தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட இங்கிலாந்துப் பயிற்சியாளர்

271
Chris Silverwood

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டு வந்த கிறிஸ் சில்வர்வூட் பதவி விலக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> அக்ரமின் உலக சாதனையுடன் இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான் U19 அணி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய அணியிடம் இறுதியாக நடைபெற்ற ஆஷஸ் தொடரினை 4-0 என மோசமான முறையில் பறிகொடுத்ததன் பின்னர், அவ்வணியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுவருகின்றன.

அந்த வகையில் இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணியின் முகாமையாளராக இருந்த ஏஷ்லி கில்ஸ் இவ்வார ஆரம்பத்தில் பதவி விலக்கப்பட்டிருந்ததோடு, அவரினை அடுத்து அதிரடியான முறையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் பதவி விலக்கப்பட்டிருக்கின்றார்.

அதேநேரம் தற்போது மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுடன் ஆடவுள்ள டெஸ்ட் தொடரின் முன்னர், இங்கிலாந்தின் தற்காலிக கிரிக்கெட் இயக்குனராக இருக்கும் அன்ட்ரூ ஸ்ரவ்ஸ் மூலம் பயிற்சியாளர் ஒருவரினைப் பெற்றுக்கொள்ளும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

கடந்த 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்ட கிறிஸ் சில்வர்வூட், 2019ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரினை அடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றிருந்தார்.

தொடர்ந்து சில்வர்வூடின் ஆளுகையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் ஒன்றினை அவர்களின் மண்ணில் வைத்து கைப்பற்றியிருந்ததோடு, அதன் பின்னர் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடர் வெற்றிகளையும் பதிவு செய்திருந்தது.

>> டெர்பிஷயர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட சுரங்க லக்மால்

எனினும் அதற்குப் பின்னர் இந்தியா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவற்றுக்கு எதிரான தொடர்களைப் பறிகொடுத்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி இறுதியாக அதன் பயிற்சியாளருக்கு தற்போது பிரியாவிடை வழங்குகின்றது.

இங்கிலாந்து அணியில் இருந்து விடுகை பெறுகின்ற கிறிஸ் சில்வர்வூட் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினைப் பயிற்றுவித்தது தனக்கு மிகப் பெரும் கௌரவம் எனக் கூறியிருந்ததோடு, இங்கிலாந்து அணியின் எதிர்கால முன்னேற்றத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<