கடந்த வார இறுதியில் இடம்பெற்று முடிந்த சிடி கால்பந்து லீக் ஜனாதிபதிக் கிண்ணத்திற்கான அரையிறுதி ஆட்டங்களில் வெற்றி கொண்டதன்மூலம் ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் மற்றும் கொழும்பு கால்பந்துக் கழகம் என்பன தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளன.
ஜாவா லேன் எதிர் மொறகஸ்முல்ல யுனைடட்
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் அரையிறுதிப் போட்டியில் அனுபவ வீரர் ரிஸ்கானின் இரண்டு கோல்களினால் மொறகஸ்முல்ல யுனைடட் அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய முதல் அணியாக பதிவாகியது.
இரண்டாம் பாதி அபாரத்தினால் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ரினௌன்
பெரும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்போடு சிட்டி கால்பந்து மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் கனவுகளுடன் இரு அணிகளும் களமிறங்கியிருந்தன.
போட்டியின் ஆரம்பத்தில், இத்தொடரின் எப்போட்டியிலும் தோல்வியுறாத ஒரே அணியான ஜாவா லேன் தமது பின்கள வீரர்கள் மூலம் மொரகஸ்முல்ல அணியின் தாக்குதல்களை இலகுவாக முறியடித்தன.
இவ்வானதொரு நிலையில் போட்டியின் 14ஆவது நிமிடத்தில் மொஹமட் அப்துல்லாஹ் பரிமாறிய பந்தின் மூலம், நேர்த்தியான வாய்ப்பொன்றினை உருவாக்கிய மொஹமட் றிஸ்கான் முதல் கோலினைப் பெற்றார்.
இதன்போது தனியொரு வீரராக மொஹமட் றிஸ்கான் சிறந்த முறையில் செயற்பட்டிருந்தது அவரது அணிக்கு பெரும் உதவியாக இருந்தது. பந்தினை நுட்பமாக கையாண்டிருந்த றிஸ்கானிற்கு மேலும் சில வாய்ப்புகள் கிட்டியிருந்த போதும் அவை துரதிஷ்டவசமாக கைகூடியிருக்கவில்லை.
இவ்வாறாக ஜாவா லேனின் ஆதிக்கத்துடன் போட்டி சென்றிருந்த தருணத்தில் மொஹமட் அப்துல்லாஹ்விடம் இருந்து மீண்டும் ஒரு முறை பந்தினைப் பெற்றுக்கொண்ட றிஸ்கான், மொரகஸ்முல்ல அணியின் தடுப்புகளை தனது சாமர்த்தியமான ஆட்டம் மூலம் தகர்த்து, போட்டியின் 21ஆவது நிமிடத்திலேயே இரண்டாம் கோலினையும் பெற்று, 2 கோல்களினால் தனது அணியை முன்னிலைப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், 31ஆம் நிமிடத்தில் மொரகஸ்முல்ல அணியின் VP சகுலதா அவரின் அணி பெற்றுக்கொண்ட ப்ரீ கிக் வாய்ப்பு ஒன்றின் மூலம் கோல் ஒன்றினைப் பெறவிருந்த போதும், அதன் முடிவு சரியாக அமைந்திருக்கவில்லை.
முதல் பாதி: ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் 2 – 0 மொரகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம்
போட்டியின் இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் முதலாம் பாதியில் காட்டியிருந்த அதே ஆதிக்கத்தினை ஜாவா லேன் வெளிப்படுத்தி வலுவாகக் காணப்பட்டது.
இந்நிலையில் பந்தினை திறமையாக நீண்ட தூரத்திற்கு எடுத்து வந்திருந்த மாலக்க பெரேராவிlமிருந்து பெற்றுக்கொண்ட றிஸ்கான், தனது ஹட்ரிக் கோலினை பூர்த்த்தி செய்ய முனைந்திருந்த போதும், பந்து கம்பங்களுக்கு அப்பால் சென்றதால் அவ்வாய்ப்பு கைகூடியிருக்கவில்லை.
