இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இன்று (07) சிட்னியில் ஆரம்பமாகிய 3ஆவது டெஸ்ட் போட்டியில் நான்காவது நடுவராகப் பணியாற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளயர் போலோசாக், ஆடவர் டெஸ்டில் பணியாற்றும் முதல் பெண் நடுவர் என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், T20 தொடர்களில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 2-1 என அவுஸ்திரேலியா கைப்பற்ற, T20 தொடரை இந்திய அணி 2-1 என வென்றது.
முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவும், மெல்பேர்னில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியும் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. இந்த நிலையில், சிட்னியில் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது.
இலங்கையின் முன்னாள் பயிற்சியாளரை தமக்காக எடுக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை
இதன் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்களை எடுத்துள்ளது.
இதனிடையே, சிட்னி டெஸ்டில் நான்காது நடுவராக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளயர் போலோசாக் பணியாற்றுகிறார். இதன்மூலம் ஆடவர் டெஸ்டில் பணியாற்றும் முதல் பெண் நடுவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
எந்தவொரு தொழில்முறை மகளிர் கிரிக்கெட்டில் விளையாடாத 32 வயதான கிளயர் போலோசாக் 2017இல் முதல்தடவையாக அவுஸ்திரேலியாவின் உள்ளூர் ஆடவருக்கான ஒருநாள் போட்டியொன்றில் கள நடுவராக கடமையாற்றி சாதனை படைத்தார்.
அத்துடன், 2019இல் நடைபெற்ற ஐசிசி இன் டிவிஷன் 2 ஆடவர்களுக்கான ஒருநாள் போட்டித் தொடரில் நமீபியா மற்றும் ஓமான் அணிகளுக்கிடையிலான போட்டியில் கள நடுவராகவும் அவர் செயற்பட்டிருந்தார்.
Video: 2021இல் புதிய வீரர்களுடன் களமிறங்கும் இலங்கை அணி..! |Sports RoundUp – Epi 143
முன்னதாக 2015இல் தாய்லாந்தில் நடைபெற்ற ஐசிசி இன் மகளிருக்கான T20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் நடுவராக செயற்பட்ட அவர், 2016இல் இந்தியாவில் நடைபெற்ற மகளிருக்கான T20 உலகக் கிண்ணத்தில் முதல்தடவையாக பிரதான நடுவர்களில் ஒருவராகவும் செயற்பட்டிருந்தார்.
அதுமாத்திரமின்றி, அதே வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா மகளிர் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் முதல்தடவையாக கள நடுவராகவும் அவர் செயற்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<