இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் போராடி தோல்வியடைந்தமை ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்த இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வுட், இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து அணி இம்முறை T20 உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான தோல்வியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வுட், தான் முன்னர் பயிற்றுவித்த இங்கிலாந்து அணிக்கு T20 உலகக் கிண்ணத்தை வெல்ல வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இலங்கையை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பெற்ற இங்கிலாந்து
மேலும், இலங்கை அணியின் இம்முறை T20 உலகக் கிண்ண அனுபவம் மற்றும் இலங்கை அணியுடனான தனது எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஊடகங்களுக்கு அவர் கருத்து வெளியிட்டார்.
இதில் இங்கிலாந்து அணியை மீண்டும் சந்தித்த அனுபவம் என்ன என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
”கடந்த சில நாட்களாக என்னிடம் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகளில் இதுவும் ஒன்று. ஆனால் எனக்கு இது ஒரு விளையாட்டு மட்டுமே. இங்கிலாந்து அணியில் எனது நண்பர்களும் உள்ளனர். பழைய பழக்கமான முகங்களை மீண்டும் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நாங்கள் வெற்றியை எதிர்பார்த்து தான் களமிறங்கினோம். எங்களால் முடிந்ததைச் செய்து அந்த இலக்கை அடைய நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே தயாராக இருந்தோம். அதற்காக கடந்த சில மாதங்களாக எமது வீரர்கள் பெற்றுக் கொண்ட நுட்பங்களை பயன்படுத்துவதைப் பார்க்க ஆவலுடன் இருந்தேன்.
ஆனால், இங்கிலாந்துக்கு எதிராக நாங்கள் தோற்றது மிகவும் வேதனையளிக்கிறது. ஆனால், எமது வீரர்கள் நிறைய பேர் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியதை பார்க்க முடிந்தது. குறிப்பாக, நாங்கள் இங்கிலாந்துக்கு சிறந்த போட்டியைக் கொடுத்திருந்தோம்.
பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் இங்கிலாந்து அணியின் வெற்றிக்காக சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடியிருந்தார். அந்த நேரத்தில் நாங்கள் இன்னும் ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தால் அது மிகவும் இறுக்கமான ஆட்டமாக இருந்திருக்கும்” என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து அணியின் ஆணிவேராக பென் ஸ்டோக்ஸ் இருந்து வருவதாகவும், அணிக்கு தேவைப்படும் நேரத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
இது இவ்வாறிருக்க, இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து அணி வெல்வதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், மற்ற அணிகளும் மிகவும் சிறப்பாக இருப்பதால் எதுவும் நடக்கலாம் என்றும் சில்வர்வுட் கூறினார்.
”உண்மையைச் சொன்னால் நான்கு அணிகளில் எந்த அணிக்கும் இம்முறை T20 உலகக் கிண்ணத்தை வெல்ல முடியும். ஆனால், எனது பழைய நண்பர்கள் அதிகம் உள்ள இங்கிலாந்து அணி T20 உலகக் கிண்ணத்தை வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்றார்.
இதற்கிடையில், போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட சிட்னி ஆடுகளம் ஏற்கனவே தாம் விளையாடிய ஆடுகளம் என தெரிவித்த அவர், குறித்த ஆடுகளம் எவ்வாறு போட்டியை பாதித்தது என்பது குறித்தும் கருத்து தெரிவித்தார்.
‘நாங்கள் எப்போதும் மூன்று சுழல் பந்துவீச்சாளர்களுடன் விளையாடுகிறோம். தேவைப்பட்டால் சரித் அசலங்கவின் ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்வோம். இன்னொரு மேலதிக சுழல் பந்துவீச்சாளருடன் விளையாடியிருந்தால் அணியின் சமநிலை பாதிக்கப்பட்டிருக்கும். சுழல் பந்துவீச்சின் மூலம் ஏதாவது செய்ய முடியவில்லை என்றால், நாங்கள் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்போம். எனவே எமது பந்துவீச்சில் பன்முகத்தன்மையை வைத்திருக்க விரும்பினோம்.
இந்த மைதானத்தில் நாங்கள் விளையாடிய முந்தைய போட்டியைப் போலவே, பந்து தரையைத் தாக்கி மெதுவாக துடுப்பு மட்டைக்கு வரும் என்பதை எங்கள் ஆட்டத்திற்கு முன், நாங்கள் விளையாடிய அனுபவத்திலிருந்து அறிந்தோம். நாங்கள் இன்னும் 20 ஓட்டங்களை எடுத்து 160 ஓட்டங்களைப் பெற்றிருந்தால், போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்” என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஆசியக் கிண்ணத்தை வென்றது குறித்தும், அதன்பிறகு உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் முன்னேற்றம் குறித்தும் கேட்டபோது சில்வர்வுட் பதிலளிக்கையில்,
‘ஆசிய கிண்ணத்தை வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது இலங்கையைப் பொறுத்தமட்டில் வரலாற்று வெற்றி. இலங்கை மக்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்க கிடைத்தமை உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், இலங்கை ரசிகர்களிடமிருந்து எங்களுக்கு கிடைத்த ஆதரவும் அளப்பெரியது.