பின்னர் ஜாவா லேனின் சிறந்த தடுப்பாட்டத்தினால் அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகிய மொரகஸ்முல்ல அணியின் வீரர்கள் சோர்வடைந்தவர்களாக மாறினர்.
இதனையடுத்து, போட்டி நிறைவடையும் தருணத்தில் தமக்கு கிடைக்கப் பெற்றிருந்த ப்ரீ கிக் வாய்ப்பு மூலம் மொரகஸ்முல்ல அணி ஆறுதல் கோல் ஒன்றினைப் பெறும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும், அதிஷ்டவசமாக ஜாவா லேன் அணியின் கோல்காப்பாளர் தம்மிக்க செனரத் எதிரணியின் முயற்சியை முறியடித்தார்.
முழு நேரம்: ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் 2 – 0 மொரகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம்
ThePapare.com இன் ஆட்டநாயகன் – மொஹமட் றிஸ்கான் (ஜாவா லேன் வி.க)
கோல் பெற்றவர்கள்
ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் – மொஹமட் ரிஸ்கான் 14’&21’
மஞ்சள் அட்டை
ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் – சாமர டி சில்வா 57’, பாஹிம் நிசாம்தீன் 77’
மொரகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம் – தினிது குமார 24’, சம்பத் டயஸ் 63’, மொஹமட் றிஸ்கான் 86’
கொழும்பு கால்பந்துக் கழகம் எதிர் ரினௌன் விளையாட்டுக் கழகம்
டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் தீர்மானம் மிக்க இறுதி ஆட்டத்தில் ரினௌன் விளையாட்டுக் கழகத்திற்கு அதிர்ச்சியளித்திருந்த கொழும்பு அணி, இம்முறை ஜனாதிபதிக் கிணணத்தின் அரையிறுதிப் போட்டியிலும் 2-1 என ரினெளன் அணிக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்தது.
சாத்தியமாகிய சம்பியன்களின் அரையிறுதிக் கனவு
மிக முக்கியமான இந்த போட்டியினை காண பெரும் திரளான ரசிகர்கள் சிடி லீக் கால்பந்து அரங்கில் நிறைந்திருந்தனர். ரினௌன் அணி டயலொக் சம்பியன்ஸ் லீக் தோல்விக்கு சிறந்த பதில் கொடுக்கும் நோக்கோடு இப்போட்டியில் களமிறங்கியது. மறுமுனையில், கொழும்பு கால்பந்து கழகத்திற்கு, இலங்கையில் அதி சிறந்த அணி தாங்கள் தான் என்பதனை நிரூபிக்க மேலுமொரு வாய்ப்பு இப்போட்டி மூலம் கிட்டியிருந்தது.
போட்டியின் ஆரம்பத்திலேயே ப்ரீ கிக் மூலம் பெற்றிருந்த வாய்ப்பொன்றின்போது, கொழும்பு அணி வீரர் நாகுர் மீரா தனது தலையினால் முட்டி பெற்ற கோல் மூலம் அவ்வணி முன்னிலையடைந்தது.
சில நிமிடங்கள் கழித்து, ரினௌன் அணிக்கு பெனால்டி வாய்ப்பொன்று வழங்கப்பட்டது. எனினும் கள நடுவர் லக்மால் வீரக்கொடி, உதவி நடுவருடன் கலந்துரையாடி அது பெனால்டி வாய்ப்பு அல்ல என்று அறிவித்து இலவச உதைக்கு வாய்ப்பு வழங்கினார். ஆனால், குறித்த வாய்ப்பினை ரினௌன் சரிவர உபயோகித்திருக்கவில்லை.
