பத்துப் பேர் கொண்ட பெலிகன்ஸ் அணியை வீழ்த்திய கொழும்பு கால்பந்துக் கழகம்

817
Colombo FC vs Pelicans SC

இந்த பருவகால FA கிண்ணத் தொடரின் காலிறுதிக்கு முன்னைய சுற்றில் குருனாகல் பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகத்தை, டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் நடப்புச் சம்பியன் கொழும்பு கால்பந்துக் கழகம் 5-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டு, காலிறுதிக்குத் தெரிவாகியுள்ளது.  

வாய்ப்புகளைத் தவறவிட்ட பாடும்மீன்; காலிறுதியில் புளூ ஸ்ரார்

இத்தொடரின் இதற்கு முன்னைய சுற்றில் பெலிகன்ஸ் அணி, கொம்ரெட்ஸ் விளையாட்டுக் கழகத்தை பெனால்டியில் 4-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியது. எனினும், கொழும்பு கால்பந்துக் கழகம் இதற்கு முன்னைய சுற்றில் யங் பேர்ட்ஸ் அணியுடனான போட்டியை வோக் ஓவர் முறையில் வெற்றி கொண்டது.

இந்நிலையில் கடந்த வருடம் பிரிவு 2 இற்கான தொடரில் (டிவிஷன் 2) இரண்டாம் இடத்தைப் பெற்ற பெலிகன்ஸ் அணியின் சொந்த மைதானமான குருனாகல் மலியதேவ விளையாட்டு மைதானத்தில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி ஆரம்பமாகியது.

ஆட்டம் ஆரம்பித்து முதல் 15 நிமிடங்களுக்குள்ளேயே பெலிகன்ஸ் வீரர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வணி வீரர் A பெர்னாண்டோ சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட, மறுபுறம் எதிரணி பெனால்டி உதைகளின்மூலம் இரண்டு கோல்களையும் பெற்றுக்கொண்டது.

பெலிகன்ஸ் வீரர்கள் முறையற்ற விதத்தில் ஆடியமையினால் தமக்கு 5ஆம் மற்றும் 15ஆம் நிமிடங்களில் கிடைக்கப்பெற்ற இரண்டு பெனால்டி வாய்ப்புக்களையும் கொழும்பு அணியின் பிரபல வீரர் சர்வான் ஜோஹர் கோல்களாக மாற்ற, ஆரம்பத்திலேயே கொழும்பு தரப்பு முன்னிலை பெற்றது.

எனினும் அவ்வணியின் முன்கள வீரரான டிலான் கௌஷல்ய உபாதைக்கு உள்ளாகி வெளியேற, ஆரம்பத்திலேயே மாற்று வீரரைக் களமிறக்க வேண்டிய நிலைக்கு உள்ளானார் பயிற்றுவிப்பாளர் மொஹமட் ரூமி.

ஆட்டத்தின் மேலதிக நேரத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு உள்ளான பெலிகன்ஸ் அணிக்கு எதிராக தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தி வந்த கொழும்பு அணி வீரர்கள், 30ஆவது நிமிடத்தில் நாகுர் மீரா மூலமாக மற்றொரு கோலைப் பெற்றனர். இதன் மூலம் அவர்கள் முதல் பாதியிலேயே தமது வெற்றி வாய்ப்பை அதிகரித்துக்கொண்டனர்.

முதல் பாதி: கொழும்பு கால்பந்துக் கழகம் 3 – 0 பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகம்

பின்னர், பெரும் போராட்டத்தை கொடுக்கும் முனைப்புடன் இரண்டாவது பாதியை ஆரம்பித்த பெலிகன்ஸ் வீரர்களுக்கு எதிர் தரப்பு வீரர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியாமலேயே இருந்தது.

கவிந்து இஷானின் ஹட்ரிக் கோலினால் வீழ்ந்தது மாத்தறை சிட்டி

எனினும் இரண்டாவது பாதியில் நீண்ட நேரத்திற்கு கோல்கள் எதுவும் பெறப்படாமல் ஆட்டம் சென்றுகொண்டிருந்தது.

இந்நிலையில், ஆட்டத்தின் 75ஆவது நிமிடத்தில் தனுஷ்க மதுஷங்க மூலம் மேலும் ஒரு கோலைப் பெற்ற கொழும்பு வீரர்கள், ஆட்டம் நிறைவடைய அண்மித்திருந்த நிலையில், மொஹமட் முபீஸ் மூலம் போட்டியின் இறுதி கோலைப் பெற்றனர்.

முழு நேரம்: கொழும்பு கால்பந்துக் கழகம் 5 – 0 பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

கொழும்பு கால்பந்துக் கழகம் – சர்வான் ஜோஹர் 5’ & 15’, நாகுர் மீரா 30’, தனுஷ்க மதுஷங்க 75’, மொஹமட் முபீஸ் 90+2

மஞ்சள் அட்டை

பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகம் – H.M ஜயதிலக

சிவப்பு அட்டை

பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகம் – A பெர்னாண்டோ 12’