69 பந்துகளில் 18 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்

729

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 5ஆவது பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) T-20 தொடரின் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் சிக்ஸர் மழை பொழிந்து சதமடிக்க, மஷ்ரபி முர்தஷா தலைமையிலான ராங்பூர் ரைடர்ஸ் அணி முதற்தடவையாக தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றது.

பங்களாதேஷ் பிரீமியர் லீக் T-20 தொடரில் ராங்பூர் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனான டாக்கா டைனமைட்ஸ் அணியை நேற்று(12) எதிர்கொண்டது.

பெரேராவின் அதிரடியால் இறுதிப் பந்தில் ராங்பூர் அணிக்கு த்ரில் வெற்றி!

தற்பொழுது நடைபெற்று வரும் 2017/2018 ஆண்டு….

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற டாக்கா டைமண்ட்ஸ் அணித் தலைவர் சகிப் அல் ஹசன் முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தார். இதன்படி மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரர்களான ஜொன்சன் சார்லசும், கிறிஸ் கெயிலும் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர். போட்டியின், இரண்டாவது ஓவரில் ஜொன்சன் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பின் கெயிலுடன் பிரெண்டன் மெக்கல்லம் ஜோடி சேர்ந்தார்.

இதையடுத்து கிறிஸ் கெயில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை தொடங்கி சிக்ஸர் மழை பொழிந்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார். மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய மெக்கல்லம் கெய்லின் அதிரடிக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தார். இதனால் அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒரேயொரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

டாக்கா அணியின் சஹீட் அப்ரிடி, சுனில் நரைன், கார்லஸ் ப்ரத்வெய்ட் மற்றும் சகிப் அல் ஹசன் உள்ளிட்ட நட்சத்திர பந்துவீச்சாளர்களை திக்குமுக்காடச் செய்த கிறிஸ் கெயில் ஆட்டமிழக்காமல் 69 பந்துகளுக்கு முகம்கொடுத்து 146 ஓட்டங்களை குவித்து T-20 அரங்கில் மற்றுமொரு மைல்கல்லை எட்டினார்.

ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்த அவர் 33 பந்தில் அரைச்சதம் கடந்தார். 18 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகளையும் விளாசிய கெய்ல், T-20 போட்டிகளில் தனது 20ஆவது சதத்தை எட்டியதுடன், இத்தொடரில் தனது 5ஆவது சதத்தையும் பூர்த்தி செய்தார். அத்துடன், T-20 அரங்கில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்களை (17 சிக்ஸர்கள்) பெற்றுக்கொண்ட தனது முந்தைய சாதனையையும் அவர் முறியடித்தார்.

டெஸ்ட் அரங்கில் கால்பதிக்கும் ஆப்கானிஸ்தான் முதலில் சந்திக்கும் அணி இந்தியா!

இலங்கை அணி எந்த திசையில் பயணிக்கப்போகிறது…

இதையடுத்து, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டாக்கா டைனமைட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது. அந்த அணிக்காக ஜஹ்ருல் இஸ்லாம் 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடித்து 50 ஓட்டங்களை அதிகட்சமாகப் பெற்றுக்கொண்டார். இதனால் ராங்பூர் ரைடர்ஸ் அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ராங்பூர் அணி சார்பாக பந்துவீச்சில் சொஹாக் காஸி, இலங்கை வீரர் இசுரு உதான மற்றும் நஸ்முல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.  

இவ்வணிக்காக இலங்கை அணியின் லசித் மாலிங்க, இசுரு உதான, திஸர பெரேரா மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் அங்கம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தொடர் மற்றும் ஆட்ட நாயகனாக தெரிவான கிறிஸ் கெய்ல் போட்டிக்குப் பிறகு கருத்து வெளியிடுகையில், ”எனது T-20 வாழ்க்கையில் பெற்றுக்கொண்ட முதல் 5 சதங்களில் இது ஒன்றாகும். அண்மைக்காலமாக என்னால் சிறப்பாக விளையாட முடியாமல் போனது. எனினும், இத்தொடரில் நான் பெற்றுக்கொண்ட அடைவு மட்டங்கள் அவையனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது” எனத் தெரிவித்தார்.

உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்ற T-20 லீக் தொடர்களில் விளையாடி வருகின்ற கிறிஸ் கெய்ல், அண்மைக்காலமாக வெளிப்படுத்திய மோசமான விளையாட்டு காரணமாக அவருக்கு தனது சொந்த அணியான மேற்கிந்திய தீவுகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. எனினும், எதிர்வரும் உலகக் கிண்ணப் போட்டிகளில் நேரடியாக விளையாடும் தகுதியை அவ்வணி இழந்ததையடுத்து மீண்டும் அணிக்குள் திரும்பிய கெய்ல், அண்மையில் நிறைவுக்குவந்த இங்கிலாந்துடனான ஒரு நாள் மற்றம் T-20 தொடரில் களமிறங்கினார்.

இதனையடுத்து எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்து அணியுடனான ஒரு நாள் மற்றும் T-20 தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாமில் இணைக்கப்பட்டுள்ள கெய்ல், அவ்வணிக்காக சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹத்துருசிங்க விலகியதை அடுத்து பங்களாதேஷ் அணிக்கு புதிய தலைவர்

கிரிக்கெட் அரங்கில் அண்மைக்காலமாக…

ஆனால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள 3ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் கிறிஸ் கெய்லை எந்தவொரு அணியும் ஒப்பந்தம் செய்யவில்லை. எதிர்வரும் மார்ச் மாதம் ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியில் கிறிஸ் கெய்ல் விளையாடவுள்ளதால், அவரை ஒப்பந்தம் செய்வதை அனைத்து அணிகளும் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் கிறிஸ் கெயில் நிகழ்த்திய சாதனைகள்

T-20 அரங்கில் அதிக சிக்ஸர்களை விளாசிய முதல் வீரராக மாறினார். முன்னதாக 2013ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் புனே வொரியர்ஸ் அணிக்கெதிராக 17 சிக்ஸர்களை விளாசி கெய்ல் சாதனை படைத்தார். எனினும் 16 சிக்ஸர்களை விளாசிய இலங்கை வீரர் தசுன் சானக்க அடுத்த இடத்தில் உள்ளார்.  

T-20 கிரிக்கெட்டில் 11,000 என்ற மைல்கல்லை தொட்ட முதல் வீரர்.

T-20 கிரிக்கெட்டில் 20 சதங்கள் அடித்து அசத்தியவர்

மொத்தம் 819 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தவர். 509 சிக்ஸர்களுடன் பொல்லார்ட் 2ஆவது இடத்தில் உள்ளார்.

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் 11 போட்டிகளில் 47 சிக்ஸர்கள் அடித்தவர்.

5 – பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் 5 சதங்களை குவித்த முதல் வீரர்.

T-20 இறுதிப் போட்டியில், மெக்கலமுடன் இணைந்து 201 ஓட்டங்களை இணைப்பாட்டமாக எடுத்து சாதனை படைத்துள்ளார்.  

T-20 இறுதிப் போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்த முதல் வீரர்.

இதேவேளை, T-20 அரங்கில் சாதனைக்கு மேல் சாதனை படைத்துவரும் கிரிக்கெட் உலகின் சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்லுக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருசிலவற்றை கீழே பார்க்கலாம்.