AFC கிண்ண தகுதிகாண் போட்டியில் பூட்டானின் ட்ரான்ஸ்போட் யுனைடெட் கால்பந்து கழக அணியை எதிர்கொள்ளும் கொழும்பு கால்பந்து கழகம், தமது முதலாம் கட்டப் போட்டியின் வெற்றி குறித்து அதிக நம்பிக்கையுடன் உள்ளது.
போட்டிக்கு சிறந்த முறையில் தயாராகி இருப்பதாக கொழும்பு அணியின் தலைவர் ஷரித்த ரத்னாயக்க குறிப்பிட்டார். “அணியாக சிறந்த முறையில் ஆடுவதோடு, நன்றாக பயிற்சி பெற்றிருப்பதால் எமக்கு சாதகமான நிலை உள்ளது” என்று கொழும்பில் செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற போட்டிக்கு முன்னரான செய்தியார் சந்திப்பில் ஷரித்த தெரிவித்தார்.
AFC கிண்ணத்திற்காக கொழும்பு குழாத்தில் மூன்று புது வீரர்கள்
எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள AFC கிண்ண தகுதிகாண் கால்பந்து போட்டிக்காக…
கொழும்பில் உள்ள இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் சந்திப்பில் இரு அணிகளினதும் பயிற்சியாளர்களும் பங்கேற்றிருத்தனர். இதில் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது குறித்து இரு பயிற்சியாளர்களும் நம்பிக்கை வெளியிட்டிருந்தனர்.
AFC கிண்ணத்தின் ஆரம்பக்கட்ட தகுதிகாண் சுற்றுக்கு அப்பால் முன்னேற்றம் காண இந்த இரு அணிகளும் முயற்சிப்பது இது இரண்டாவது முறையாகும். இந்த தகுதிகாண் சுற்றின் முதல் போட்டி பெப்ரவரி 20ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதோடு இரண்டாவது போட்டி பெப்ரவரி 27ஆம் திகதி பூட்டானில் நடைபெறும்.
கொழும்பு கால்பந்து கழகத்தின் தலைமை பயிற்சியாளர் ருவன் பிரியன்த குமார புதன்கிழமை நடைபெறவிருக்கும் போட்டி பற்றி கருத்து கூறும்போது,
“நாம் சிறந்த முறையில் தயாராகி உள்ளோம். பயிற்சிகள் சிறந்த முறையில் இருந்தன. சிறந்த முறையில் ஆடி வெற்றி பெறுவோம் என்று நாம் எதிர்பார்க்கிறோம். எமது சொந்த மைதானத்தில் எமது ரசிகர்களின் ஆதரவுடன் நாம் ஆடுவதோடு காலநிலையும் எமக்கு சாதகமாக இருப்பதால் வெற்றி பற்றி நாம் நம்பிக்கையுடன் உள்ளோம்.
DCL தொடரில் ஏற்பட்ட காயங்கள் காரணமான சேர்க்கப்பட்ட மூன்று வீரர்களுடன் எந்த மாற்றமும் இன்றி அதே குழாமாகவே இந்தப் போட்டியில் நாம் ஆடவுள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.
கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் ட்ரான்ஸ்போட் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான இந்த முதல்கட்ட போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் (ரேஸ்கோஸ்) சர்வதேச அரங்கில் புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கொழும்பு அணி முகாமையாளர் சைப் யூசுப் குறித்த ஊடக சந்திப்பில் கூறியதாவது,
“நாம் முடிந்தவரை சௌகரியமாக இருக்க வேண்டும். ட்ரான்ஸ்போட் யுனைடெட் ஒரு சிறந்த அணி அதனை நாம் இலகுவாக எடுக்க முடியாது. இருக்கும் குழாத்துடன் எம்மால் முடிந்த சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். போட்டிக்கு தகுதியான அணி ஒன்றை அனுப்புவோம். AFC கிண்ணத்திற்காக அணியை தயார் செய்வதற்கு நாம் பாரிய முயற்சிகளை செய்தோம்.
