணிகளில் ஒன்றாக மாற்றுவேன் என நம்புகிறேன் ”அவர் தெரிவித்தார்.
அங்குரார்ப்பண லங்கா பிரீமியர் லீக் தொடர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
>> LPL வீரர்கள் வரைவில் கெயில், டு பிளசிஸ், ரசல், அப்ரிடி உட்பட 74 வெளிநாட்டு வீரர்கள்
அத்துடன், கடந்த ஆண்டு தொடரானது தொலைக்காட்சி, இணைய சேவைகள் மற்றும் பாரம்பரிய ஊடகங்கள் மூலம் 557 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்தடைந்ததாக போட்டியின் ஏற்பாட்டாளர்களான IPG நிறுவனம் தெரிவித்தது.
இதேவேளை, லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது பருவம் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளன.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<