பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதில் சிக்கல்

154

பாகிஸ்தானுக்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்குழாத்தில் காணப்பட்ட ஐந்து உறுப்பினர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>>முன்னறிவிப்பின்றி தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் – கோஹ்லி

அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்களான ஷேய் ஹோப், அகில் ஹொசைன் மற்றும் ஜஸ்டின் கிரேவ்ஸ் ஆகிய வீரர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதியாகியிருப்பதோடு, மேற்கிந்திய தீவுகள் அணியின் உதவிப்பயிற்சியாளர் ரொட்டி எஸ்ட்விக், அணியின் வைத்தியர் Dr. அக்ஷாய் மான்சிங் ஆகியோரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேற்கிந்திய தீவுகள் அணி உறுப்பினர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருப்பதோடு, தனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் தற்போது சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் மூவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில், தற்போது அவ்வணியில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான வீரர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்திருக்கின்றது.

மறுமுனையில் மேற்கிந்திய தீவுகள் அணியில் காணப்பட்ட விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான டெவோன் தோமஸிற்கும் விரல் உபாதை ஏற்பட்ட நிலையில் இது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இன்னும் பின்னடைவினை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதேவேளை பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் இடையிலான கிரிக்கெட் தொடர்கள் தொடர்ந்து நடைபெறுவது தொடர்பில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையும் இன்று (16) பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<