இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ரினௌவ்ன், வெளியேறின சோண்டர்ஸ், ஜாவா லேன்

498

ஜனாதிபதிக் கிண்ணத்த்திற்கான சிட்டி கால்பந்து சுற்றுத் தொடரின் 3ஆம் சுற்றுப் போட்டிகள் கடந்த வாரம் கிவ் பொய்ண்ட்ஸ் வீதி மைதானத்தில் நடைபெற்றன.

நடந்து முடிந்த நான்கு போட்டிகளின் இறுதியில் இரண்டு வெற்றிகளுடன் முன்னிலையில் காணப்பட்ட கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்டதுடன், ரினௌவ்ன் மற்றும் சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகங்கள் இறுதிப்போட்டியில் இடம் பெறுவதற்கான தீர்க்கமான போட்டியில் மோதிக்கொண்டன.

போட்டி 05- கொழும்பு கால்பந்தாட்டக் கழக்கம் 0-0 ஜாவா லேன் விளையாட்டுக் கழகம், ஏப்ரல் 23

ஏற்கனவே இறுதிப் போட்டிக்குத் தெரிவான கொழும்பு கால்பந்தாட்டக் கழகம், ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்டது. இரு அணிகளுக்கும் கோல் அடிப்பதற்கான வாய்ப்புகள் கிட்டிய போதிலும் போட்டி 0-0 என வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

போட்டியின் ஆரம்பத்திலிருந்தே கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. பல வாய்ப்புகள் உருவாக்கப்பட்டாலும் கோல் போடும் முயற்சிகள் ஜாவா லேன் விளையாட்டுக் கழகத் தடுப்பாளர்களால் முறியடிக்கப்பட்டன.

சிறப்பாக விளையாடிய கொழும்பு கால்பந்தாட்டக் கழகத்திற்கு சர்வான் ஜோஹர் மற்றும் துவான் ரிஸ்னியின் உள்ளனுப்பப்பட்ட பந்துகளை கோலாக்கும் ப்ராங்க்கின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்திற்குக் கிடைத்த ப்ரீகிக் வாய்ப்பை கொழும்பு கால்பந்தாட்டக் கழகத்தின் கோல் காப்பாளர் இம்ரான் தடுத்தார். முதலாவது பாதியின் இறுதியில் ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் கோலொன்றை அடித்த போதிலும் ஓப்சைட் நியதி மூலம் நிராகரிக்கப்பட்டது.

இரண்டாவது பாதி ஆட்டத்திலும் கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் தம் கட்டுப்பாட்டான விளையாட்டின் மூலம் பந்தை தம்வசம் வைத்திருந்தனர். எனினும் கவுண்டர்அட்டாக்கிற்கு பெயர் போன ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் வாய்ப்புகளை உருவாக்கத் தொடங்கினர்.

ஜாவா லேனிற்குக் கிடைத்த அருமையான வாய்ப்பை கோல் கம்பத்திற்கு மேலாக ரிஸ்கான் அடித்தார். மேலும் மாலக பெரேராவும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார்.

இவற்றிற்கு பதிலடி கொடுக்கும் முகமாக கொழும்பு கால்பந்தாட்டக் கழகத்தின் தலைவர் போர்டி டிமிட்ரி அடித்த பந்து கோல் காப்பாளர் தம்மிக செனரத்தினால் தடுக்கப்பட்டது. இவ்வாறு இரு அணி வீரர்களும் தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை தவறவிட போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

சிறப்பாட்டக்காரர் போட்ரி டிமிட்ரி

போட்டி 06- ரினௌவ்ன் விளையாட்டுக் கழகம் 5-4 சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம், ஏப்ரல் 24

சிட்டி லீக் சுற்றுத் தொடரின் ஆரம்பக்கட்ட போட்டிகளின் இறுதியாட்டத்தில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் நோக்குடன் ரினௌவ்ன் விளையாட்டுக் கழகம் மற்றும் சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகியன பலப்பரீட்சை நடாத்தின.

