ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் உலக சம்பியனான அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மன் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தோஹாவில் கடந்த வருடம் செப்டம்பர், ஒக்டோபர் மாதங்களில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கோல்மன் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். போட்டியை அவர் 9.76 செக்கன்களில் கடந்து உலக சம்பியனாக மகுடம் சூடினார்.
கோமதியின் தங்கம் பறிமுதல்: இலங்கை வீராங்கனைக்கு பதக்கம்
இந்த நிலையில் கோல்மன் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போட்டி இல்லாத காலங்களிலும் உலகின் முன்னணி வீர வீராங்கனைகள் ஊக்கமருந்து பரிசோதனைக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
அதற்காக அவர்கள் பயிற்சி செய்யும் இடம், நேரம், இதர பணிகள் உள்ளிட்ட விபரங்களை முன்கூட்டியே ஊக்கமருந்து தடுப்பு பிரிவுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் 60 நிமிடங்கள் தான் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு பரிசோதனைக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம்.
ஓராண்டில் மூன்று முறை தாங்கள் எங்கு இருக்கிறோம் என்ற தகவலை தெரிவிக்கும் விதிமுறையை மீறும் போது தடை நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.
இந்த நிலையில், கிறிஸ்டியன் கோல்மன் ஏற்கனவே கடந்த வருடம் ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் தான் எங்கு இருக்கிறேன் என்ற விபரத்தை தெரிவிக்காமல் ஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறியிருந்தார். அதேபோல, கடந்த டிசம்பர் 9ஆம் திகதியும் ஊக்கமருந்து பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள தவறினார்.
400 மீற்றர் உலக சம்பியனான சல்வா நாஸருக்கு இடைக் காலத்தடை
எனவே, ஓராண்டில் 3ஆவது முறையாக இந்த விதிமுறையை மீறியதால் அவரை உலக ஊக்கமருந்து தடுப்பு முகாமை நிறுவனத்தின் மெய்வல்லுனருக்கான நேர்மை பிரிவு “Athletics Integrity Unit” தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.
இதன்படி, கிறிஸ்டியன் கோல்மன் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் வரை போட்டித்தடை விதிக்கப்படும். அவ்வாறு நிகழ்ந்தால் அவரால் 2021ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாது.
இதனிடையே தன்மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து 24 வயதான கோல்மன் டுவிட்டரில் அளித்த விளக்கத்தில்,
”கடந்த வருடம் டிசம்பர் 9ஆம் திகதி குறிப்பிட்ட நேரத்தில் நான் வீட்டுக்கு பக்கத்தில் சிறிது நேரம் ஷொப்பிங் சென்று விட்டு வந்தேன். அந்த இடைவெளியில் ஊக்கமருந்து எடுப்பவர் எனது வீட்டுக்கு வந்து விட்டு சென்றதாக கூறுகிறார்கள்.
ஆனால், அவர் ஒரு மணி நேரம் அங்கு இருக்கவில்லை. அவர் எனக்கு தொலைபேசி அழைப்பினை செய்திருந்தால், நான் வீட்டிலேயே இருந்திருப்பேன். வழக்கமாக மாதிரிகள் சேகரிக்க வரும் நபர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்வார்.
ஆனால், இந்த முறை நான் இந்த பரசோதனையை தவறவிட வேண்டும் என்று உள்நோக்கத்துடன் செயல்பட்டு இருப்பது போல் தோன்றுகிறது.
Y’all know this is wrong @aiu_athletics something needs to change. “Integrity unity” smh pic.twitter.com/Z2TQvNt8hQ
— Christian Coleman (@__coleman) June 16, 2020
இந்த சம்பவத்துக்கு பிறகு கூட நான் பல முறை ஊக்கமருந்து பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு உள்ளேன்.
உடல்திறனை அதிகரிக்க நான் ஒரு போதும் ஊக்கமருந்து பயன்படுத்தியதில்லை. ‘நான் தவறு செய்வதில்லை‘ என்பதை நிரூபிக்க எனது விளையாட்டு வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஊக்கமருந்து பரிசோதனைக்கு தயாராக இருப்பேன்.
உலக மற்றும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகாமையின் நடவடிக்கைகளுக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு. ஆனால் தற்போதைய நடைமுறைகளில் மாற்றம் தேவை” என்று கூறியுள்ளார்.
முன்னதாக தோஹாவில் கடந்த வருடம் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்புக்கு முன்பாக கிறிஸ்டியன் கோல்மன் இத்தகைய பிரச்சினையில் சிக்கினார்.
எனினும், தொழில்நுட்ப குளறுபடியை காரணம் காட்டி அதிலிருந்து அவர் தப்பித்தார். இப்போது அவர் மறுபடியும் இதே சிக்கலில் மாட்டிக்கொண்டு தற்காலிக தடைக்கு உள்ளாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க…