அருட்தந்தை வெபர் அடிகளாரை மதிக்கும் வகையில் மைக்கல்மென் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மட்டுநகரின் பிரசித்தி பெற்ற கூடைப்பந்தாட்ட தொடர்களில் ஒன்றான “வெபர் கிண்ணம்” 49ஆவது ஆண்டாக இந்த வார இறுதியில் (ஓக்டோபர் 20, 21, 23) மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
வெபர் அடிகளார் பற்றி….
மீன்பாடும் தேனாட்டிற்கு தடகளப் போட்டிகள் மற்றும் கூடைப்பந்தாட்டம் என்பவற்றின் மூலம் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியதில் விசேட இடம் வகிப்பவர் அருட்தந்தை வெபர் அடிகளார் ஆவார். கிழக்கு மாகாணத்தின் விளையாட்டு முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய சேவைகளாக பலவற்றை குறிப்பிட முடியும்.
கடந்த 1914ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் (மாசி மாதம்) 20ஆம் திகதி லூசியானாவின் நியூ ஓர்லீன்ஸ் (New Orleans) நகரில் குடும்பத்தின் இரண்டாம் குழந்தையாக பிறந்த இவர், வேதமட கல்வியினை கிராண்ட் கோடேயுவிலும் (Grand Coateu), தத்துவவியல் கல்வியினை சென்.லூயிஸ் (St. Louis) இலும், இறையியல் கல்வியினை சென். மேரி கென்சாசிலும் (St. Mary’s Kansas) கற்று முடித்துவிட்டு 1946ஆம் ஆண்டு இயேசு துறவியின் அழைப்பை ஏற்று, இன்னும் சில துறவிகளுடன் 1947 ஆம் ஆண்டு இலங்கை வந்து சேர்ந்தார்.
தெற்காசிய கராத்தே சம்பியன்ஷிப்பில் ஹெட்ரிக் தங்கம் வென்ற பாலுராஜ்
தெற்காசிய கராத்தே தோ சம்மேளனம் நடாத்திய…
1947 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரிக்கு வந்த இவரின் கவனம் வகுப்பறையின் நான்கு சுவர்களுள் மட்டும் அடங்காமல் கல்லூரியின் விளையாட்டு பயிற்சிக் கூடங்களிலும் விழுந்தது. தடகளப் போட்டிகளில் மிகுந்த ஆர்வமும் கூர்ந்த அவதானமும் கொண்டிருந்த அவர் கல்லூரியின் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமன்றி சகல மெய்வல்லுனர் வீரர்களையும் பயிற்றுவிப்பதிலும் சிறப்பாக செயற்பட்டார்.
இதனையடுத்து மட்டக்களப்பிற்கு ஒரு விளையாட்டு அரங்கு பற்றாக்குறை இருந்ததை கண்ட அருட்தந்தை வெபர் அடிகளார் ஒன்பது ஏக்கர் நிலப்பரப்பை ஒரு அடிவரை மண் இட்டு உயர்த்தி நகரத்தின் மத்தியில் சகல விளையாட்டுகளுக்கும் ஏற்றவாறு விளையாட்டு அரங்கொன்றை அமைக்க அரும்பாடுபட்டிருந்தார். இவ்விளையாட்டரங்கு அவரை கெளரவிக்கும் முகமாக “வெபர் மைதானம்” எனப் பெயரிடப்பட்டது. இந்த விளையாட்டு அரங்கின் மூலமும் அவரது பயிற்றுவிப்பினாலும் தேசிய அடைவுகள் பெற்றோர் எண்ணிலடங்காத கணக்கில் இருக்கின்றனர்.
தனது இறுதிக்காலத்தில் உடல் நலிவுற்ற போதும் அடிகளார் கூடைப்பந்தாட்ட போட்டிகளின் ஒளி நாடாக்கள் மூலம் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து தன் சேவையைத் தொடர்ந்தார்.
அருட்தந்தை ஹேரோல்ட் ஜோன் வெபர் அடிகளாரின் சேவைகளை கெளரவிக்கவும் அவரை ஞாபகப்படுத்துவதற்குமாக அவரின் பெயரில் ஒரு கூடைப்பந்தாட்ட தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது. 1968ஆம் ஆண்டில் மைக்கல்மென் விளையாட்டுக் கழகத்தினால் “வெபர் கிண்ணம்” என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இத்தொடர் தற்போது 49ஆம் ஆண்டினுள் காலடி பதிக்கின்றது.
சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு இம்முறை மாவட்டங்களுக்கு இடையிலான ஒரு தொடராக நடாத்தப்படும் இந்த வெபர் கிண்ணம் எட்டு அணிகளுக்கு இடையில் நடாத்தப்படுகின்றது.
மட்டக்களப்பு சிவப்பு (அணி), மட்டக்களப்பு நீலம் (அணி), காலி, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், பதுளை மற்றும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி (அணி) ஆகியவை இம்முறை கிண்ணத்துக்காக தம்மிடையே போட்டியிடுகின்றன.
தர்ஜினியின் உதவியால் இறுதிப் போட்டியை நெருங்கியுள்ள புனித அல்பான்ஸ்
எட்டு அணிகளும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெறும். இப்போட்டி முடிவுகளின் அடிப்படையில் தத்தமது குழுக்களில் முதலாம் இடத்தினையும் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்ட அணிகள் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகும்.
இதன்படி தொடரின் குழுநிலைப் போட்டிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களிலும் (ஓக்டோபர் 20, 21 ஆம் திகதிகளில்) தீர்மானமிக்க தொடரின் அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை ஞாயிற்றுக்கிழமையும் (ஒக்டோபர் 22ஆம் திகதி) நடைபெறவுள்ளன.
தவிர்க்க முடியாத பல காரணங்களினால் இத்தொடரினை கடந்த சில வருடங்களில் நடத்த முடியாமல் போயிருந்தது. இறுதியாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த தொடரில் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழக அணியினர் சம்பியன் பட்டத்தினை சூடியிருந்தனர்.
இம்முறையும் இந்தப் போட்டித்தொடர் கூடைப்பந்தாட்ட இரசிர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இத்தொடரின் போட்டி முடிவுகள், காணொளிகள் மற்றும் புகைப்படத் தொகுப்புகள் என அனைத்தையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com மூலம் உங்களுக்கு பெற்றுக்கொள்ளலாம்.