ரசிகர் கூட்டம் நிறைந்த கிவ் பொய்ண்ட்ஸ் வீதி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஆரம்பத் தருணங்களிலேயே சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் கோலொன்றைப் போட்டு முன்னிலை  பெற்றது. 8வது நிமிடத்தில் மொஹமட் ரிப்கானின் தவறான நடவடிக்கையினால் கிடைக்கப் பெற்ற பெனால்டி வாய்ப்பை சஜித் தர்மபால கோலாக்கினார்.

சளைக்காமல் விளையாடிய ரினௌவ்ன் விளையாட்டுக் கழகம் கோலொன்றைப் போட முழு முயற்சியுடன் போராடியது. முயற்சியின் பலனாக ரினௌவ்ன் விளையாட்டுக் கழகத்திற்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மொஹமட் பசால் கோலாக்கினார். மேலும் சிறப்பாக விளையாடிய ரினௌவ்ன் விளையாட்டுக் கழகம் முதலாவது பாதி முடிவடையும் முன்பு இன்னொரு கோலைப் போட்டது. பிரசாத் யோகராஜா அனுப்பிய பந்து சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தடுப்பாளரில் பட்டு கோல் கம்பங்களினுட் சென்றது.

இரண்டாவது பாதியினை சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் பிரகாசமாக ஆரம்பித்தாலும் கவுண்டர்அட்டாக் முறை மூலம் 53வது மற்றும் 58வது நிமிடங்களில் உடனுக்குடன் இரு கோல்களைப் போட்டு 4-1 என்ற ரீதியில் முன்னிலை பெற்றது. ரினௌவ்ன் விளையாட்டுக் கழக வீரர் ஜொப் மைக்கேல் இரண்டு கோல்களையும் அடித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மனம் தளராது விளையாடிய சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 71வது நிமிடத்தில் இரண்டாவது கோலைப் போட்டு போட்டியை சூடு பிடிக்கச் செய்தது. புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட சோண்டர்ஸ் விளையாட்டுக் கழக வீரர் தெனெத் சங்கல்ப 81வது நிமிடத்தில் மற்றுமொரு கோலைப் போட்டு சோண்டர்ஸ் அணிக்கு ஊக்கமளித்தார்.

எனினும் ஜொப் மைக்கேல் 85வது நிமிடத்தில் மற்றுமொரு கோலைப் போட்டு ஹட்ட்ரிக் அடித்தது மட்டுமல்லாமல் ரினௌவ்ன் விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டியில் பங்குபெறும் வாய்ப்பையும் உறுதி செய்தார்.

போட்டியின் இறுதி நிமிடங்களில் சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் சைதன்ய கோலொன்றைப் போட்டாலும் அவரால் சோண்டர்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச்செல்ல முடியாமற் போனது. போட்டியை 5-4 என்ற ரீதியில் வெற்றி கொண்ட ரினௌவ்ன் விளையாட்டுக் கழக வீரர்கள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.

சிறப்பாட்டக்காரர் ஜொப் மைக்கேல்

அனைத்துச் சுற்றுப் போட்டிகளும் முடிவடைந்த நிலையில் முதலிரண்டு இடங்களை கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் மற்றும் ரினௌவ்ன் விளையாட்டுக் கழகங்கள் சுவீகரித்துக் கொண்டன. மூன்றாமிடத்தை ஜாவா லேன் விளையாட்டுக் கழகமும் நான்காமிடத்தை சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டன. 30ம் திகதி நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் கொழும்பு கால்பந்தாட்டக் கழகமும் ரினௌவ்ன் விளையாட்டுக் கழகமும் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.

இவ்விரு அணிகளும் மோதிய முதலாவது சுற்றுப்போட்டித்தொடரில் 3-0 என கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் வெற்றிபெற்றிருப்பினும் இறுதிப்போட்டியில் ரினௌவ்ன் வீரர்கள் கொழும்பு கால்பந்தாட்டக் கழக வீரர்களுக்கு பெரும் நெருக்கடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.