இரண்டாம் பாதி அபாரத்தினால் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ரினௌன்

461

குரே விளையாட்டுக் கழகத்துடனான போட்டியில் இரண்டாம் பாதியில் பெறப்பட்ட அபார கோல்களின் உதவியுடன் பெற்ற வெற்றியின் காரணமாக சிடி கால்பந்து லீக் ஜனாதிபதிக் கிண்ணத்திற்கான அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது ரினௌன் விளையாட்டுக் கழகம்.

ஏற்கனவே இடம்பெற்ற தமது முதல் போட்டியில் ரினௌன் அணி ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்திடம் 3-2 என்ற கோல்கள் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்திருந்தது. அதேபோன்று குரே அணி ஜாவா லேனிடம் 6-1 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்திருந்தது.

ஜனாதிபதிக் கிண்ண அரையிறுதிக்குள் ஜாவா லேன் : செளண்டர்சிடம் கோட்டை விட்ட மொறகஸ்முல்ல

எனவே, டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் இரண்டாம் இடத்தைப் பெற்ற பிரபல அணியான ரினௌன் இத்தொடரின் அரையிறுதிக்கு தெரிவாவதற்கு இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய தேவை இருந்தது.

எனவே முக்கிய போட்டியாகக் கருதப்பட்ட இந்த ஆட்டத்தை ரினௌன் அணி தமது தலைவர் மொஹமட் ரிப்னாஸ் இன்றியே எதிர்கொண்டது.

போட்டி ஆரம்பமாகியதில் இருந்து இரு அணிகளும் தமக்கிடையிலான பந்துப் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கு சற்று சிரமப்பட்டன. மைதானத்தின் மோசமான தன்மை இதற்கு முக்கிய காரணியாக இருந்தது.

இந்நிலையில், ஆட்டத்தின் 19ஆவது நிமிடத்தில் ரினௌன் அணியினர் தமது முதல் கோலின்மூலம் முன்னிலையடைந்தனர். குறித்த கோலை சம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல்களுக்கான விருதைப் பெற்ற ஜொப் மைக்கல் பெற்றுக் கொடுத்தார்.

எனினும் அதற்குப் பதில் கொடுக்கும் வகையில், ஆட்டத்தின் 34ஆவது நிமிடத்தில் இரேஷான் க்ரேரோ மூலம் குரே அணியினர் தமக்கான முதல் கோலைப் பெற, முதல் பாதி சமநிலையில் நிறைவுற்றது.

முதல் பாதி: ரினௌன் விளையாட்டுக் கழகம் 1 – 1 குரே விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதி ஆரம்பமாகி சிறிய நேரத்தில் குரே வீரர் நிலன்க ஜயவீர மூலம் நீண்ட தூர உதையின் மூலம் கோல் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டது. எனினும் ரினௌன் கோல் காப்பாளர் உஸ்மான் மூலம் பந்து சிறந்த முறையில் தடுக்கப்பட்டது.

பின்னர் நுட்பமான விதத்தில் பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்ட ரினௌன் வீரர்கள் 50ஆவது நிமிடத்தில் ஜொப் மைக்கல் மூலம் அடுத்த கோலையும் பெற்று முன்னிலையடைந்தனர்.

ரினௌன் அணியின் புதிய வீரரான தரிந்து லக்மால் எதிரணியின் பின்கள வீரர்களைத் தாண்டி எடுத்துச் சென்ற பந்தை இறுதியாக ஜொப் மைக்கலுக்கு வழங்க அவர் அதனை கோலாக்கினார்.

அதனைத் தொடர்ந்து திமுது பிரியதர்ஷனவுடன் இணைந்து செயற்பட்ட லக்மால், பந்தை எடுத்துச் சென்று சிறந்த நிறைவுக்காக பந்தை வழங்க, அதன்போதும் மைக்கல் கோல் ஒன்றைப் பெற்று, தனது ஹட்ரிக் கோலைப் பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து ரினௌன் அணியின் மொஹமட் சாஜித் மற்றும் ஹகீம் காமில் ஆகியோர் மூலம் மேற்கொள்ளப்பட்ட சிறந்த முயற்சிகளை குரே கோல் காப்பாளர் சுதேஷ் சுரங்க சிறந்த முறையில் தடுத்தார்.

தொடர்ந்தும், குரே அணியின் ஜயவீர மற்றும் ரினௌன் அணியின் திமுது மற்றும் லக்மால் ஆகியோர் தமக்கான கோல் வாய்ப்புக்களை அடுத்தடுத்து தவறவிட்டனர்.

எனினும், இரண்டு கோல்களினால் முன்னிலை பெற்றிருந்த ரினௌன் அணியினர், போட்டி முடிவுறுவதற்கு நேரம் அண்மித்திருந்த நிலையில் (மேலதிக நேரத்தில்) ரிஸ்னி மூலம் தமக்கான நான்காவது கோலைப் பெற்றுக்கொண்டது.

முழு நேரம்: ரினௌன் விளையாட்டுக் கழகம் 4 – 1 குரே விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகன்- தரிந்து லக்மால் (ரினௌன் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

ரினௌன் விளையாட்டுக் கழகம் – ஜொப் மைக்கல் 29’, 50, 59’, ரிஸ்னி 90+3’

குரே விளையாட்டுக் கழகம் – இரேஷான் க்ரேரோ 34’