MCC இன் முதல் பெண் தலைவராக கிளேர் கொன்னர்

316
Getty Images

கிரிக்கெட் விளையாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்கும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) புதிய தலைவராக, 2021ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இங்கிலாந்து மகளிர் அணியின் முன்னாள் தலைவியான கிளேர் கொன்னர் செயற்பாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம், கிளேர் கொன்னர் சுமார் 233 வருடகால வரலாற்றினைக் கொண்ட மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் முதல் பெண் தலைவராக மாறி புதிய சாதனை ஒன்றையும் படைக்கவுள்ளார்.  

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு

மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் ஆண்டுக் கூட்டம் கடந்த புதன்கிழமை (24) இணையம் வழியே நடைபெற்றது. இந்த ஆண்டுக் கூட்டத்தின் போது மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் குமார் சங்கக்காரவினுடைய சிபாரிசின் பெயரிலேயே கிளேர் கொன்னர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார். 

இதேநேரம், குறித்த ஆண்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட மற்றைய தீர்மானத்திற்கு அமைய கடந்த ஆண்டின் ஒக்டோபர் மாதம் தொடக்கம் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக செயற்பட்டுவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவின் பதவி இன்னும் ஒரு வருட காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக இருக்கும் முதல் பிரித்தானியர் அல்லாத நபரான குமார் சங்கக்கார 2021ஆம் ஆண்டின் ஒக்டோபர் வரை தனது பதவியில் தொடர்ந்து நீடிக்கவுள்ளார். 

மறுமுனையில், தனக்கு கிடைக்கவிருக்கும் புதிய பொறுப்பு பற்றி கிளேர் கொன்னர் இவ்வாறு கருத்து வெளியிட்டார். 

”நான் MCC இன் அடுத்த தலைவராக சிபாரிசு செய்யப்பட்டமைக்கு, மிகவும் பெருமையடைகின்றேன். ஏற்கனவே, கிரிக்கெட் விளையாட்டு எனது வாழ்க்கையினை ஆழமாக அலங்கரித்துவிட்டது. அது இப்போது எனக்கு இந்த கௌரவத்தினையும் பெற்றுத்தந்திருக்கின்றது.” 

மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவர் பதவிக்கு முன்னர் கிளேர் கொன்னர் ஏற்கனவே கிரிக்கெட் விளையாட்டுடன் சார்ந்த பல நிர்வாகப் பொறுப்புக்களில் கடமை புரிந்த அனுபவத்தினைக் கொண்டுள்ளார். தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் மகளிர் கிரிக்கெட் பிரிவுக்கு பொறுப்பாக இருக்கும் அவர், ஐ.சி.சி. இன் மகளிர் கிரிக்கெட் குழுவிலும் 2011ஆம் ஆண்டு தொடக்கம் அங்கத்துவம் பெற்று மகளிர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளிலும் பங்களிப்பு வழங்கி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.  

அதேநேரம் கிரிக்கெட் போட்டிகளை நோக்கும் போது கிளேர் கொன்னர் இங்கிலாந்து மகளிர் அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளிலும், 93 ஒருநாள் போட்டிகளிலும், இரண்டு T20 போட்டிகளிலும் விளையாடியிருக்கின்றார். அதோடு, கிளேர் கொன்னர் 2005ஆம் ஆண்டு மகளிர் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 42 வருடங்களுக்கு வெற்றிபெறுவதற்கு அவ்வணியை வழிநடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<