சென்னையின் சவாலை எதிர்கொள்ள கொழும்பு கால்பந்து கழகம் தயார்

407

இந்தியன் சுப்பர் லீக் சம்பியன் அணியான சென்னையின் கால்பந்து கழத்துடனான போட்டிக்கு தமது திட்டத்தில் பெரிய மாற்றங்கள் இன்றி களமிறங்குவதாக கொழும்பு கால்பந்து கழக தலைமை பயிற்றுவிப்பாளர் ருவன் குமார குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) கிண்ண முதல் சுற்று தகுதிகாண் போட்டியில் இலங்கையின் கொழும்பு கால்பந்து கழகம் இந்தியாவின் பலம் மிக்க கழகமான சென்னையின் கால்பந்து கழகத்தை கொழும்பு, ரேஸ் கோஸ் மைதானத்தில் புதன்கிழமை (06) எதிர்கொள்ளவுள்ளது.

கொழும்பு கழகத்துடன் மோதப்போகும் சென்னையின் குழாம் அறிவிப்பு

AFC கிண்ணத்திற்கான ஆரம்பக் கட்ட தகுதியாண் சுற்றில் கொழும்பு கால்பந்து கழகம் பூட்டானின் டிரான்ஸ்போட் யுனைடெட் கழகத்தை 9-2 என்ற மொத்த கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றே சென்னையின் அணியுடனான பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இரண்டு சுற்றுகள் கொண்ட இந்த தகுதிகாண் போட்டிகளில் வெற்றி பெறும் அணி 2019 AFC கிண்ண குழு நிலை போட்டிகளுக்கு முன்னேறும்.

இதனையொட்டி இரு கழகங்களினதும் அதிகாரிகள் மற்றும் அணித்தலைவர்கள் பங்கேற்ற ஊடக சந்திப்பு கொழும்பிலுள்ள இலங்கை கால்பந்து இல்லத்தில் நடைபெற்றது.

இதில் கொழும்பு கால்பந்து கழகம் சார்பில் தலைமை பயிற்றுவிப்பாளர் ருவன் குமார மற்றும் அணித்தலைவர் சரித்த ரத்னாயக்க கருத்து தெரிவித்தனர். இதில் புதன்கிழமை போட்டி பற்றி தலைமை பயிற்றுவிப்பாளர் கருத்துக் கூறும்போது, “நாம் சிறந்த முறையில் தயாராகி உள்ளோம். எமது போட்டி திட்டத்தில் பெரிதாக மாற்றங்கள் செய்யவில்லை என்பதோடு அதே அணியுடன் நாம் ஆடவிருக்கிறோம். எமது எதிரணி வலுவானது என்பதோடு நாம் 90 நிமிடங்கள் பயிற்சி பெற்றோம்.

பூட்டானுக்கு பயணித்ததில் அங்கு நிலவும் காலநிலை காரணமாக நாம் சிறு காயங்களை சந்தித்தோம். நாளை போட்டியில் கடும் சவால் கொடுக்க நாம் எதிர்பார்க்கிறோம். இந்தியன் சுப்பர் லீக் தொடரில் எமது எதிரணியினர் மிகச் சிறந்த ஒரு அணி என்பது எமக்குத் தெரியும்.  

அணியில் பெரிய மாற்றங்கள் இல்லை. பூட்டான் சென்ற அணியில் இருந்து நாம் ஒரே ஒரு மாற்றத்தை செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

கொழும்பு அணித்தலைவர் சரித்த ரத்னாயக்க எதிர்வரும் போட்டி குறித்து நம்பிக்கையை வெளிப்படுத்தினார். “நாம் போட்டிக்கு தயாராக இருப்பதோடு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த எதிர்பார்க்கிறோம். எமது வீரர்கள் நல்ல மனநிலையில் உள்ளனர்” என்றார்.  

சென்னையில் கால்பந்து கழக தலைமை பயிற்றுவிப்பாளர் ஜோன் கிரகோரி கூறும்போது, “கடந்த சில வாரங்களில் நாம் சிறந்த தயார்படுத்தல்களை செய்துள்ளோம். வீரர்கள் உற்சாகத்தோடு இருப்பதோடு ISL இல் இருந்து முதல் அணியாக AFC கிண்ணத்திற்கு தகுதி பெறுவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். நாளைய போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த நாம் எதிர்பார்த்துள்ளோம்.    

நாம் சிறந்த நிலையில் இருப்பதோடு பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. இந்த தொடரில் பங்கேற்பது கழகத்திற்கும் நாட்டிற்கும் எத்தனை முக்கியம் என்பதை வீரர்கள் அறிந்தே உள்ளனர். முடிவுகள் எப்படி இருந்தபோதும் ISL இல் நாம் சிறந்த மனநிலையில் உள்ளோம். பொதுவாக நம்பிக்கை அளவு மற்றும் உற்சாகம் நல்லதாகவும் சாதகமானதாகவும் உள்ளது. கடைசி கட்டங்களில் தகுதி பெறுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது முக்கிய விடயமாகும். கிண்ணத்திற்கான போட்டியின் கீறலில் இருந்தே நாம் ஆரம்பிக்கிறோம். நாம் விளையாடுவதற்கு அதிகம் உள்ளது.  

AFC கிண்ண பிளே ஓப் சுற்றுக்கு தகுதிபெற்ற கொழும்பு கால்பந்து கழகம்

பி.ப 3.30 வழக்கத்திற்கு மாறான போட்டி ஆரம்பிக்கும் நேரம் என்றபோதும் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் முன் தமது சொந்த மைதானத்தில் விளையாடும் கொழும்புக்கு சாதகமானது என்பது எமக்குத் தெரியும். எமது எதிரணி மீது அதிக மதிப்பு வைத்து போட்டியில் வெல்ல நாம் முயற்சிப்போம். அவர்கள் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக விளையாடுகின்றனர். கொழும்பு அணியின் திறன் பற்றி நாம் விழிப்புடன் உள்ளோம். நாம் முன்னிலை பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.

சென்னையின் அணியின் தலைவர் ஜேஜே லால்பக்லு கூறும்போது, “இங்கு நான் கடைசியாக விளையாடியபோது முதல் பாதியில் தடுமாற்றம் கண்டது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. கொழும்பு கழகம் இலங்கையின் சம்பியனாகவும் சிறந்த அணியாகவும் இருப்பதால் போட்டி இலகுவானதாக இருக்காது. நாளை சிறந்த முறையில் செயற்பட்டு வெற்றி பெற நாம் எதிர்பார்த்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.  

தமிழ் நாட்டைச் சேர்ந்த அணியான சென்னையின் கால்பந்து கழகத்தில் 03 பிரேசில் வீரர்கள், ஒரு அவுஸ்திரேலிய வீரர் மற்றும் 08 இந்திய வீரர்கள் உள்ளடங்குவதோடு கொழும்பு அணிக்கு கடும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க