மேற்கிந்திய தீவுகள் அணியின் உப தலைவராக கிரிஸ் கெயில்

253

இங்கிலாந்தில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் உப தலைவராக அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெயில் நியமிக்கப்பட்டுள்ளார். 

இம்முறை உலகக் கிண்ணம் குறித்து குமார் சங்கக்கார

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும்..

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெயில், இந்த உலகக் கிண்ண தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார். இறுதியாக நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரின் போது இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இதன்படி, தனது இறுதி உலகக் கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள கிரிஸ் கெயில், மேற்கிந்திய தீவுகள் அணியின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக சகலதுறை வீரர் ஜேசன் ஹோல்டர் செயற்படவுள்ள நிலையில், அவருடன் இணைந்து உப தலைவராக கிரிஸ் கெயில் செயற்படவுள்ளார்.

உலகக் கிண்ணத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிக அனுபவம் வாய்ந்த வீரராக கிரிஸ் கெயில் உள்ளார். இவர், மேற்கிந்திய தீவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 289 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,151 ஓட்டங்களை குவித்துள்ளார். அத்துடன், 2015ம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியின் போது, 215 ஓட்டங்களை விளாசியிருந்தார். இந்த ஓட்ட எண்ணிக்கையானது மேற்கிந்திய தீவுகள் அணிக்காக துடுப்பாட்ட வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, கிரிஸ் கெயில் இதற்கு முன்னர் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக செயற்பட்டுள்ளார். இறுதியாக இவர், 2010ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவராக செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணி நாளை இங்கிலாந்து பயணம்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில்…

உலகக் கிண்ணத் தொடருக்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள உப தலைவர் பதவி குறித்து கிரிஸ் கெயில் குறிப்பிடுகையில், “மேற்கிந்திய தீவுகள் அணிக்காக எந்தவொரு போட்டியில் விளையாடுவதையும் நான் பெருமையாக நினைக்கிறேன். அதுவும் இம்முறை நடைபெறவுள்ள உலகக் கிண்ண தொடர் எனக்கு மிகவும் விஷேடமான ஒன்று.

அதேநேரம், அணியில் உள்ள அனுபவம் வாய்ந்த வீரர் என்ற ரீதியில் அணித் தலைவர் மற்றும் அணி வீரர்களுக்கு பங்களிப்பு வழங்குவது எனது கடமையாகும். இந்த உலகக் கிண்ண தொடர் மிகவும் சிறந்த உலகக் கிண்ணமாக அமையும் என எதிர்பார்க்கிறேன். அத்துடன், மேற்கிந்திய தீவுகளில் உள்ள மக்களுக்காக நாம் சிறப்பாக விளையாடுவோம்” என்றார்.

இதேவேளை, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் உப தலைவராக ஷேய் ஹோப் தெரிவுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<