பின்னர் இரு அணி வீரர்களும் போட்டியினை மேலும் விறுவிறுப்பாக்கி அனைவரது கவனத்தினையும் ஈர்த்திருந்தனர். அச்சமயம் கொழும்பு கால்பந்து கழகத்தின் கோல்காப்பாளர் மொஹமட் இம்ரானினால் எதிரணி வீரர் ஜொப் மைக்கலுக்கு சிவப்பு அட்டைக்கான தவறு போன்ற ஒரு தவறு மேற்கொள்ளப்பட்டிருந்த போதும், நடுவரினால் அதற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
அதனால், ஏமாற்றம் அடைந்த ரினௌன் அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் அமானுல்லா போட்டி நடுவரின் தீர்ப்பை விமர்சனம் செய்ததோடு, அமானுல்லா தமது வீரர்களையும் மைதானத்தினை விட்டு வெளியேற்றுவேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இதனால் போட்டி சிறிது நேரம் சலசலப்பிற்கு உள்ளாகியிருந்தது. எனினும், போட்டி முக்கியஸ்தர்களின் முயற்சியினால் நிலைமை சீர் செய்யப்பட்டிருந்தது.
நிலைமை சீரானதன் பின்னர் ப்ரீ கிக் மூலம் ரினௌன் வீரர் மொஹமட் முஜீப் கோல் ஒன்றினைப் பெற்றார். இதனால் இரு அணிகளும் கோல்களில் சமநிலை அடைய போட்டி மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்திருந்தது.
இவ்வாறாக போட்டி விறுவிறுப்பாக செல்லத்தொடங்கிய தருணத்தில், கொழும்பு அணியின் நாகுர் மீரா பந்தினை நீண்ட தூரத்திற்கு கொண்டு சென்று கோல் ஒன்றினைப் பெற முயற்சித்திருந்தார். எனினும் அம்முயற்சி உஸ்மானினால் முறியடிக்கப்பட்டது.
முதலாம் பாதி ஆட்டத்தின் பிற்பகுதியில் சர்வான் தனது சிறந்த ஆட்டத்தின் மூலம் கொழும்பு அணியினை பலப்படுத்திக்கொண்டிருந்த நிலையில் இரண்டாம் கோலினை நுணுக்கமான உதை மூலம் அபிஸ் ஒலயேமி பெற்றுக்கொண்டார்.
முதல் பாதி: கொழும்பு கால்பந்துக் கழகம் 2 – 1 ரினௌன் விளையாட்டுக் கழகம்
போட்டியின் இரண்டாம் பாதி, முதல் பாதி போன்று அவ்வளவு சுவாரசியமானதாக இருக்கவில்லை. அத்துடன் இப்பாதியில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் மற்றும் விளையாடப்பட்டிருந்த விதம் ஆகியவை அனைவரையும் ஏமாற்றும் விதமாக இருந்தது.
முதல் பாதியில் ரினௌன் பயிற்றுவிப்பாளர் ஆவேசமடைந்தது போல இம்முறை நடுவரின் தீர்ப்புக்களால் கொழும்பு அணியின் பயிற்றுவிப்பாளர் மொஹமட் ரூமி பொறுமை இழந்ததை அவதானிக்க முடிந்தது.
பின்னர் இரு அணி வீரர்களினாலும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அவை அனைத்தும் வீணாகிய நிலையில் போட்டி மேலதிக கோல்கள் இன்றி நிறைவை எட்டியது.
முழு நேரம்: கொழும்பு கால்பந்துக் கழகம் 2 – 1 ரினௌன் விளையாட்டுக் கழகம்
ThePapare.com இன் ஆட்டநாயகன் – சர்வான் ஜோஹர் (கொழும்பு கால்பந்துக் கழகம்)
கோல் பெற்றவர்கள்
கொழும்பு கால்பந்துக் கழகம் – நாகுர் மீரா 6’, அபிஸ் ஒலயேமி 44’
ரினௌன் விளையாட்டுக் கழகம் – மொஹமட் முஜீப் 18’
மஞ்சள் அட்டைகள்
கொழும்பு கால்பந்து கழகம் – நாஹூர் மீரா 8’, மொஹமட் இம்ரான் 16’, திலான் கெளசல்யா 26’, நிரான் கனிஷ்க 69’, ரௌமி மொஹிதீன் 77’
ரினௌன் விளையாட்டுக் கழகம் – ஜொப் மைக்கல் 15’, பஷூல் ரஹ்மான் 61’