ஆசியக் கிண்ணத்திற்கு முந்தைய சுற்றுப்பயணத்தில் இருந்தே மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் முன்னேற்றம் காண விரும்பினேன். இணைப்பாட்டத்தை தக்கவைப்பது, பந்துவீச்சாளர்களை எவ்வாறு முகங்கொடுப்பது, பொறுமையாக விளையாடுவதற்கான சூழ்நிலைகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் நீங்கள் கீழே இருக்கும் போது எப்படி மீண்டு எழுவது போன்ற விடயங்களை எமது வீரர்களிடம் இருந்து பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். களத்தில் அவர்களது சொந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதையும், அவரவர் வழியில் விளையாடி முன்னேறுவதையும் பார்க்க விரும்பினேன்’ என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் முன்னணி வீரர்கள் உபாதைகளுக்கு முகங்கொடுத்தது இலங்கை அணியின் பின்னடைவுக்கு மற்றுமொரு காரணமாக அமைந்தது. இதுதொடர்பில் சில்வர்வுட் கருத்து தெரிவிக்கையில்,
”எங்களுக்கு உபாதைகளால் துரதிர்ஷ்டம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இவ்வாறான விடயங்களை நாம் சரியாகப் பார்க்க வேண்டும். இலங்கையில் இதற்கான ஏற்பாடுகளை நானும் எனது பயிற்றுவிப்புக் குழாத்தில் உள்ள ஏனையவர்களும் கவனித்து வருகிறோம். நான் இப்போது அந்த விடயங்களைப் பற்றி விரிவாகப் பேசப் போவதில்லை. அவ்வாறு செய்வது சற்று நியாயமற்றது. ஆனால் நாம் நிச்சயமாக எதை மேம்படுத்த முடியும் என்று தேடுகிறோம். ஏனெனில் குறைபாடுகளுடன் வாழ்க்கையில் முன்னேறுவது மிகவும் கடினம். அவை குறைக்கப்பட வேண்டும்” என இலங்கை வீரர்கள் எதிர்நோக்கும் காயங்கள் மற்றும் உபாதைகளை சமாளிப்பதற்கான தனது யோசனையை சில்வர்வுட் முன்வைத்தார்.
மேலும், இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி பல முக்கியமான போட்டிகளில் தோல்வியடைந்ததற்கு மோசமான களத்தடுப்பு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
‘எமது அணியின் களத்தடுப்பை மேம்படுத்த வேண்டும். அதைப் பற்றி ஊடகங்களுடன் பேச நாங்கள் தயங்க மாட்டோம். இது நாங்கள் மறைக்க முயற்சிக்கும் விடயமல்ல. நாங்கள் ஏற்கனவே மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு பகுதி தான் களத்தடுப்பு’
மேலும், அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளதாகவும், அது இலங்கைக்கு சாதகமான சூழ்நிலையில் நடைபெறும் எனவும் சில்வர்வுட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
‘அங்குள்ள நிலைமைகளை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம். அது எங்களுக்கு உதவும். ஆனால் நாம் மேலும் கட்டியெழுப்பப்பட வேண்டும். களத்தடுப்பை மேம்படுத்த வேண்டும். நாடு திரும்பிய பிறகு எல்லாவற்றையும் மதிப்பாய்வு செய்ய வேண்டும். அதன்படி, நாம் மேம்படுத்த வேண்டிய விடயங்களைப் பற்றிய புரிதலைப் பெற வேண்டும்’ என தெரிவித்தார்.
T20 உலகக் கிண்ணத்தில் ஆடும் குடியேறிய வீரர்கள்
இதேவேளை, இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்களில் குசல் மெண்டிஸ் மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க ஆகியோரின் துடுப்பாட்டத் திறமைகள் குறித்தும் சில்வர்வுட் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
‘குசலின் துடுப்பாட்டம் தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர் தான் இலங்கை சார்பில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் பெத்தும் நிஸ்ஸங்கவும் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறார். இது அவருக்கு எளிதான பணி அல்ல. ஆனால், அவர் கடினமாக உழைக்கிறார். ஒரு நோக்கத்துடன் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் எவ்வளவு ஓட்டங்களைப் பெறுகிறாரோ, அந்தளவு தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
எமது முன் வரிசை துடுப்பாட்டம் தொடர்பில் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அடைகிறேன். மத்திய வரிசை வீரர்களுக்கு விரைவாக ஓட்டங்களை எடுப்பதற்கு களம் அமைத்து கொடுத்தனர். அவர்கள் தங்கள் துடுப்பாட்ட திறமைகளை மேம்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
மற்ற அணிகளைப் போல அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் எங்களிடம் இல்லை. எனவே சரியான இடங்களில் பந்தை அடித்து ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நமக்கு எது பொருத்தமானது என்பதைப் புரிந்துகொண்டு அதை மேம்படுத்த முயற்சிக்கிறோம்” என குறிப்பிட்டார்.
இது தவிர, கடந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய வனிந்து ஹஸரங்க, இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்திலும் அதிக விக்கெட் வீழ்த்தியவராக இடம்பெற்றுள்ளார். இதுதொடர்பில் சில்வர்வுட் பதிலளிக்கையில்,
‘வனிந்து போட்டியை வென்று கொடுப்பவர். அப்படித் தானே? அவர் விளையாடுவதைப் பார்க்க நீங்கள் பணம் செலுத்தி மைதானத்துக்கு வருவீர்கள். அவர் ஒரு நல்ல வீரர்’ என்றார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<