அரையிறுதிக்குள் ரினௌன் மற்றும் கொழும்பு கால்பந்தாட்டக் கழகம்

473
Renown SC & Colombo FC

ஹிலரி விளையாட்டுக் கழகம் எதிர் கொழும்பு கால்பந்தாட்டக் கழகம்

கார்கில்ஸ் புட் சிட்டி FA கிண்ணத்தின் ஹிலரி விளையாட்டுக் கழகம் மற்றும் கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் ஆகிய அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டி கொழும்பு ரேஸ் கோர்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

போட்டியின் ஆரம்பம் தொடக்கம் ஆதிக்கம் செலுத்திய கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் முதல் 17 நிமிடங்களில் 4 கோல்களைப் போட்டது. அதில் 3 கோல்களை எ.சி. பிரான்க் போட்டார். அதன் பின்பும் தமது ஆதிக்கத்தை செலுத்திய கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் 32 நிமிடங்களில்  7 கோல்களைப் போட்டு ஹிலரி விளையாட்டுக் கழகத்தைப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதன் பிறகு முதல் பாதியின் முடிவில் கொழும்பு கால்பந்தாட்டக் கழகம்  7-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுக் காணப்பட்டது  பின்பு போட்டியின் இரண்டாவது பாதி ஆரம்பித்து 3 நிமிடங்களில் கொழும்பு கால்பந்தாட்டக் கழகத்தால் 8ஆவது கோல் போடப்பட்டது. இவ்வாறு குறிப்பிட்ட இடைவெளிகளில் கோல்களைப் போட்ட கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் போட்டியின் முழு நேர முடிவில் 15 – 1 என்ற ரீதியில் அபார வெற்றியைப் பதிவு  செய்தது. இந்த வெற்றியின் மூலம் கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் கார்கில்ஸ் புட் சிட்டி FA கிண்ணத்தின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் –  பொட்ரி திமித்ரி (கொழும்பு கால்பந்தாட்டக் கழகம்)

போட்டியின் சிறந்த வீரராகத் தெரிவு செய்யப்பட்ட பொட்ரி திமித்ரி கருத்துத் தெரிவிக்கையில் “கடந்த போட்டியில் ஹிலரி விளையாட்டுக் கழகம் சுப்பர் சன் விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்திருந்தமையால் நாம் இப்போட்டியை மிகவும் அக்கறையுடனும் தீவிரமாகவும் எதிர்கொண்டோம். எமக்குத் தெரியும் நாம் வெற்றிபெற நன்றாக விளையாடவேண்டும் என்று. அதற்கிணங்க நாம் சிறப்பாக விளையாடி இருந்தோம். அதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது எனது கால்பந்தாட்ட வாழ்க்கையில் சிறந்த பங்களிப்பாகக் கூறமுடியாது ஆனால் அணியின் வெற்றிக்கு நான் பங்களிப்பு செய்தமையினால் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருந்தார்.

ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் எதிர் ரினௌன் விளையாட்டுக் கழகம்

கார்கில்ஸ் புட் சிட்டி FA கிண்ணத்தின் மற்றுமொரு காலிறுதிப்போட்டி கொழும்பு ரேஸ் கோர்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில்  ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்தை ரினௌன் விளையாட்டுக் கழகம் எதிர்த்து விளையாடியது.

இந்தப் போட்டியின் 9ஆவது  நிமிடத்தில் ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக ரினௌன் விளையாட்டுக் கழகத்தால் முதலாவது கோல்  போடப்பட்டது. அதன் பின் அந்த கோல் போடப்பட்டு 10 நிமிடங்கள் கழித்து 19ஆவது நிமிடத்தில் ரினௌன் விளையாட்டுக் கழகத்தால் இன்னுமொரு கோல் போடப்பட்டது.  இதன் படி 2-0 என்ற அடிப்படையில் ரினௌன் விளையாட்டுக் கழகம் முன்னிலையில் இருந்தது. இவ்வாறு இருக்கையில் போட்டியின் 32ஆவது நிமிடத்தில் ஜாவா லேன் விளையாட்டு கழக டி.சி டி சில்வா என்ற வீரரால் Own Goal போடப்பட்டது இதனால் மேலதிகமாக  ரினௌன் விளையாட்டுக் கழகத்திற்கு  ஒரு கோல் கிடைக்கப்பெற்றது. இறுதியில் முதல் பாதி முடிவில் ரினௌன் விளையாட்டுக் கழகம் 3 – 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.

அதன் பின் இரண்டாவது பாதி ஆரம்பித்தது. இரண்டாவது பாதி ஆரம்பித்து 14 நிமிடங்களில் ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் 59ஆவது நிமிடத்தில் தமது முதலாவது கோலைப் போட்டது. ஆனால் அதன் பின் அவர்களால் கோல்களைப் போட முடியவில்லை.  ஆனால் ரினௌன் விளையாட்டுக் கழகத்தால்  இரண்டு கோல்கள் போடப்பட்டன. இறுதியில் இப்போட்டியை 5-1 என்ற அடிப்படையில் ரினௌன் விளையாட்டுக் கழகம் வெற்றி கொண்டு, கார்கில்ஸ் புட் சிட்டி FA கிண்ணத்தின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.