டயலொக் கழகங்களுக்கு இடையிலான செவன்ஸ் ரக்பி தொடர் இந்த வார இறுதியில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு டன்கன் வைட் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (30) மாலை கோலாகலமாக இடம்பெற்றது.
கண்டி கழகத்தின் எழுவர் ரக்பி பயிற்றுனராக பாஸில் மரிஜா நியமனம்
இதில் கௌரவ விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவுடன் டயலொக் ஆக்சியாட்டா பிஎல்சி நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி அமாலி நாணயக்கார, இலங்கை ரக்பியின் (SLR) துணைத்தலைவர் லசித்த குணரத்ன மற்றும் அதன் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
கௌரவ அமைச்சர் எதிர்வரும் செவன்ஸ் தொடர் பற்றி தனது கருத்தை வெளியிடும்போது, ‘விளையாட்டுக்கு மொழி இல்லை. இதனாலேயே ஒருவருக்கு ஒருவர் பிணைப்பை ஏற்படுத்த நாம் அதனை பயன்படுத்த வேண்டும். விளையாட்டில் நாம் உச்சத்தை பெற முடியும் என்று நான் நம்புகிறேன். அதனை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும்’ என்று கூறினார்.
நாட்டின் விளையாட்டுத் துறையை உயர்த்துவதற்கு தொடர்ந்து பங்களிப்புச் செய்யும் டயலொக் ஆக்சியாட்டா பிஎல்சி நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்க திரு குணரத்ன இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டார். நாடெங்கும் ரக்பி விளையாட்டை பிரபலப்படுத்தும் SLR இன் முயற்சிக்கு பாராட்டு வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு தொடர், முதல் முறையாக இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த இரண்டு கட்டங்களும் கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் (ரேஸ்கோர்ஸ்) மைதானத்தில் நடைபெறவுள்ளதோடு இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்த போட்டிகள் ரக்பி ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த நிகழ்வின்போது, SLR துணைத்தலைவர் லசித்த குணரத்ன கூறியதாவது,
‘முதல் முறையாக இந்த தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறுவதோடு 16 அணிகள் பட்டத்திற்காக போட்டியிடுகின்றன. மேம்பட்டு வரும் சில மாகாண அணிகளும் பங்கேற்பது இந்த ஆண்டு தொடரின் சிறப்பம்சமாகும்’ என்றார்.
எதிர்வரும் பருவத்தில் இலங்கை ரக்பி திட்டம் பற்றி விபரித்த அவர், பல மாற்றங்களும் கொண்டுவரப்படவிருப்பதாக குறிப்பிட்டார்.
முதல் கட்ட தொடர் எதிர்வரும் ஜுன் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் நடைபெறவிருப்பதோடு இதனைத் தொடர்ந்து இறுதிக் கட்ட போட்டிகளை ஜுன் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நடத்த அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொடர் குறித்த புதிய தகவல்கள் மற்றும் நேரடி ஒளிபரப்புகளுக்கு ThePapare.com உடன் இணைந்திருங்கள்.