தென்னாபிரிக்க வீரர் அன்ரிச் நோர்ட்டிச் மற்றும் அவுஸ்திரேலிய வீரர் ஜெய் ரிட்சர்ட்சன் ஆகியோர் உபாதை காரணமாக இரு அணிகளினது உலகக் கிண்ண குழாமிலிருந்து வெளியேற்றப்பட்டு மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகும் காகிஸோ ரபாடா
ஐ.பி.எல். தொடரில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் தென்னாபிரிக்க…
கிரிக்கெட் உலகில் கிரிக்கெட் இரசிகர்கள் எல்லோராலும் எதிர்பார்க்கப்படும் ஒரு தொடராக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடாத்தப்படும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் காணப்படுகின்றது. கிரிக்கெட் விளையாட்டை விளையாடுகின்ற அனைத்து நாடுகளினதும் கனவாக இது அமைந்திருக்கின்றது.
இவ்வாறான நிலையில் 12ஆவது ஐ.சி.சி உலகக் கிண்ண தொடர் இன்னும் மூன்று வாரங்களில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை நடைபெறவுள்ள உலகக் கிண்ண தொடரில் மொத்தமாக பத்து அணிகள் பங்குபற்றுகின்றன. குறித்த பத்து அணிகளினதும் குழாம் கடந்த மாதம் இறுதியளவில் வெளியிடப்பட்டு தற்போது ஒவ்வொரு அணிகளும் அதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில் ஒவ்வொரு அணி வீரர்களும் தங்களுக்கான பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்ற போது வீரர்கள் உபாதைக்குள்ளாகுவது அணிக்கு பாரிய இழப்பாக காணப்படுகின்றன.
தென்னாபிரிக்க அணியின் உலகக் கிண்ண தொடருக்கான குழாம் கடந்த மாதம் 18ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. இதில் இறுதியாக நடைபெற்றிருந்த இலங்கை அணியுடனான தொடரில் அறிமுகமாகி அசத்தியிருந்த வேகப்பந்துவீச்சாளர் அன்ரிச் நோர்ட்டிச் வெறும் நான்கு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியிருந்த நிலையில் தென்னாபிரிக்க அணியின் உலகக் கிண்ண குழாமில் இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில் உலகக் கிண்ண தொடருக்கான வலைப்பயிற்சிகளில் தென்னாபிரிக்க ஈடுபட்டிருந்த போது கடந்த திங்கட்கிழமை (06) அன்ரிச் நோர்ட்டிச்சிற்கு பெருவிரலில் முறிவு ஏற்பட்டிருந்தது. பின்னர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவர் குறித்த உபாதையிலிருந்து மீண்டு வருவதற்கு குறைந்தது எட்டு வாரங்கள் தேவைப்படும் என தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் மருத்துவர் தற்போது தெரிவித்துள்ளார். இந்த வருட ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக இவர் இடம்பெற்றிருந்தாலும், தோள்பட்டை உபாதை காரணமாக ஆரம்பத்திலேயே விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, இவரின் வெற்றிடத்திற்காக பந்துவீச்சு சகலதுறை வீரரான 32 வயதுடைய கிறிஸ் மொரிஸ் மாற்றுவீரரான குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். 34 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 35 விக்கெட்டுகளையும், துடுப்பாட்டத்தில் 393 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
உலகக் கிண்ண வரலாற்றை பேசும் ஹெட்ரிக்-விக்கெட்டுகள்!
சர்வதேச கிரிக்கெட்டில் நிகழ்த்தப்படும் சாதனைகள் கிரிக்கெட் இரசிகர்கள்…
இதேவேளை, தென்னாபிரிக்க அணியின் உலகக் கிண்ண குழாமில் இடம்பெற்றிருந்த வேகப் பந்துவீச்சாளர்களான டேல் ஸ்டைன் மற்றும் ககிஸோ ரபாடா ஆகியோர் ஐ.பி.எல் தொடரில் உபாதைக்குள்ளாகியிருந்தனர். இவர்கள் இருவரும் தற்போது கேள்விக்குறியான நிலையிலேயே காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியிலும் உபாதைக்குள்ளான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வேகப் பந்துவீச்சாளரான ஜெய் ரிட்சர்ட்சன் கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியின் போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த வேளையில் தோள்பட்டை உபாதைக்குள்ளாகியிருந்தார். இருந்தாலும் இவர் குணமடைவார் என்ற நம்பிக்கையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையானது கடந்த மாதம் 14ஆம் திகதி வெளியிட்ட உலகக் கிண்ண குழாமில் ஜெய் ரிச்சர்ட்சனுக்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.
இந்நிலையில் தற்போது அவுஸ்திரேலிய அணி வலைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இதன் போது ஜெய் ரிச்சர்ட்சன் முழுமையாக உபாதையிலிருந்து மீளாதது பயிற்றுவிப்பாளர் மூலமாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இவருக்கு பதிலாக. 28 வயதுடைய வேகப் பந்துவீச்சாளரான கேன் வில்லியம்சன் மாற்று வீரராக பெயரிடப்பட்டள்ளார்.
2013ஆம் ஆண்டு இலங்கை அணியுடன் நடைபெற்ற போட்டியில் ஒருநாள் அறிமுகம் பெற்று அவுஸ்திரேலிய அணிக்காக 20 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன் 29 ஒருநாள் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
மேலும், இங்கிலாந்து குழாமிலிருந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அலெக்ஸ் ஹெல்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளார். அவரின் வெற்றிடத்துக்காக எதிர்பாக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகளை பிறப்பிடமாக கொண்ட சகலதுறை வீரரான ஜொப்ரா ஆர்ச்சர் குழாமில் இணைத்துக்கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, ஐ.பி.எல் தொடரின் போது இந்திய அணியின் மத்தியவரிசை சகலதுறை வீரரான கேதார் யாதவ் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த வேளையில் தோள்பட்டை உபாதைக்குள்ளாகியிருந்தார். இதனால் அவர் ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து வெளியேறியிருந்தார். இந்திய அணியின் உலகக் கிண்ண குழாமில் இவர் இடம்பெற்றுள்ளமையால் தற்போது இவர் குறித்த தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. இவ்வாறு யாதவ் தவறும் பட்சத்தில் மாற்று வீரராக அம்பத்தி ராயுடு குழாமில் இணைத்துக்கொள்ளப்படுவார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<