இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்டத்திற்கான ஐந்து போட்டிகள் இன்று ஆரம்பமாகின.
Photos: SL Army vs Saracens CC – SLC Premier League Tier ‘A’ Tournament
Photos of the SL Army vs Saracens – SLC Premier League Tier ‘A’ Tournament 2016/17
SSC கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்
இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி காலி கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வென்ற காலி கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
எனினும் சிறப்பாக பந்து வீசிய SSC அணியின் பந்து வீச்சாளர்கள் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை வீழ்த்த, காலி கிரிக்கெட் கழகம் 128 ஓட்டங்களுக்கே சுருண்டது. தரிந்து ரத்நாயக்க 25 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். துடுப்பாட்டத்தில் டில்ஹான் குரே அதிகபட்சமாக 50 ஓட்டங்கள் குவித்தார்.
பிரபல NCC அணிக்கு அதிர்ச்சி கொடுத்த பதுரேலிய விளையாட்டுக் கழகம்
அடுத்து தமது முதல் இன்னிங்சிற்காக களமிறங்கிய SSC அணி இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 121 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையிலுள்ளது. தொடக்க வீரர் மினோத் பானுக 73 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்திலுள்ளார்.
போட்டியின் சுருக்கம்
காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 128 (59.1) – டில்ஹான் குரே 50, தரிந்து ரத்நாயக்க 4/25, சச்சித்ர சேனநாயக்க 2/30, விமுக்தி பெரேரா 2/35
SSC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 121/1 (30) – மினோத் பானுக 73*
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்
இப்போட்டி புளூம்பீல்ட் கழக மைதானத்தில் இடம்பெற்றதுடன், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடியது.
தொடக்க வீரர் ஷெஹான் ஜயசூரிய 49 ஓட்டங்களை பெற்று சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற்றுக் கொடுத்த போதிலும் ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, சிலாபம் மேரியன்ஸ் அணி ஒரு கட்டத்தில் 186 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும் கீழ்வரிசை வீரர் அரோஷ் ஜனோத அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 55 பந்துகளில் 4 பௌண்டரிகள், 8 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 80 ஓட்டங்கள் விளாசினார். இவர் 9 ஆவது விக்கெட்டிற்காக மதுக லியனபதிரனகேவுடன் 105 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொள்ள, சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 291 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் அசத்திய சுழற்பந்து வீச்சாளர் லஹிரு பெர்னாண்டோ 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 73 ஓட்டங்களை பெற்றிருந்தது.
போட்டியின் சுருக்கம்
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 291 (60.5) – அரோஷ் ஜனோத 80, ஷெஹான் ஜயசூரிய 49, லஹிரு பெர்னாண்டோ 6/93, வினோத் பெரேரா 2/30, மலித் டி சில்வா 2/48
புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 73/4 (29) – மதுக லியனபதிரனகே 2/13
கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் BRC கழகம்
இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி இன்று கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இன்னிங்ஸ் வெற்றியை தமதாக்கிய புனித ஜோசப் வாஸ் கல்லூரி
அபாரமாக துடுப்பெடுத்தாடி எதிரணியை பந்தாடிய டில்ஷான் முனவீர 21 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 191 ஓட்டங்கள் விளாச, கொழும்பு கிரிக்கெட் கழகம் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 326 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. பந்து வீச்சில் BRC கழகத்தின் தினுக ஹெட்டியாரச்சி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து ஆடுகளம் பிரவேசித்த BRC அணி இன்றைய தினத்திற்காக போட்டி நிறுத்தப்படும் போது விக்கெட் இழப்பேதுமின்றி 56 ஓட்டங்களை பெற்றிருந்தது.
போட்டியின் சுருக்கம்
கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 326 (72.1) – டில்ஷான் முனவீர 191, தினுக ஹெட்டியாரச்சி 6/137, அண்டி சொலமன்ஸ் 3/70
BRC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 56/0 (14)
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம்
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழக அணிகள் மோதிக்கொண்ட இப்போட்டி சோனகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய செரசன்ஸ் விளையாட்டுக் கழகம், மிலிந்த சிறிவர்தனவின் சதத்தின் உதவியுடன் 358 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. மேலும் உமேஷ் கருணாரத்ன 49 ஓட்டங்களையும், ஹர்ஷ குரே 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் இராணுவ விளையாட்டுக் கழகத்தின் துஷான் விமுக்தி மற்றும் விராஜ் புஷ்பகுமார ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.
போட்டியின் சுருக்கம்
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 358 (87.2) – மிலிந்த சிறிவர்தன 121, உமேஷ் கருணாரத்ன 49, ஹர்ஷ குரே 43, விராஜ் புஷ்பகுமார 3/72, துஷான் விமுக்தி 3/118
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்
இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி NCC மைதானத்தில் ஆரம்பமானதுடன், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
தொடக்க வீரர் சதீர சமரவிக்ரம 96 ஓட்டங்களையும் மேலும் மூன்று வீரர்கள் அரைச்சதங்களையும் பெற்றுக்கொள்ள, அவ்வணி இன்றைய ஆட்ட நேர முடிவின்போது 8 விக்கெட்டுகளை இழந்து 301 ஓட்டங்களை பெற்றிருந்தது. பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட அமில அபொன்சோ 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 301/8 (90) – சதீர சமரவிக்ரம 96, அகில தனஞ்சய 59*, பிரபாத் ஜயசூரிய 53*, விஷாத் ரந்திக 53, அமில அபொன்சோ 5/68
நாளை போட்டிகளின் இரண்டவாவது நாளாகும்.