மொஹமட் இம்ரான் கோல் காப்பாளராக போட்டியை ஆரம்பிப்பார். கவிஷ் பெர்னாண்டோ இன்னும் நூறு வீதம் உடல் தகுதி பெறவில்லை. எஞ்சிய அணி வீரர்கள் நாளை (20) தீர்மானிக்கப்படும்” என்று அவர் கூறினார்.
ட்ரான்ஸ்போட் யுனைடெட் அணியில் பூட்டான் தேசிய அணியின் ஐந்து வீரர்கள் இடம்பெற்றிருப்பதோடு 3 வீரர்கள் 2015 ஆம் ஆண்டில் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் இலங்கையில் விளையாடியுள்ளனர்.
ட்ஷரிங் டோர்ஜி, ஹரி குருங் மற்றும் கின்லி வென்சுக் ஆகிய மூன்று வீரர்களுமே முன்னர் இலங்கையில் ஆடியவர்களாவர். அந்தப் போட்டியில் பூட்டான் அணி இலங்கையை 1-0 என தோற்கடித்ததோடு அந்த ஒரு கோலை ட்ஷரிங் டோர்ஜி பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
“எம்மிடம் இருக்கும் அணியைக் கொண்டு கொழும்பு கால்பந்து கழகத்தை வீழ்த்த முடியும் என்று நாம் உறுதியாக உள்ளோம்” என்று பூட்டான் அணி வீரர் ட்ஷரிங் சென்துப் தெரிவித்தார்.
ட்ரான்ஸ்போட் யுனைடெட் தலைமை பயிற்சியாளர் டுனங் டென்டுப் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போது,
“முதல்முறை நாம் கொழும்பு கால்பந்து கழகத்துடன் ஆடுகிறோம். எமது உள்ளூர் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் எம்மால் முன்கூட்டியே வர முடியாமல் போனது.
கொழும்பில் காலநிலை கடும் சூடாக இருந்தபோதும் நாம் சூடான, குளிரான காலைநிலைகளுக்கு பழகிக்கொள்ள வேண்டும் என்பதுவே கால்பந்தின் இயற்கை.
எமது குழாத்தில் 2 நைஜீரிய வீரர்கள் மற்றும் 2 இந்தியர்கள் உள்ளனர். சில பிரச்சினை காரணமாக எமது பிரதான முன்கள வீரர் பாகரே விக்டர் வரவில்லை. என்றாலும் அவர் இன்றி நாம் சமாளிப்போம்” என்றார்.
கொழும்பு கா.க. குழாம்
மொஹமட் இம்ரான், மொமாஸ் யாபோ, எரங்க புத்திக்க பெரேரா, ஷலன சமீர, டிலான் கௌஷல்ய, நிரான் கனிஷ்க, மொஹமட் சர்வான், அஹமட் ஷஸ்னி, மொஹமட் சிராஜ், ரௌமி மொஹிடீன், இடேவ்வோ ஐசாக், மொஹமட் ஆகிப், டிமித்ரி, ஷரித்த பண்டார ரத்னாயக்க, கவீஷ் லக்பிரிய பெர்னாண்டோ, ஆசிகுர் ரஹ்மான், பியுஸ்லஸ் யோகேந்திரன், மொஹமட் பஸால். |
ட்ரான்ஸ்போட் யுனைடெட் குழாம்
ட்ஷரிங் சென்துப், கின்லி பென்ஜோ, கென்சோ டொப்கே, டாவா டெஷரி, டென்சின் டொர்ஜி, கிங்கா வென்சுக், சிமி டொர்ஜி, டின்லி ரப்டென், நொர்பு லெப்சா, சுராஜ் ரசைலி, ஹரி குருங், கின்லி ரெப்கே, டொர்ஜி, செங்கே டொர்ஜி, அபூபக்கர் பாகிய கமரா, கின்லி வென்சு, டொர்ஜி கன்து, கீசெங் ஜெம்டஷோ. |
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<