இங்கிலாந்தின் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) புதிய தலைவராக இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவியான கிளேர் கோனர் கடந்த முதலாம் திகதி பதவியேற்றுக் கொண்டார்.
கிரிக்கெட் விளையாட்டின் மிகவும் பழையான கிரிக்கெட் கழகமான MCC என்றழைப்படுகின்ற மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (Marylebone Cricket Club) 234 ஆண்டுகால வரலாற்றில் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் பெண் இவராவார்.
மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரவின் பதவிக்காலம் கடந்த வருடம் நிறைவுக்கு வந்தது.
இதனையடுத்து 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் தலைவர் பதவிக்கு இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் இயக்குநரான கிளேர் கோனரின் பெயர் குமார் சங்கக்காரவினால் பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக அவரது பதவி ஒரு வருடம் தாமதமானதுடன், குமார் சங்கக்கார குறித்த பதவியில் தொடர்ந்து செயல்பட்டார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (01) MCCயின் புதிய தலைவராக கிளேர் கோனர் பதவியேற்றுக் கொண்டார்.
- இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் A அணி அறிவிப்பு
- உலகக்கிண்ணத்துக்கு முன்னதாக இலங்கை விளையாடவுள்ள போட்டிகள் அறிவிப்பு!
- இலங்கை U19 அணி வீரர்களுக்கு ஒரு இலட்சம் பண வெகுமதி
இதேவேளை, MCC கழகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கிளேர் கோனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”MCC கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதால் மிகப் பெரிய கௌரவத்தைப் பெற்றுக்கொண்டேன். என்னிடம் உள்ள அறிவை கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த எதிர்பார்த்துள்ளேன். அத்துடன், இந்தப் பதவிக்கு என்மீது நம்பிக்கை வைத்து பரிந்துரைத்த குமார் சங்கக்காரவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், அடுத்த 12 மாதங்களில் MCC கழகத்துக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி, கழகத்தின் ஏனைய உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் பணியாற்ற
எதிர்பார்த்துள்ளேன். அதேபோல, பணிப்பாளர் சபையுடன் எனது அனுபவ வரம்பை வைத்துக்கொண்டு பணியாற்றுவதற்கு முயற்சிப்பேன்” என தெரிவித்தார்.
கிளேர் கோனர் தனது 19ஆவது வயதில் 1995இல் இங்கிலாந்து அணிக்கு அறிமுகமானார், 2000ஆம் ஆண்டில் இங்கிலாந்து மகளிர் அணியின் தலைவியாக நியமிக்கப்பட்டார். தலைவியாக நியமிக்கப்பட்டு வருடம் கழித்து அவுஸ்திரேலியாவுக்கு எதிராக லோர்ட்ஸில் இங்கிலாந்தை வழிநடத்தினார்.
சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரரான கிளேர் கோனர், இங்கிலாந்து அணிக்கு 42 ஆண்டுகளுக்குப் பிறகு முதலாவது ஆஷஸ் சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொடுத்தவர் இவர் என்பதும் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
ஏவ்வாறாயினும், இங்கிலாந்து அணியின் தலைவியாக ஆறு வருடங்கள் செயல்பட்ட பின்னர் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<